விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த தின பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பிரபாகரன் குறித்து பேசினார். அவரின் பேச்சு வருமாறு,
"குறிஞ்சி நிலத் தலைவன், தமிழின இறைவன் என்று முருகன் பெருமான் படத்தை மக்கள் மனதில் நான் நிருவி விட்டேன். எனவே நீங்கள் என்ன வேல் எடுத்துக்கொண்டு சுத்தினாலும் நாங்கள் கொண்டுவந்த படம்தான் ஓடும். எங்கள் ஞாபகம்தான் அவர்களுக்கு இருக்கும். அதுபோல தமிழ் பேரினத்தின் தலைவன் பிரபாகரன் என்று இந்த சீமான் ஏற்றுக்கொள்ள வைப்பேன். அது நடக்காமல் இருக்காது. இப்போது யாரும் தமிழினத்தின் தலைவர் கருணாநிதி என்று யாரும் சொல்வதில்லையே? யாரையாவது சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். கட்சிக்கு வேண்டுமானால் தலைவன் என்று சொல்லிக்கொண்டு சுத்துங்கள். ஆனால் இனத்தின் தலைவன் என்று யாரும் சொல்லிக்கொண்டு சுத்தக்கூடாது.
தலைவன் என்றால் பெத்த பிள்ளைகளுக்கு பதவி கேட்டு அலையக்கூடாது, பிள்ளைகளையும் போர்களத்தில் பலியிட்ட தலைவனாக இருக்க வேண்டும். அவ்வாறு என் தலைவன் பிரபாகரன் இருக்கிறார். எனவே அவர் ஒருவரே தலைவன் என்ற சொல்லுக்கு தகுதியான நபராக இருக்க முடியும். என்னயே சிலர் கேட்கிறார்கள், சீமானிசம் என்று கூறுகிறீர்கள், ஆனால் பிரபாகரனிசம் என்று ஏன் வரவில்லை என்று கேட்கிறார்கள். பிரபாகரனிசம் ஏன் வரவில்லை என்று கேட்க வைத்ததே இந்த சீமானிசத்தின் வெற்றிதான். அதனால்தான் நாங்கள் பிரபாகரனின் பிள்ளை. நாங்கள் வைக்கிற புகைப்படத்தை எல்லாம் கிழிக்கிறார்கள். எங்கள் தம்பிகள் எங்களிடம் வந்து அண்ணன் புகைப்படத்தை முடக்குகிறார்கள் என்று புலம்புகிறார்கள்.
கொஞ்ச நாள்தான் தானே முடிக்குவார்கள், முடக்கட்டும். நீங்கள் மடக்கியும், ஒடுக்கியும் வைக்க நாங்கள் குடை இல்லை. மானத்தமிழர் படை என்பதை அவர்கள் விரைவில் உணர்வார்கள். என்னை நீ தடுக்கலாம், என்னை நீ முடக்கலாம், ஆனால் இந்த மண்ணில் நான் முன்வைத்த அரசியலை யாராலும் மறுக்க முடியாது. யாராலும் நினைக்க முடியாத மாற்று அரசியலை நாங்கள் முன்வைத்துள்ளோம். துணிவோடு இருங்கள், நம்பிக்கையை இழக்க தேவையில்லை. காலத்தை உருவாக்கிய தலைவனின் பிள்ளைகள் நாம். எனவே அச்சம் தேவையில்லாத ஒன்று. விரைவில் நமக்கான காலம் வரும். கையறு நிலையில் நம்மை விட்டுவிட்டு நம் தலைவன் செல்லவில்லை. நமக்கு தேவையானதை கற்பித்துவிட்டுத்தான் சென்றுள்ளார்.
அவர் விரல் நீட்டிய திசையில் நாம் பாய்வோம். நமக்கான விடுதலை நிச்சயம் இருக்கிறது. அதில் எள் முனையளவு கூட சந்தேகம் வேண்டாம். தமிழ்நாட்டின் முதல்வர் நாற்காலியில் நாம் அமர்ந்திடுவோம், அதன் பிறகு சிங்களவன் நிம்மதியாக தூங்கிடுவானா? அவனே சொல்கிறான். பிரபாகரனை விட ஆபத்தானவன் ஒருவன் வளர்ந்து வருகிறான் என்று. அனைத்தையும் விட்டுவிடுவோம். வருகிற தேர்தல் நமக்கு போர்க்களம், இறங்கி அடிப்போம். பயமா இருக்கா, முருகா, முருகா என்று சொல்லுங்கள். அதை பாஜக நபர்களும் சொல்கிறார்களா? சரி விடு, தனியாக அமர்ந்துகொள், பிரபாகரன், பிரபாகரன் என்று தனியாக அமர்ந்து சொல்லுங்கள், முருகனும், பிரபாகரனும் ஒன்றுதான். அதை கூறினால் நாடி நரம்பெல்லாம் முறுக்கேறிவிடும். எதையும் சாதிக்க வேண்டும் என்ற வெறி பிறக்கும். எனவே வரும் தேர்தல் நமக்கானது" என்றார்.