Skip to main content

“எனது மனைவியையும் மோசமாகப் பேசினார்கள்... பாய்சன் குடிச்சிட்டேன் மச்சான்...” போலீஸ் டார்ச்சரால் டாக்டர் தற்கொலை

Published on 18/11/2020 | Edited on 18/11/2020
hhhh

 

குமரி மாவட்டம் பறக்கை இலந்தைவிளையைச் சேர்ந்த தி.மு.க. மருத்துவரணி மா.து. அமைப்பாளர் சிவராம பெருமாளின் தற்கொலை கன்னியாகுமரியையும் அம்மாவட்ட தி.மு.க.வினரையும் ஒருசேர அதிரவைத்துள்ளது.

 

சிவராமபெருமாள் விஷம் குடிப்பதற்கு சற்றுமுன் தன்னுடைய மைத்துனரிடம் பேசிய ஒரு நிமிட ஆடியோவில், ""நான் சாகப்போறேன் இனி யாரு நெனச்சாலும் என்னைக் காப்பாத்த முடியாது. டி.எஸ்.பி. டார்ச்சரால் நான் சாகப்போறேன். நான் பாய்சன் குடிச்சிட்டேன் மச்சான்''’என கூறியிருக்கிறார். கடிதத்தில்... ""கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன் “என்னை தினமும் டார்ச்சருக்கு மேல் டார்ச்சர் செய்தார். "நீ ஏன் இன்னும் சாகவில்லை நீயாகச் சாகவில்லை என்றால் நானே உன்னை சாகடித்துவிடுவேன்' என மிரட்டினார். டி.எஸ்.பி.யோடு சேர்ந்து விஜய் ஆனந்தும் என்னையும் எனது மனைவியையும் மோசமாகப் பேசினார்கள். இவர்களின் மிரட்டலால்தான் சாகிறேன்''’என எழுதியிருந்தார்.

 

எதற்காக டி.எஸ்.பி. பாஸ்கரன் சிவராமபெருமாளை மிரட்டவேண்டும்? மனைவி சீதாவிடம் பேசினோம்... ""ஜூலை 12-ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு நான் கோவிட் டூட்டி முடிச்சிட்டு கணவரோடு சொத்த விளை வழியாக காரில் வந்துகொண்டிருந்தோம். அப்போது எதிரேவந்த வாகனம் லைட் அடிச்சுக் கொடுத்ததால் பதிலுக்கு கணவரும் லைட் அடிச்சுக் கொடுத்து காரின் வேகத்தைக் குறைத்தார். உடனே அந்த வாகனத்திலிருந்து கீழே இறங்கிய வர், "போலீஸ் அதிகாரி வாகனத்துக்கே லைட் அடிக்கிறியா'னு கெட்டவார்த்தை பேசினார். இதற்கு எனது கணவர் எதுவும் பேசாததால் "நான் அரசு மருத்துவர், கோவிட் டூட்டி முடிஞ்சி போறேன்'னு சொன்னதுக்கு என்னையும் "கவர்மெண்ட் டாக்டர் எப்படிப்பட்டவங்கனு தெரியும்'னு கெட்ட வார்த்தையால் மோசமாகத் திட்டியதோடு, கணவரைப் பார்த்து "உனக்கு வச்சிருக்கேன்'னு மிரட்டும் தொனியில் பேசினார்.

 

hhh


  
இதனால் அடுத்தநாள் என் உயரதிகாரிக்கு தகவலைச் சொல்லிவிட்டு நான் கன்னியாகுமரி டி.எஸ்.பி.யிடம் புகார் கொடுக்கப்போனேன். அங்கு சென்றதும் எங்களை மிரட்டியவர்தான் டி.எஸ்.பி. என்பது தெரியவர... அதிர்ச்சியடைந்தேன். “""போலீஸ் மேலயே கம்ப்ளைண்ட் கொடுக்க வாறியா? வா முதலில் உன் புருஷன் மேல கேஸ் போடனும். உன்னையும் தூக்கி உள்ள வைக்கிறேன்''னு மிரட்டினார். இதனால் நான் திரும்பி வந்துட்டேன்''’என்றார்.

 

இந்த விவகாரத்தில் அடிபடும் விஜய்ஆனந்த், கன்னியாகுமரி டி.எஸ்.பி.யிடம் மட்டுமல்ல மாவட்டத்திலுள்ள முக்கிய உயரதிகாரிகளின் நிழலாகவே இருக்கிறார். இவர் குறித்து ஏற்கனவே நக்கீரன் ஆக.29 செப்.1 இதழில் "விபச்சார புரோக்கருக்கு சல்யூட் அடிக்கும் காக்கிகள்'’என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

இந்தநிலையில் விஜய்ஆனந்தும் டி.எஸ்.பி.யும் எதற்காக மருத்துவர் சிவராமபெருமாளை மிரட்டினர் என்பது குறித்து கன்னியாகுமரி போலீஸ் சோர்ஸிடம் பேசினோம். ""விஜய் ஆனந்த் பெரிய புரோக்கர். மசாஜ் சென்டரும் வச்சிருக்கார். கன்னியாகுமரியில் அவனே அறை எடுத்துக் கொடுத்து துட்டுள்ள வி.ஐ.பி.களை வரவழைச்சி அழகி களையும் செட் பண்ணிக் கொடுத்திட்டு பிறகு அதை டி.எஸ்.பி.கிட்ட போட்டும் கொடுத்துடுவான்.

 

டி.எஸ்.பி. இதுக்குனு ஒரு டீம் வச்சிருக்கார். அந்த டீம் சம்பந்தப்பட்டவங்களைப் பார்த்துப் பேசி லட்சங்களில் கறந்து விடுவார்கள். மருத்துவர் சிவராமபெருமாளும் கன்னியாகுமரிக்கு மசாஜுக்குச் சென்றதாகவும்... அங்கு இந்த டீமிடம் மாட்டி 10 லகரம் பேசி கடைசியில் 6 லகரத் தில் முடிஞ்சதாம். அதைக் கொடுக்காமல் சிவராமபெருமாள் இழுத்தடித்ததால்தான் டி.எஸ்.பி. மிரட்டி வந்திருக்கிறார்'' என்றனர்.

 

hhh

 

சிவராமபெருமாளின் மைத்துனர், முனைவர் ஜெய்குமார் கூறும்போது... ’’""டி.எஸ்.பி.யைக் காப்பாற்ற காவல்துறையினர் முயற்சி செய்துவருகிறார்கள். "அந்தக் கடிதத்தை சிவராமபெருமாள் எழுதவில்லை, நீதான் எழுதியிருக்கிறாய். ஒரிஜினலைத் தா' என்று சிவராமபெருமாளின் மனைவியை சுசீந்திரம் காவல்நிலைய இன்ஸ்பெக்டா? மீனா, எஸ்.ஐ. ஆறுமுகம் மிரட்டியிருக்கிறார்கள். டி.எஸ்.பி. மீதும் விஜய்ஆனந்த் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். டி.எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்து விசாரணை நடத்தவேண்டும்''’என்றார்.

 

இதுகுறித்து டி.எஸ்.பி. பாஸ்கரனிடம் நாம் கேட்டபோது, “""எனக்கு சிவராமபெருமாள் எப்படி இருப்பார், அவர் யாரென்றுகூட தெரியாது''’என ஒரே போடாகப் போட்டார்.

 

தி.மு.க. மருத்துவரணியைச் சேர்ந்தவர் சிவராம பெருமாள் என்பதால் மு.க.ஸ்டாலின் வரை இந்த விவகாரம் சென்று, கண்டனக் குரல் வெளிப்பட்டது.