சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடக்கிறது. மேலும் இந்த சூதாட்டத்தில் திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள், தொழில் அதிபர்கள் ஈடுபடுவதாகவும், கோடிக் கணக்கில் பணம் புழங்கி வருகிறது எனவும் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டிக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து ரகசிய விசாரணையில் ஈடுபட்ட போலீசார் அந்த வீடு யாருடையது என கண்டுபிடித்தனர். பிரபல திரைப்பட நடிகர் ஷியாம் வீடு என்பதும், பல நாட்களாக இந்த சூதாட்டம் நடைபெறுவதாகவும் கண்டுபிடித்தனர். இதனை கண்டுகொள்ளாமல் இருக்க அந்த பகுதி போலீஸ்காரர் ஒருவருக்கு மாதம் ரூபாய் ஒரு லட்சம் வரை கொடுக்கப்படுவதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.
இதையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடியாக நுழைந்த போலீசார், விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சூதாட்டம் நடந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் ஷியாம் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், பிடிபட்டவர்கள் செல்வந்தர்கள், செல்வாக்கு உள்ளவர் என்பதால் அனைவரையும் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர். மேலும் அவரது வீட்டிற்கு எந்தெந்த முன்னணி நடிகர், நடிகைகள் வந்து சென்றனர் என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
நள்ளிரவில் நடந்த இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.