கடந்த ஆண்டு நீட்டை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. எல்லா அரசியல் கட்சிகளும் நீட்டை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தன. திமுக சார்பில் சட்டப்போராட்டமும் நடத்தப்பட்டது.
ஆளும் எடப்பாடி அரசு பாஜக அரசிடம் பேசமுடியாமல், ரெய்டு பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது. மக்கள் உணர்வுக்கு எதிராக ஏதேனும் செய்தாக வேண்டுமே என்ற அவசியத்தில் மாநில அமைச்சர்கள் டெல்லிக்கு போவதும் வருவதுமாக இருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முயற்சியில் நீட்டை எதிர்த்து சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தின் கல்வி வரலாற்றையும், சமூகநீதி போராட்டங்களையும் தகர்த்து, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களை அபகரிக்க மத்திய அரசு நீட்டை ஆயுதமாக பயன்படுத்துவதில் உறுதியாக இருந்தது.
போராட்டங்களுக்கும், நீட்டுக்கு விலக்குப் பெறும் முயற்சிகளுக்கும் இடையே, நீட் தேர்வு நடந்துமுடிந்தது. தமிழகம் இதுவரை பார்க்காத அளவுக்கு, தேர்வு மையங்களில் கடுமையான கெடுபிடிகளை மாணவர்கள் எதிர்கொண்டனர்.
பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களை எளிதில் பெற்று படித்த தமிழக மாணவர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டனர். நீட் தேர்வுக்கு தாயாராகவே லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டும் என்ற நிலையில், குடிசை வீட்டிலும், தெருவிளக்கிலும் பெற்றோருக்கு உதவிசெய்துகொண்டே படித்துத் தேறிய ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் தங்களின் மருத்துவக் கனவு கண்முன்னே கலைவதை கண்டு கலங்கினார்கள். தமிழகத்தில் பற்றியெரிந்த நீட் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து, ஒரு ஆண்டுக்கேனும் விலக்குப் பெறுவதற்கு உதவுவதாக மத்திய அரசு நம்பிக்கை அளித்தது. அதற்கு தேவையான திருத்தங்களை மாநில அரசு அவசர அவசரமாக செய்துகொடுத்தது. ஆனாலும், மத்திய அரசு வேண்டுமென்றே இழுத்தடித்ததால், நீட் தேர்வுக்கு விலக்க அளிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த மறுப்பைத் தொடர்ந்து அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். அவருடைய மரணம் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தை கிளர்ச்சியுறச் செய்தது. மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராடினார்கள். ஆனால், சில நாட்களிலேயே அந்தப் போராட்டக் கனல் அணைக்கப்பட்டது.
தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய மருத்துவ இடங்களை வெளிமாநிலத்தவர்கள் அபகரித்துச் சென்றார்கள்.
இதோ, இந்த ஆண்டும் நீட் தேர்வைத் தவிர்க்க முடியவில்லை. எவ்வளவுபேர் நீட் தேர்வுக்கு முறையாக தயாராகி இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. நீட் தேர்வை தவிர்க்க அரசும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டனர்.
ஆனால், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கேரளாவிலும், ராஜஸ்தானிலும் தேர்வு மையங்களை ஒதுக்கி இந்த ஆண்டு இன்னொரு வகையான கொடுமையை மத்திய அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. வெளிமாநில தேர்வு மையங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஆக, மாணவர்களின் போக்குவரத்து வசதியையோ, பொருளாதார வசதியையோ மத்திய பாஜக அரசு கவனத்திலேயே எடுக்கவில்லை.
கேரளாவுக்குக்கூட கொஞ்சம் சிரமப்பட்டு சென்றுவிடலாம். ராஜஸ்தானில் மையம் ஒதுக்கினால் அதற்காக மாணவர்கள் எவ்வளவு சிரமப்பட வேண்டும் என்பதைப் பற்றி உச்சநீதிமன்றமோ, மத்திய அரசோ மனிதாபிமான அடிப்படையில்கூட சிந்திக்கவில்லை.
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வெளிமாநில தேர்வு மையத்துக்கு செல்ல முடியாத ஏழை மாணவரோ, மாணவியோ இந்த ஆண்டும் தங்களை பலிகொடுத்துவிட்டால் என்ன செய்வது என்ற உணர்வோ இல்லாதவர்களா இவர்கள்?
மத்திய பாஜக அரசின் இந்த அடாவடி நடவடிக்கையை எதிர்த்து தமிழக மாணவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?
வழக்கம்போல எதிர்க்கட்சிகளும் மாணவர்களும் சில நாட்கள் விவாதம் நடத்தி, போராடிவிட்டு அடுத்த ஆண்டு நீட் தேர்வு துரோகத்தை எதிர்கொள்ளப் போகிறார்களா?