ஒரு டீக்கடைக்கும் காவல் நிலையத்துக்குமான கணக்கு வழக்கு பிரச்சனை, முதலமைச்சர் தனிப்பிரிவு வரை புகாராகச் சென்றுள்ளது பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ளது கரியலூர் காவல் நிலையம். கல்வராயன் மலைப் பகுதியில் நடக்கும் கள்ளத் துப்பாக்கி தயாரிப்பு, கள்ளச் சாராய உற்பத்தி போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில், கரியலூர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காவல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த காவல் நிலையத்தில் தற்போது ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உட்பட சுமார் பத்து காவலர்கள் உள்ளனர். இந்த காவல் நிலையத்தின் அருகில் அதே பகுதியைச் சேர்ந்த மலைவாழ் இனத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவர் டீக்கடை நடத்தி வருகிறார்கள். இந்த டீக்கடையில்தான் காவல் நிலையத்துக்கும் டீ வாங்குவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக டீக்கடைக்கு பணம் தராமல் பாக்கி வைத்துள்ளனர். பாக்கித் தொகை பத்தாயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. போலீசாரிடம் தொடர்ந்து நச்சரித்ததில் 3000 ரூபாயை மட்டும் கொடுத்துவிட்டு பாக்கியை நிலுவையில் வைத்தனர்.
இந்த சூழலில், அந்த டீக்கடைக்கு வந்த யாரோ ஒரு சமூக ஆர்வலருக்கு கரியலூர் காவல் நிலைய போலீசார் 7000 ரூபாய் டீக்கடை பாக்கி வைத்துள்ள விவகாரம் பேச்சுவாக்கில் தெரியவர, அதையே புகாராக எழுதி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ளார். அந்த புகார் அங்கிருந்து நேராக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் அந்த புகாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜுக்கு அனுப்ப, மோகன்ராஜ் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கரியலூர் காவல் நிலையத்திற்கு அந்த புகாரை அனுப்பியுள்ளார்.
மேலிடத்திலிருந்து வந்த புகாரைக் கண்டு பதறிப்போன காவலர்கள் ஒன்று சேர்ந்து, டீக்கடைக்காரருக்கு தரவேண்டிய பாக்கித் தொகை 7000 ரூபாயை டீக்கடைக்கு சென்று, டீக்கடைக்காரரின் மனைவியிடம் கொடுத்ததோடு, ஆதாரத்துக்காக அதைப் படம் பிடித்து காவல்துறையினரின் வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டு, “டீக்கடை பாக்கியை கொடுத்தாச்சு” என்று விளக்கமும் கொடுத்துள்ளனர்.
ஒரு டீக்கடை பாக்கி விவகாரம் இவ்வளவு விஸ்வரூபம் எடுக்கும் என்று காவல்துறையினர் எதிர்பார்க்கவில்லை. காவல்துறையினர் தர வேண்டிய டீ பாக்கி விவகாரத்தை முதலமைச்சர் தனிப்பிரிவு வரை புகாராக அனுப்பியது யாராக இருக்கும் என்று காவல்துறையினரின் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறதாம்.