Skip to main content

ஆளுங்கட்சி கொறடாவால் அல்லாடும் கிராம மக்கள்!

Published on 11/11/2020 | Edited on 11/11/2020

னிமவள குவாரிகளாலும் சுரங்கங்களாலும் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு வழங்கப்படும் நிதியை, தன் செல்வாக்கால் ஆளுங் கட்சி கொறடா தங்கள் பகுதிக்கு திருப்பிவிட்டார்' என்ற குற்றச்சாட்டு செந்துறை பகுதி மக்களிடம் குமுறலாய் வெடித்துக்கொண்டிருக்கிறது.

village

"சுரங்கத்துறை மற்றும் கனிமவளத்துறை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்களும் தொழிற்சாலை களும், தாங்கள் எடுக்கும் கனிமவளங்களின் அடிப்படையில் ராயல்டி ஒதுக்கவேண்டும் என்பது விதி.

இந்த நிதியை அவர்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் செலுத்த வேண்டும். அந்த நிதியில் இருந்து சம்பந்தப்பட்ட சுரங்கப்பகுதியில் உள்ள, பாதிக்கப்பட்ட கிராமப்புற, ஊராட்சிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றச் செலவிடவேண்டும். இதன்மூலம் கிராம சாலைகளை சரிசெய்தல், பழுதான பள்ளிக் கட்டிடங்களைப் புனரமைத்தல், குடிநீர் வசதி, சாக்கடை வசதி செய்தல், பொதுமக்களுக்கான கழிப்பிட வசதியை ஏற்படுத்தித் தருதல் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றிட வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
village
இந்த அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட கனிமவளத்துறை, கருவூல அலுவலர் உள்ளிட்ட 14 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுதான் அந்த நிதியை சம்பந்தப்பட்ட கிராமப்புறங்களின் தேவைகளுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்து பணிகளை நடத்தவேண்டும்.

ஆனால் இப்படிப்பட்ட அமைப்பு இருப்பதும் நிதி ஒதுக்கீட்டுக்கு வாய்ப்பு இருப்பதும் பலருக்கும் வெளிப்படையாகத் தெரியவில்லை'' என்கிறார் அரியலூர் மாவட்டம் செந்துறை தி.மு.க ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி. இது குறித்து அவர் மேலும் கூறும்போது, ’’""எங்கள் மாவட்டத்தில் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இவைகளுக்கு தேவையான லைம்ஸ்டோன் எனப்படும் சுண்ணாம்புக் கற்கள் பல ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் வெட்டியெடுக்கப்படுகின்றன. கம்பெனிகள் மூலம் எங்கள் மாவட்டத்திற்கு மட்டும் 30-6-2020 வரை செலுத்தியுள்ள ராயல்ட்டி தொகை 136 கோடி ரூபாய் ஆகும். இதில் மாவட்டத்திலேயே மிக அதிக அளவில் சுரங்கப் பகுதிகள் எங்கள் செந்துறை ஒன்றியத்தில் செயல்படுகின்றன. அவைகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை 70 கோடி ரூபாய், தமிழ் நாடு கனிமநிதி சட்டம் 2017-ன் படி சுரங்கங் களால் பாதிக்கப்படும் பகுதி மக்களுக்கான அடிப்படை தேவைகளை செய்துகொடுக்க பயன் படுத்த வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. ஆனால் செந்துறை ஒன்றியத்திற்காக ஒதுக்கப் பட்ட தொகையை அரியலூர் எம்.எல்.ஏ.வும், அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன், தமது தொகுதிக்கு அதிகாரிகள் துணையோடு அந்த நிதியை மடைமாற்றம் செய்திருக்கிறார்.

இதன் மூலம் எங்கள் பகுதி வஞ்சிக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து அதிகாரிகள் நிதி செலவினங்கள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிடவேண்டும். எங்கள் ஒன்றியத்தில் 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. அதில் குறிப்பாக கோட்டைக்காடு, முதுகுளம், இருங்களாக்குறிச்சி, ஆதனக்குறிச்சி, தெத்தோரி, ஆகிய பகுதிகளில் கிராமச் சாலைகள் படுமோச மாக உள்ளன. அதை சரி செய்யவில்லை. அதேபோல் குறிச்சிகுளம், இரும்பிளிக் குறிச்சி, தூளார், உட்பட பல்வேறு ஊர்களில் பள்ளிகளுக்கு போதிய கட்டிடவசதி கழிப்பறை வசதி காம்பவுண்ட் வசதி இல்லை. தளவாய் தாமரைபூண்டி, மணக்குடையான் உட்பட பல்வேறு ஊர்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இவற்றை சரிசெய்யாவிட்டால் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்''’’ என்கிறார் அழுத்தமான குரலில்.

இதுகுறித்து மணக்குடையான் பகுதி ஒன்றிய குழு தி.மு.க உறுப்பினர் தமிழ்மாறன் நம்மிடம் கூறும்போது ’’""அரியலூர் மாவட்டத்திலேயே எங்கள் பகுதியில்தான் சுரங்கங்கள் அதிகம். கிராமங்களை நடுவில் வைத்து, தீவுகள் போல சுரங்கங்கள் தோண்டப்பட்டு வருகின்றன. அதன் மூலம் பாதிக்கப்படும் எங்கள் கிராமங்களை தத்தெடுத்து அதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி தருவதாக இப்பகுதியில் உள்ள சிமெண்ட் ஆலைகள் துவக்கப்பட்ட காலத்தில் உறுதிமொழி அளித்தார்கள். அவையெல்லாம் காற்றில் பறந்துவிட்டன. மத்திய மாநில அரசுகளின் உத்தரவின்படி சிமெண்ட் கம்பெனிகள் அளிக்கும் ராயல்டி தொகையையும் எங்கள் பகுதியின் தேவைகளை நிறைவேற்ற செலவு செய்யாமல் அரசுக் கொறடா அவர் தொகுதிக்கு கொண்டு சென்றுவிட்டதாகக் கூறுகிறார்கள். இது எங்கள் பகுதி மக்களின் மனதில் வேல்பாய்ச்சும் செயலாக உள்ளது.

village

எங்கள் பகுதியில் மணக்குடையான் மாராக் குறிச்சி பகுதியில் சுடுகாட்டிற்குப் பாதை இல்லை. மாறாக்குறிச்சி ஓடையில் பாலம் கட்ட வேண்டும். இருங்களாக்குறிச்சியில் இருந்து சிமெண்ட் ஆலை செல்லும் வழி மிகமோசம். அதேபோல் ஏரிகளுக்கு நீர்வரத்து வாய்க்கால்கள் தூர்ந்துகிடக்கின்றன. அவைகளைச் சரிசெய்ய வேண்டும். அதேபோல் மணக்குடையான் மருங்கூர், ஆதனக்குறிச்சி கிராமங்களை இணைக்கும் சாலை சீரழிந்து கிடக்கின்றன. எங்கள் பகுதியில் கால் நடைகளை பாதுகாக்க கால்நடை மருத்துவமணை அமைக்கவேண்டும். தொடர்ந்து நாங்கள் புறக்கணிக்கப்பட்டால் தொடர் போராட்டம் தொடங்குவோம்''’’ என்கிறார் ஆதங்கமாய்.

செந்துறை ஒன்றிய பகுதிக்கு செலவிடப்பட வேண்டிய நிதியை அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் தமது அரியலூர் தொகுதிக்கு அதி காரிகள் துணையோடு மடைமாற்றம் செய்தாரா? என்பதை அறிய அவரைத் தொடர்புகொண்டோம். லைனில் வந்த அவரது பி.ஏ சக்தி நம்மிடம், ""அரசு கொறடா முக்கிய மீட்டிங்கில் இருக்கிறார். தி.மு.க.வினர் கூறுவது போன்று கனிமவள நிதியை அரியலூர் பகுதிக்கு கூடுதலாக செலவிடவில்லை மேற்படி நிதியில் செந்துறை ஒன்றியத்தில் எழுபது கோடியில் திட்டப்பணிகள் நிறைவேற் றப்பட்டுள்ளன. அந்த நிதியில் அரியலூர் பகுதிக்கு நாற்பது கோடிதான் வந்தது. அதில்தான் திட்டப் பணிகள் நடைபெற்றது. மேலும் செந்துறை பகுதியில் சுரங்கப் பகுதிகள் அதிகம். அதேநேரத்தில் அரியலூர் பகுதியில் சிமெண்ட் ஆலைகள் செயல் படுகின்றன. அப்படி இருந்தும் செந்துறைக்குதான் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது. மேற்படி திட்டப்பணிகள் குறித்த விபரங்களை அதிகாரி களிடம் கேட்டு உங்களுக்குத் தருவோம்''’என்றார் பரபரப்பாக. ஆனால் அந்த விபரங்களுக்காகக் காத்திருந்தும், அவரிடமிருந்து எந்த விபரமும் வரவில்லை.

செந்துறை பகுதியின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் கிடைக்கவேண்டிய நிதியை, அரசுக் கொறடா வழிமறிப்பது நியாயமா?