Skip to main content

சோதனை எலியான துணிச்சல் பெண்மணி-கொரோனா தடுப்பு முயற்சி

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

 

உலகெங்கும் ஒன்றே முக்கால் லட்சம் பேரை தாக்கியிருக்கும் கரோனா வைரசினால், 6,500க்கும் அதிகமானவர்கள் மரணமடைந்துள்ளார்கள். பாரம்பரிய மருத்துவம் முதல் நவீன மருத்துவம் வரை எந்த வகையிலாவது கெரோனா வைரஸை (Covid-19) கட்டுப்படுத்த வல்லரசு நாடுகளும் வளரும் நாடுகளும் முயற்சித்து வருகின்றன.
 

ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு, கொரோனோவை கொடிய தொற்று நோயாக அறிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள  கெய்சர் பர்மனன்ட் வாஷிங்டன் ஆராய்ச்சி நிலையத்தின் மருத்துவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு, அதன் முதல் கட்ட முடிவுகளை அறிந்து கொள்வதற்கான பரிசோதனையை மேற்கொண்டனர்.

 

Doctors


 

இந்தப் பரிசோதனைக்கு ஜெனிஃபர் ஹேலர் என்ற 43 வயது பெண்மணி தன் தோள்பட்டையைக் கொடுத்து மனிதகுலத்தின் அச்சத்தைப் போக்க முன்வந்தார். பதின்பருவ வயதில் உள்ள இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான ஜெனிஃபர் ஹேலர், தன் பிள்ளைகளின் சம்மதத்துடன், பரிசோதனை அறைக்குச் சென்று கொரோனா நோய்த் தடுப்பு மருந்தை ஊசி மூலம் செலுத்திக்கொண்டு வெளியே வந்து, “இதனை நான் பெருமையாகக் கருதுகிறேன்” என்ற தெரிவித்துள்ளார். இந்த மருந்து எந்த அளவு பயன் தரும் என்பது சில நாட்களில் தெரியவரும்.
 

பொதுவாக, மனிதர்களுக்கு ஒரு மருந்தை செலுத்துவதற்கு முன்பு அதனை விலங்குகளிடம் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்பது மருத்துவ ஆராய்ச்சியின் அடிப்படை விதி. பெரும்பாலும், சுண்டெலிகள்தான் மனிதர்களின் உயிர் காப்பதற்கு தம்மைத் ‘தியாகம்’ செய்யும். கெரரோனா வைரஸின் தாக்குதலில் இருந்து மனிதர்களைக் காப்பாற்றுவதற்கான தடுப்பு மருந்து பரிசோதனைக்கும் சுண்டெலிகள்தான் தியாகிகள்.
 

கொடிய  ஆபத்தான இத்தகைய நோய்கள் குறித்துப் பரிசோதிப்பதற்கான சுண்டெலிகளை கைவசம் வைத்திருப்பது சாத்தியமல்ல, அதிலும் மனித மரபணுக்களுக்கு நெருக்கமாக உள்ள அளவில் சுண்டெலிகளை மரபணு மாற்றம் செய்தே பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். Covid-19 எனும்  கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலான பரிசோதனைக்குரிய சுண்டெலிகள் தற்போது கைவசமில்லை. போதுமான அளவில் அத்தகைய சுண்டெலிகளை உருவாக்கி பரிசோதனைகளை சில வாரங்களோ மாதங்களோ ஆகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
 

அமெரிக்காவில் உள்ள ஜாக்சன் ஆய்வகம் மருத்துவ ஆராய்ச்சிக்கான உயிரினங்களை உற்பத்தி செய்து வழங்குவதில் முன்னணியில் உள்ளது. இதுவரை 11 ஆயிரம் வகை சுண்டெலிகளை அது விற்பனை செய்துள்ளது. ஜனவரியில் கொரானோ வைரஸ் பற்றிய செய்தி வெளியானபோது, தேவையான மரபணுவுடன் கூடிய சுண்டெலிகளோ மற்ற உயிரினங்களோ அந்த ஆய்வகத்திடம் இல்லை. இதற்கு காரணம், உலகநாடுகள் பலவற்றிலும் உருவாகியுள்ள விலங்குகள் வதை எதிர்ப்பு இயக்கங்களின் தாக்கமேயாகும். ஜல்லிக்கட்டு தொடங்கி ஆபத்தான நோய்கள் வரை பண்பாடு-மருத்துவம் எனப் பலவற்றுக்கும் இத்தகைய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், பரிசோதனை எலிகளின் உற்பத்தியும் மிக அரிதாகவே மேற்கொள்ளப்படுகிறது.
 

தற்போது ஜாக்சன் ஆய்வகத்தைப் பல நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் தொடர்பு கொண்டு வருகின்றனர். “தேவையான மரபணுவுடன் கூடிய முதல்கட்ட சுண்டெலிகளை உருவாக்கி வருகிறோம்.  அவற்றிலிருந்து கூடுதலாக இனப்பெருக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன” எனிகறார் ஆய்வகத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள சார்லஸ் மில்லர். கருவுற்ற சுண்டெலிகள், குட்டி போடுவதற்கு 3 வாரங்கள் ஆகும். அந்தக் குட்டிகள் ஆய்வுக்கு பயன்படும் அளவில் வளர்வதற்கு மேலும் 6 வாரங்கள் ஆகும்.
 

சுண்டெலிக்குப் பதிலாக வெள்ளெலி, பன்றி, முயல் ஆகியவற்றை பரிசோதிக்கலாமா எனவும் ஆலோசிக்கப்பட்டது. எனினும், சுண்டெலி அளவுக்கு அவை சரியாக இருக்காது என்றும் மருத்துவ உலகம் நினைக்கிறது. பரிசோதனை எலிகள் கிடைப்பதற்கு தாமதமாவதால் நேரடியாக மனிதர்களிடமே பரிசோதிக்கலாமா என்ற கருத்து முன்வைக்கப்பட்டபோது, அத்தகைய விஷப்பரீட்சை வேண்டாம் என்பதே பெரும்பாலான மருத்துவர்களின் கருத்தாக இருந்தது. ஆயினும், மனிதகுலம் ஒவ்வொரு கட்டத்திலும் மேற்கொண்ட துணிச்சலான முடிவே பல சவால்களை எதிர்கொள்ள காரணமாக அமைந்தன. அந்த வகையில், சியாட்டிலில் உள்ள ஆய்வகம், ஜெனிஃபர் ஹேலரின் தோள்பட்டையில் கொரோனா தடுப்பூசி மருந்தை செலுத்தி, ஆய்வு  மேற்கொண்டுள்ளது.
 

கொரோனா பயத்தால் உலகின் வல்லரசு நாடுகளெல்லாம் பிற நாட்டுப் பயணிகள் தங்கள் நாட்டிற்கு வருவதற்கு தடை செய்து வரும் நிலையில், சின்னஞ்சிறு நாடும் கம்யூனிச சித்தாந்த அரசை நடத்திவருவதுமான கியூபா தன் நாட்டின் கடல் எல்லைக்கு வந்த இங்கிலாந்து கப்பலில் இருந்த பயணிகளை  வரவேற்று, அவர்களை தனது நாட்டிற்குள் அனுமதித்திருப்பது கியூபாவின் மனிதாபிமானத்தையும் தனது நாட்டு மருத்துவத் துறை மீது அது கொண்டுள்ள நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகிறது.