எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கு தெரியும்? அப்படித்தான், நடக்கப்போகும் விபரீதத்தை சிவகாசி, கருப்பணன் தெருவில் வசிக்கும், அந்த 6 பெண்களும் அறிந்திருக்கவில்லை. சிவகாசி பகுதியில் இன்று மின் தடை என்பதால், புழுக்கம் தாங்க முடியாமல் வீட்டுக்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, டமாரென்று பெரும் சத்தம். அவர்களின் வீட்டை ஒட்டியிருந்த அரசன் கல்யாண மண்டபத்தின் சுவர் இடிந்து அவர்கள் மீது விழுந்தது.
கனியம்மாள் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி மாண்டு போனார். நாகம்மாள், அங்கம்மாள், சண்முகத்தாய், ஈஸ்வரி, நிஷா ஆகிய 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இவர்களில் ஈஸ்வரியும், நிஷாவும் மாமியார், மருமகள் ஆவர். உயிர் தப்பிய 5 பேரில் இருவருக்கு கால்கள் உடைந்தன. இவர்களை தீயணைப்பு படையினர்தான் மீட்டு சிவகாசி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
சுவர் எப்படி இடிந்து விழுந்தது?
தனியாருக்கு சொந்தமான அரசன் கல்யாண மண்டபத்தில் ஜே.சி.பி. இயந்திரத்தை இயக்கி மராமரத்துப் பணிகளைச் செய்தனர். அப்போது, மண்டபத்தின் டைனிங் ஹாலில் இருந்த தூண் ஒன்று உடைந்து, மொத்த கட்டிடமும் சரிந்து விழுந்திருக்கிறது. அதன் காரணமாக, மண்டபத்தை ஒட்டியிருந்த குடியிருப்புக்களும் சேதம் அடைந்தன.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். தென் மண்டல டிஐஜி ஆனி விஜயா, தீயணைப்புத்துறை மண்டல துணை இயக்குனர் சரவணகுமார், சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார் என அத்தனை உயர் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர். தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் அங்கு தொடர்ந்து நடக்கின்றன.
அந்த ஏரியாக்காரரான முனியசாமி “இந்த மண்டபம் இருக்கிறதே புறம்போக்கு இடத்துலதான். முனிசிபாலிடி அதிகாரத்துல இருந்தப்ப அந்த முதலாளி வளைச்சுப் போட்டுட்டாரு. அப்புறம் பேப்பர்ல சரி பண்ணிருப்பாரு. இது ஊருக்கே தெரிஞ்ச சமாச்சாரம்தான். இம்புட்டு அதிகாரிகள் இப்ப விழுந்தடிச்சு ஓடி வர்றாங்கள்ல. இதுக்கு முன்னால இவங்கள்லாம் எங்கே போனாங்க? மண்டபத்துக்கு லைசன்ஸ் கொடுத்த அரசுத்துறையினர் கட்டிடம் எந்த லெவல்ல இருக்குன்னு அப்ப ஏன் ஆய்வு பண்ணல? இப்பக்கூட, முறையா பெர்மிஷன் வாங்கி ஜேசிபி இயந்திரத்தை வச்சு அங்கே வேலை நடந்தமாதிரி தெரியல. சில பெரிய முதலாளிங்க இங்கே எதுவும் பண்ணுவாங்க. அதிகாரிகள் கண்டுக்கவே மாட்டாங்க. பழைய மேப்பை பார்த்தால் நல்லா தெரியும். ஊருக்குள்ள யார் யாரு எங்கெங்கே இந்தமாதிரி ஆக்கிரமிச்சு கட்டிடம் கட்டிருக்காங்கன்னு? அப்படித்தான் ஊருக்குள்ள இருந்த ஊரணியெல்லாம் காணாம போயிருச்சு. இன்னும்கூட இங்கே இதேமாதிரி ஆக்கிரமிப்பு கல்யாண மண்டபங்கள் இருக்கு. ஆக்கிரமிப்பு கட்டிடம்னு பார்த்தா நூத்துக்கும் மேல இருக்கு. இதையெல்லாம் லிஸ்ட் எடுத்து அப்ப சிவகாசி முனிசிபாலிடில தீர்மானமே போட்டாங்க. ஒண்ணும் கதைக்கு ஆகல. கள்ளன் பெரிசா? காப்பான் பெரிசா?” என்று புலம்பினார்.
கனியம்மாள் உயிரிழப்புக்குப் பிறகாவது, ஆக்கிரமிப்புக்களையும் விதிமீறல் கட்டிடங்களையும் ஆய்வு செய்து, ஒட்டு மொத்த சிவகாசியையும் சீர்திருத்த விருதுநகர் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.