பன்றியில் இருந்து ஸ்வைன் ப்ளூ(பன்றிக்காய்ச்சல்) வைரஸ் பரவியது என்றும், பறவைகளில் இருந்து(பறவைக்காய்ச்சல்) ப்ளூ, சிக்கன் குனியா பரவியது என்றும், வௌவால்களில் இருந்து நிபா வைரஸ் பரவியது என்றும், குரங்குகளில் இருந்து ஜிகா வைரஸ் பரவியதும் என்றும் கூறி அந்தந்த காலக்கட்டங்களில் அவ்வினங்களை அழித்தொழித்தனர். இப்போது பாம்பில் இருந்து ’கொரோனா’ வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது.
இந்த கொரோனா வைரஸ்தான் கடந்த இரண்டு மாதங்களாக சீனாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தியிருக்கும் நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் பரவவில்லை என்று அரசும், அதிகாரிகளும் அறிவித்துள்ளனர். இந்தியாவுக்கு இவ்வைரஸ் பரவாமல் தடுக்கவும் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், கொச்சின் ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 22-ந் தேதி வரை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு 60 விமானங்களில் வந்த 12,828 பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை செயலாளர் பிரீத்தி சுதன் இந்த மருத்துவ பரிசோதனை நடத்தப்படுவதையும், இதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், ’’ஜிகா வைரஸ், எபோலா வைரஸ் போலவே இந்த கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. மக்களுக்கு இதுகுறித்த பயமோ, பதட்டமோ தேவை இல்லை. சீனாவிலிருந்து வரும் பயணிகளை விமான போக்குவரத்து துறை மருத்துவர்கள், தமிழக மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்துக்குள் அனுமதிக்கின்றனர்’’ என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.