
கரோனா காரணமாக மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையில் மறுபடியும் ஒரு மோசடி நடைபெற்று வருகிறது என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள். கரோனாவால் ஜூலை மாதத்தில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 285 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 55 ஆயிரத்து 152 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் கடந்த 28ஆம் தேதி அன்று 12,852 பேர் சிகிச்சை பெற்றனர். அதில் தற்பொழுது 12 ஆயிரம் பேர்தான் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை மிகவும் குறைந்து கொண்டே வருகிறது.
சென்னையில் மட்டும் இதுவரை 90 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் 4,349 பேர் கரோனாவில் பலியாகி உள்ளனர். இதில் சென்னையில் 2,202 பேர் பலியாகி உள்ளனர் என்கிறது தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிக்கை.
இந்த அறிக்கையின்படி பார்த்தால் தமிழகம் முழுவதும் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 1.6 சதவிகிதம் பலியாகியிருக்கும் சூழ்நிலையில் சென்னையில் 2.6 சதவிகிதம் பேர் பலியாகி இருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் சென்னையில் கடந்த ஒரு மாதமாக நாள்தோறும் வெறும் ஆயிரம் பேர்தான் கரோனாவில் பாதிக்கப்பட்டார்கள் என அரசு தொடர்ந்து அறிவித்து வந்தது.
அதே நேரத்தில் சென்னையைச் சுற்றிலும் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 500 புதிய கரோனா நோயாளிகள் எண்ணிக்கை கூடியிருந்தது. ஆக மொத்தம் கணக்கிட்டால் 2,500 வரும். இந்த 2,500 என்பது சென்னை நகரில் மட்டும் தினசரி கணக்கிடப்பட்ட கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை. ஆகச் சென்னையில் வரக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கையை மற்ற மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் பகிர்ந்து அளித்து சென்னையில் நோயாளிகள் குறைவு எனத் தெரிவித்து வருகிறார்கள் என்கிறார்கள் நேர்மையான சுகாதாரத்துறை அதிகாரிகள்.

கரோனா என்பது ஜெயலலிதாவுக்கு வந்த sepsis என்கிற அனைத்து உறுப்புகளையும் செயலிழக்க வைக்கும் நோய் போன்றது. அது ஒரு மனிதனை எவ்வளவு தாக்குகிறது என்பதைப் பொறுத்து அதன் வீரியம் இருக்கும். ஒருவரை ஒன்று முதல் பத்து வரையிலான அளவு கரோனா வைரஸ் தாக்குமானால் அவருக்கு நோய் வந்த அறிகுறியே தெரியாது. மருந்தில்லாத இந்த நோய் வந்தது தெரியாமல் அவரை விட்டுச் சென்றுவிடும். பத்து முதல் அறுபது வரை வலுவுள்ள கரோனா நோய்க் கிருமிகள் தாக்குமானால் அவருக்கு கரோனா நோய்க்கான அனைத்து வித அறிகுறிகளும் தெரியும். 60இல் இருந்து 100 வரையிலான அளவு கரோனா நோய்க் கிருமிகள் ஒருவரை தாக்குமானால் அவருக்கு ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டதைப்போல் sepsis என்கிற நிலை உருவாகும். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் கரோனா நோய் பதம் பார்க்கும்.
60க்கும் மேல் கரோனா கிருமிகளால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்தாலும் இதயம், நுரையீரல், கல்லீரல் போன்றவற்றைத் தாக்கி அழித்த கரோனா நோய்க் கிருமிகள் ஏற்படுத்திய பக்க விளைவு மாறாது இருக்கும். அப்படிப்பட்டவர் கரோனா சிகிச்சை முடிந்து வெளியே சென்றாலும் கரோனா கிருமிகள் ஏற்படுத்திய சேதாரத்தால் மரணம் அடைவார்.
தமிழகத்தில் கரோனா நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியே சென்ற பிறகு மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2019ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் ஏற்பட்ட மரணத்தைவிட 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மரணங்களின் எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகம். இதைக் கண்காணிப்பதற்கு எந்த ஏற்பாடும் தமிழகத்தில் இல்லை. அண்டை மாநிலமான கேரளாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றவர்களைக் கண்காணிப்பதற்கு என்றே ஒரு சிறப்பு ஏற்பாடு ஒன்றை கேரள அரசு செய்துள்ளது.

அவர்களது கணக்குப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு சென்றவர்கள் மறுபடியும் கரோனாவால் தாக்கப்படுகிறார்களா? அல்லது மரணம் அடைகிறார்களா? எனக் கண்காணிக்கும் கேரள அரசு அவர்கள் மரணம் அடைந்தால் அதையும் கரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்ட மரணமாகவே கணக்கிடுகிறது. வளர்ந்த நாடுகளான அமெரிக்காவிலும், கரோனா நோய் முதலில் தாக்கிய சீனாவிலும் மறுபடியும் கரோனா நோய் வருகிறதா எனக் கண்காணிக்கிறார்கள் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களையும் கண்காணிக்கிறார்கள். இவை எதுவும் தமிழகத்தில் இல்லை. அத்துடன் நோய் எண்ணிக்கை மிகவும் குறைந்ததாகச் சொல்லப்படும் சென்னையில் இறப்பு சதவிகிதம் மட்டும் அதிகமாக இருப்பதன் காரணம் என்ன?
நோய் எண்ணிக்கை குறைவாக இருந்தால் இறப்பு சதவிகிதமும் குறைவாகவே இருக்க வேண்டும். நோய் எண்ணிக்கையை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கும் அதிகாரிகளால் இறப்பு சதவிகிதத்தைப் பகிர்ந்து அளிக்க முடியவில்லை.

இறப்பு என்பது மாநகராட்சி, வருவாய்த்துறை உள்பட பல அரசு துறைகளில் பதிவாகும் என்பதால் சுகாதாரத்துறை மட்டும் கணக்கிடும் நோயாளிகளின் எண்ணிக்கை, இறந்தவர்களின் எண்ணிக்கையோடு ஒட்டாமல் வித்தியாசமாக இருக்கிறது என்கிறார்கள் நேர்மையான சுகாதாரத்துறை அதிகாரிகள்.
இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், "தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. அதேபோல் நோய்த் தொற்றும் பெரிய அளவிற்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் கரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் கரோனா பரிசோதனை பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் தொற்று பரவல் தொடங்கியுள்ளது என்பது தெரிய வந்துள்ளது'' என்கிறார்.
மேலும் "கரோனா சாவுகளை மறைப்பது என்பது தவறு. இதே தவறு, கரோனா தாக்குதலின் தொடக்கத்திலும் நடந்தது. அதற்குக் காரணம், ஐ.சி.எம்.ஆர். எனப்படும் மத்திய அரசு நிறுவனம் கொடுத்த மரணம் குறித்த அளவீடுகளில் ஏற்பட்ட குழப்பம்தான். கரோனா பாதித்து குணமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை நாங்களும் கண்காணித்துதான் வருகிறோம். அவர்களில் சிலர் இறப்பது பற்றியும் கணக்கெடுத்து வருகிறோம்'' என்கிறார். ஏற்கனவே ஐ.சி.எம்.ஆர். கொடுத்த வழிகாட்டுதலின்படி கரோனா மரணங்களைக் கணக்கெடுக்க தமிழக அரசு தவறியது.

பீலா ராஜேஷ் சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளராக வந்த பிறகு சுமார் 450 மரணங்களை நாங்கள் சரியாகக் கணக்கிடவில்லை. அவை கரோனாவால் ஏற்பட்ட மரணங்கள் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒப்புக்கொண்டார். மறைக்கப்பட்ட அந்த மரணங்களை தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழுதான் கண்டுபிடித்துச் சொன்னது.
இஸ்ரேல் என்கிற பெரிய நாட்டில் இதுவரை ஏற்பட்ட கரோனா மரணங்களின் எண்ணிக்கை 450. ஒரு பெரிய நாட்டில் ஏற்பட்ட மொத்த மரணங்களின் அளவிற்கான எண்ணிக்கையை நாங்கள் சரியாகக் கணக்கில்லாமல் விட்டுவிட்டோம் எனத் தமிழக அரசு அறிவித்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கரோனா விஷயத்தில் உண்மையான எண்ணிக்கைகள் மறைக்கப்படுகிறது. நோய்த் தொற்றைக் கண்டுபிடிப்பதில் தொடங்கி மரணம் வரை ஒரு மர்ம முடிச்சாகவே தமிழகத்தில் கரோனா சிகிச்சை இருக்கிறது என்கிறார்கள் நேர்மையான சுகாதாரத்துறை அதிகாரிகள்.