Skip to main content

கர்நாடக தேர்தலும், பா.ஜ.க.வும்...

Published on 30/04/2018 | Edited on 30/04/2018

பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு கர்நாடகாவில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "கர்நாடகாவில் யாருடைய ஆட்சியில் ஊழல் அதிகமாக இருந்தது என்று போட்டி வைத்தால், அதில் எடியூரப்பாவின் பாஜக ஆட்சிதான் முதல் இடத்திற்கு வரும்" என்று மேடையில் குழப்பினார். அதற்கு பின்னர், "நான் உளறிவிட்டேன். சித்தராமைய்யா தான் ஊழல் அதிகமாக செய்தவர் என்று சொல்ல வந்தேன். அதற்குள் காங்கிரஸ் கட்சிகள் அனைத்தும் குஷியாகிவிட்டனர். ராகுல் காந்திக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நான் தவறு செய்யலாம், ஆனால் கர்நாடக மக்கள் தவறு செய்ய மாட்டார்கள்" என்றார். இது கர்நாடக தேர்தலின் ஆரம்ப பிரச்சாரத்தில் ஒன்று. கர்நாடகாவில் வலுவான நிலையில் இருக்கும் காங்கிரஸை எதிர்த்து, இந்தியாவில் பல மாநிலங்களை தன் கைக்குள் வைத்திருப்பது போலவே, தென்னிந்தியாவிலும் கர்நாடகா தேர்தலை வென்று சாதித்துவிடலாம் என்று ஊழல் புகாரில் சிக்கின எடியூரப்பாவையே முதல்வர் வேட்பாளராக களத்தில் இறக்குகிறது, பாஜக.
 

amit shah


எடியூரப்பா தனது மகன் விஜயேந்திராவையும் இந்த தேர்தல் களத்தில் இறக்கிவிட்டு, அடுத்து கட்சியை அவரிடம் ஒப்படைத்துவிடலாம் என்று யோசித்தார் போல, ஆனால் அதற்கு கட்சி வலுவான எதிர்ப்புகளை தெரிவித்ததால் அதை விட்டு விட்டு, மகனை பாஜகவின் மாநில செயலாளராக நியமித்தார். இரு கட்சிகளின் ட்வீட்டர் மோதல்களும், மேடைகளில் பேச்சு மோதல்களும் கொஞ்சம் சுமாராகத்தான் சென்றுகொண்டிருக்கிறது. ஒருவேளை தேர்தல் பேச்சுகள் சூடுபிடிக்க பிரதமர் மோடியின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்களோ என்னவோ... மோடி வருவதற்கு முன்பே சித்தராமையா பிரதமர் மோடியையும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்தியநாத்தையும் "நார்த் இம்போர்ட்டர்ஸ்" என்று கலாய்த்துள்ளார். அப்போது, ராகுலையும், சோனியாவையும் பா.ஜ.க.காரர்கள் என்னவெல்லாம் சொல்லுவார்களோ என்று எல்லோரும் காத்திருக்கிறார்கள். பாஜக வெற்றி பெறுவது கடினம் என்ற நிலையிருந்த தேர்தல்களில் எல்லாம் மோடியின் கடைசி கட்ட பிரச்சாரம் தீவிரமாக இருக்கும், வித்தியாசமாக இருக்கும். குஜராத்தில் வடித்த கண்ணீர்தான் அதற்கு உதாரணம்.
 

modi with yediyurappa

பாஜகவின் கோட்டை என்று சொல்லப்பட்டு வந்த குஜராத் மாநிலத்திலேயே, பாஜகவால் போராடித்தான் வெற்றி காணமுடிந்தது. இதில் தேர்தல் யுக்தி என்று சொல்லப்பட்டால், சர்தார் சரோவர் அணையை தேர்தலுக்கு நான்கு மாதம் முன்பே திறந்துவைத்தது, 'ரோ-ரோ-பெர்ரி' என்ற அதிவேக படகு போக்குவரத்தை கொண்டுவந்தது, அஹமதாபாத்தில் புல்லட் ரயில் திட்டம் தொடங்கியது போன்றவைதான். இதற்காக அவர் அங்கேயே குடி இருந்தார். இது போதாதென்று பிரச்சார மேடைகளில் அழுகவும் செய்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மணிசங்கர் ஐயர் பாகிஸ்தானியர்களுடன் சேர்ந்து தன்னை கொலை செய்ய திட்டம் போட்டிருக்கிறார் என்று அலட்டிக்கொள்ளாமல்  மேடைகளில் பேசினார்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், "மக்களின் தரத்தை உயர்த்துவோம், இத்தனை ஆண்டுகளாக நீங்கள் கம்யூனிஸ்ட்காரர்களை நம்பி ஏமாந்துவிட்டீர்கள். நாங்கள் மாற்றுகிறோம். கம்யூனிஸ்ட்காரர்களின் அராஜகங்களை ஒழித்து காட்டுவோம்" என்றார். இருபத்தைந்து வருட கம்யூனிஸ்ட் சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார். இது போன்று இந்தியாவில் நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் முதல் நாள் இரவு பரிட்சைக்கு படித்து மார்க் எடுக்கும் மாணவனை போல தேர்தல் நெருங்கிய நேரங்களில் எப்படியாவது ஒரு கலாட்டா செய்து மக்கள் மனதை மாற்றி அமைக்கின்றனர், வெற்றி பெற்று வருகின்றனர். மாறியது மக்களின் மனமா இல்லை மின்னணு வாக்கு இயந்திரமா என்றெல்லாம் இன்னும் விவாதங்கள் நடக்கின்றன. நாங்கள் ஓட்டுக்கு காசு கொடுப்பதில்லை என்று சொல்கின்றனர். இருந்தாலும் 'அள்ளி, அள்ளி கொடுக்கின்றனர்' என ஊடகங்களில் புகார் எழுகின்றது. மக்களை எப்படி அணுகுவது என்று ஒரு மசாலா படத்தின் 'பார்மட்'டில் தேர்தல் சமயங்களில் செயல்பட்டுவருகிறது இந்த பாஜக. அப்படி அவர்கள் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால்,  சற்றும் யோசிக்காமல்  கவர்னர் என்ற பதவியை வைத்து சர்ச்சையை கிளப்பியும், அமைச்சர்கள் வீட்டில் இன்கம்டாக்ஸ் ரைடு விட்டு அவர்களை பயமுறுத்தியும் ஆட்சி செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.  

 

sidharamaiya

 


மே 12 ஆம் தேதி தேர்தல், மே மூன்றாம் தேதி போல் மோடி கர்நாடகா வந்து பிரச்சாரத்தில் கலந்து கொள்கிறாராம். பாஜகவின் தேர்தல் யுக்தியில் முதன்மையானது மதம்தான். அதற்கு ஏற்றார்போல் கர்நாடகாவில் புதிதாக லிங்காயத் என்ற மதம் ஒன்று வந்துள்ளது. ஒரு பக்கம் மதத்தை வைத்து அரசியல் செய்தாலும், இன்னொரு பக்கம் பல வருட வெறுப்பு அரசியல் என்று ஒன்று இருக்கிறது அல்லவா, அதுதான் காவிரி நதி. காவிரி மேலாண்மை வாரியமா அல்லது ஸ்கீமா என்று பள்ளி குழந்தைகளைப்போல கேட்கும் போதே அவர்களின் நோக்கம் கர்நாடகாவை தாண்டி நம் பக்கம் வராது என்று. தெரிந்துவிட்டது.

 


மோடி, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, "நாங்கள்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவிடாமல் தடுக்கிறோம்", என்று பெருமையாக பிரச்சாரத்தில் சொன்னால் கூட ஆச்சரியம் இல்லை. சித்தராமையா கன்னடத்தை அங்கு வலுப்படுத்திவிட்டதால், மோடி பேசும் ஹிந்திக்கு அங்கு எதிர்ப்புகள்தான் வரும் போல. ஆனால் அதை சமாளிக்க கன்னடத்தில் எதாவது மேற்கோள் வைத்திருப்பார் பிரதமர். இன்று பலர் பேசிக்கொள்வது இதுதான், "காங்கிரஸ் வந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் வாராது. அதேதான் பாஜக வந்தாலும்"...