Skip to main content

அதிகாரத்தை முட்டிய போராட்டங்கள் - 2017

Published on 01/01/2018 | Edited on 01/01/2018
 

                                  
"தடைக்கற்கள்   உண்டென்றால் அதை தகர்த்தெறியும் தோள்களும் இங்கே உண்டு." என்பதை நிரூபித்த பல போராட்டங்கள் இந்த ஆண்டு (2017) நடைபெற்றுள்ளது.  சொல்லப்போனால், தமிழ்நாட்டிற்கு  வருடம் ஆரம்பித்ததே போராட்டத்துடன்தான். உரிமைக்காக, உயிருக்காக, உடமைக்காக என வருடம் முழுவதும் பல போராட்டங்கள் நடந்தன. தனிமனித போராட்டம் அன்றாட வாழ்வில் இருந்தாலும், அதைத்தாண்டிய மக்கள் போராட்டமாக இவைகள் இருந்தன.

வாடிவாசலை முட்டிய காளைகள் 
                          
போன தலைமுறைக்கு "இந்தி எதிர்ப்பு போராட்டம்" என்றால் இந்தத்  தலைமுறைக்கு "ஜல்லிக்கட்டு போராட்டம்" என்று பெருமையாகக்  கூறும் அளவிற்கு மிக நேர்த்தியாக, உணர்வுப்பூர்வமாக நடந்தது ஜல்லிக்கட்டு போராட்டம். மெரினாவில் கடல் அலைகளைவிட மனித அலைகள் அதிகமாக இருந்தது. அதுமட்டுமல்ல தமிழகம் முழுக்க பிஞ்சுக்  குழந்தைகள் முதல் நெஞ்சு பொறுக்காத முதியவர்கள் வரை அனைவரும் களம் கண்டனர். எண் திசையிலிருந்தும் ஆதரவு கரங்கள் பற்றிக்கொண்டன. மிகப்பெரிய கூட்டம்   தமிழகம் முழுக்க கூடியது, அவர்களுக்காக  மூன்று வேளையும் குறைவில்லாத சாப்பாடு, நீர், சிற்றுண்டி, போர்வை, பாய் என அனைத்தும் போராட்டம்  நடக்கும் இடத்திற்கே வந்திறங்கின. பெரிய, பெரிய கூட்டம்  தலைமையின்றி கூடியபொழுதிலும் தனிமனித ஒழுக்கமோ, சட்ட ஒழுங்கோ பாதிக்கப்படவில்லை. போராட்டக்களங்கள், திருவிழாக் கோலமாக  காட்சியளித்தன (இணையமும் அவ்வாறே). கிட்டத்தட்ட 13 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தின் வெற்றியாக ஜல்லிக்கட்டுக்குத்  தடை நீங்கியது. இந்தியாவே தமிழக இளைஞர்கள் மீது மதிப்பு கொண்டிருந்தபோது கடைசி நாளில் கலவரம் எனக்கூறி போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக்  கலைத்தனர். 13 நாட்கள் நடந்த அறப்போரின் வெற்றியை கொண்டாட விடாமல் அடித்துக்  கலைத்தது காவல்துறை.  
                         
ரசாயனம் மிதந்த   நெடுவாசல்
                          
விவசாய நிலங்களை அழிக்கும் முயற்சியாக (ஒவ்வொரு வீட்டின் கழிவுநீர்த்தொட்டியிலிருந்தே மீத்தேன் எடுக்கலாம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை) நடந்த ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக வெகுண்டெழுந்த மக்கள் நீதிகேட்டு வீதிக்கு வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக மீண்டும்  போராட்டக்கோலம் பூண்டது தமிழகம். கட்சித்தலைவர்கள் முதலாக அனைவரும் ஆதரவு அளித்தனர். ஆனால் இந்த முறை ஒரு நீண்ட போராட்டமாக மாறியது. நெடுவாசலைத் தொடர்ந்து கதிராமங்கலத்திலும் போராட்டம் தொடங்கியது. 174 நாட்கள் வரை  (ஏப்ரல் 12 முதல் அக்டோபர் 2 வரை) இந்த போராட்டம் நடைபெற்றது. காவல்துறையும் வழக்கம்போல் அரசின் ஆணைக்கேற்ப அடி தூள் கிளப்பியது. கடைசி நாள் அன்று ஓ.என்.ஜி.சி. குழாய் பதிக்கப்படாது என உறுதியளிக்கப்பட்டது. மீண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டால் போராட்டம் எழும் என்ற அறிவிப்புடன் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தலைநகரில் தலைகுனிவு  


                           
"உழவன் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்கமுடியும், இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்" என்று  நாம் காலங்காலமாக புத்தகங்களில் மட்டுமே படிக்கிறோம்  என்பதை நிரூபித்தது  இந்தப்  போராட்டம். களத்தில் பெரிதாக ஆதரவு  (தர இயலாத) இல்லாத நிலையில் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதலில் மறியல் போராட்டமாகத் தொடங்கி போகப்போக நிர்வாணப் போராட்டம்,  எலிக்கறி தின்னும்  போராட்டம் என மனித உணர்ச்சிகளை கேள்விக்குறியாக்கும் பல வகைப்  போராட்டங்கள் நடைபெற்றன.  விவசாயிகளுக்கு இந்த வருடம் முழுவதும் போராட்டமாகவே (ஜல்லிக்கட்டு, நெடுவாசல், விவசாயிகள்) சென்றுள்ளது என்பது ஒரு கவலைக்கிடமான செய்தியே. இந்தப்  போராட்டம் இன்னும் முடியவில்லை. இந்த வருடம் முடிவுக்கு வந்துவிட்டது, ஆனால் இவர்களின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. அடுத்த வருடம் இவர்களுக்கு விடியும் என்ற நம்பிக்கைகொண்டு அவர்களுக்கு துணை நிற்போம்.

அரசு 'நீட்'டிய  கல்வி அராஜகம் 


                           
"நீட்டை எங்களிடம் நீட்டாதீர்கள்" என்பதை கருவாகக்கொண்டே இந்தப்  போராட்டம் தொடங்கியது. மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு தேர்வுமுறைதான் நீட். இது மாநில உரிமைகளை பறிப்பதற்கான செயல் என்று அரசியல்வாதிகளும், இப்படி உடனே அறிவித்தால் என்ன செய்வது, இது மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு எதிரானது என மாணவர்களும் போராடி வந்தனர். ஆனாலும் பல குளறுபடிகளுக்குபின் நீட் தேர்வு நடந்தது. அதிலும் சட்டையை வெட்டி, தோடுகளை கழற்றி, டார்ச் அடித்து, 'உங்க பூசாரித்தனமும் வேணாம், உங்க பொங்கச்சோறும் வேணாம்' என்று மாணவர்கள் கடுப்பாகி செல்லும் அளவிற்கு நடந்தது அந்தக்  கொடுமை. இத்தனையையும்  தாண்டி அந்தத்  தேர்வை எழுதி முடித்து, தான் படித்த கல்வி முறையில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றும் திடீர் தேர்வில் வெல்ல முடியாத சோகத்தில் பெரும் போராட்டத்திற்கு வித்தானது ஒரு உயிர். அவர் பெயர் டாக்டர். அனிதா. தேர்வு எழுதச்  சென்ற பெண் எப்படி டாக்டர் ஆகமுடியும் எனக்கேட்க அப்போது யாருக்கும் மனம்வரவில்லை. கொதித்தெழுந்த மாணவர்கள் டாக்டர்.அனிதா என்ற பெயரிலேயே போராட்டங்களை நிகழ்த்தினர். நீட்டைத்  தடை செய்ய முடியாது என்ற நீதிமன்ற உத்தரவாலும், அரசின் விடுமுறை அம்புகளாலும் இப்போராட்டம் நிறுத்தப்பட்டது.

கரையில் கூடிய கண்ணீர்  மீன்கள்  



                           
இந்த வருடத்தில் தமிழ்நாடே போராட்ட புயலாகதான் இருந்தது. இதில் போதாக்குறைக்கு வந்து சேர்ந்தது ஒக்கி புயல். நீண்ட நாட்களாக கொஞ்சம், கொஞ்சமாக குண்டுகளுக்கு தாரை வார்த்த தமிழ் மீனவர்களை, மொத்தமாக கடலுக்கு தாரை வார்த்தது மத்திய, மாநில அரசுகள். பசிபோக்கிய கடலன்னையின் மார்பை கட்டியணைத்து உயிர்போக்கினர் மீனவர்கள்.  நீண்ட நாட்களாக உரிய கருவிகளை வழங்குங்கள் என்ற மீனவர்களின் கூக்குரலுக்கு செவிமடுக்காமல் அவர்கள் போனபின்பு நிவாரணம் வழங்கப்படும் எனக்கூறியது அரசு. எல்லாம் வழிந்து வறண்ட பின்பு வந்து ஆய்வு செய்கிறது மத்தியக்குழு. ஆனால் அந்த குடும்பங்களில் மட்டும் அருவி ஓயவில்லை. கன்னியாகுமரி மக்கள் கண்ணீருடன் போராட்டம் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் கைகொடுத்தது.  நிவாரணங்கள் வழங்க உத்தரவிட்டதன்பேரில் போராட்டம் ஓய்ந்தது. கண்ணீர் ஓயவில்லை.

                            
சென்ற ஆண்டில் (2016) இந்தியாவிலேயே  அதிகப் போராட்டங்கள்  நடந்தது தமிழகத்தில்தான். இந்த ஆண்டும் (2017) அப்படியே இருக்க வாய்ப்புள்ளது. தலைமுறை தலைமுறையாக நாம் பல போராட்டங்களை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம். போராட்டமும், தமிழகமும் "செம்புலப்பெயல் நீர்போல்" கலந்தது. அதை யாராலும் பிரிக்க இயலாது. அன்றும், இன்றும் நாம் போராடியபோது எதிர்த்தவர்கள், பின் அதை ஆமோதிக்கத்தான் செய்தார்கள். போர்த்  தொழில் பழகவேண்டியது ஒவ்வொருவரின் கடமை. தமிழகத்துக்கு அது நெடுநாள் பழக்கம்.

கமல்குமார் 

சார்ந்த செய்திகள்