கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அமலில் இருந்தும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்றது. இதனை குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை தமிழகத்தில் 41 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புக்கள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
இந்த கரோனா வைரஸ் காரணமாக உலகமே முடங்கி கிடக்கிறது. இந்தியா முழுவதும் முடங்கியுள்ளது. தமிழகம் முடங்கியுள்ளது. இங்கு வைரஸ்ஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழகத்தில் இரண்டு இலக்கத்திலேயே இருக்கின்றது. ஒரு விதத்தில் ஆறுதல் தந்தாலும், இன்னும் அதன் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா? எந்த மாதிரியான சூழ்நிலைகளில் நாம் இருக்கின்றோம்?
சரியான முறைகளில் நாம் சென்றுக் கொண்டிருக்கின்றோம். நீங்கள் கூறியது போன்றே உலகம் முழுவதும் இந்த பாதிப்புக்கள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. நானே சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கிறேன். இந்த வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது என்று. தற்போது அமெரிக்கா, இத்தாலி, சீனா போன்ற நாடுகளை கவனிக்கும் போது அதனுடைய கிராப் ரொம்ப கடுமையாக இருந்தது. முதல், இரண்டாவது, முன்றாவது வாரங்களில் படிப்படியா உயர்ந்த உயிரிழப்புக்கள் ஐந்தாவது, ஆறாவது வாரங்களில் கடுமையாக உயர்ந்தது. இதை நாமே தொலைக்காட்சிகளில் பார்க்கும் போது பார்த்திருக்கலாம். அந்த நிலைமைக்கு தமிழகம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக முதல்வர் 144 தடை உத்தரவை அறிவித்தார். அடுத்த நாளே பாரதப் பிரதமரும் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். நாம் பாதிக்க கூடாது என்பதை கருதியே இந்த முடியை முன்கூட்டியே எடுத்தார்கள். அதனால்தான் இந்த நிலைமையில் வீட்டில் கவனமாக தனித்து இருக்க வேண்டும் என்று சொல்கிறோம்.
மக்களில் சிலர் நமக்கெல்லாம் கரோனா வராது என்று அதீத நம்பிக்கையில் இருக்கிறார்கள். இன்னும் சிலர் வெளியில் வந்தாலே கரோனா வந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள். இதில் எது உண்மை?
இரண்டிற்குமே நான் பதில் சொல்கிறேன். இது அதீத நம்பிக்கைக்கான நேரம் கிடையாது. நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இது அதற்கான நேரம் கிடையாது. அதீத நம்பிக்கைக்கான காலமும் கிடையாது, அதீத நம்பிக்கைக்கான இடமும் இல்லை. அதைப்போல யாரும் பயமாக இருக்கவும் தேவையில்லை. நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேனே. தொடர்ந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள், சக்கரை அதிக அளவு இருப்பவர்கள் முதலானவர்கள் பாதுகாப்பாக இருங்கள் என்று ஏற்கனவே கூறிருக்கிறோம். கரோனா வந்தால் மரணம் என்பது உண்மையல்ல. நாங்களே தில்லியில் இருந்து வந்த இளைஞரை சிகிச்சை அளித்து டிஸ்சார்ஜ் செய்துள்ளோமே!
ட்ராவல் ஹிஸ்ட்ரி இல்லாதவர்களுக்கும் இந்த கரோனா பாதிப்பு வர வாய்ப்புள்ளதா?
ட்ராவல் ஹிஸ்ட்ரி இல்லாதவர்களுக்கு அவர்களுடைய தொடர்பு மூலம் இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. மதுரையில் பாதிக்கப்பட்டு இறந்தவருடைய குடும்பத்தார்களை நாங்கள் தனிமைப்படுத்தி வைத்திருந்தோம். அவர்களுக்கு தற்போது பாசிட்டிவ் என வந்துள்ளது. இது ஒரு வகையில் நல்லது தான். நாம் சரியான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு சிறந்த உதாரணம். ஒருவர் பாதிக்கப்பட்டால் அவருடன் தொடர்புடைய அனைவரையும் தனிமைப்படுத்தி உள்ளோம். இதில் சுகாதாரத்துறை சரியான நிலையில் இருக்கின்றது. ஒரு இடத்தில் இருந்து இன்னும் புதிதாக அந்த வைரஸ் யாரையும் தாக்கவில்லை.
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு சரியான முறையில் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றதே?
சரியான கேள்வி, தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நமக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்வோம். அது தற்போது தடைபட்டுள்ளது. இருந்தாலும், தற்போதைய நிலையில் அனைத்தும் சரியான நிலையில் இருந்துகொண்டு இருக்கின்றது. போதுமான உபகரணங்கள் நம்மிடம் இருக்கின்றது. பாதுகாப்பு அனைவருக்கும் உறுதி செய்யப்படுகின்றது. நேற்று கூட ஓமந்தூரார் மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட தனி மருத்துவமனையை முதல்வர் ஆய்வு செய்து பாராட்டினார். சென்னையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த 21 நாட்கள் என்பது ஹாலிடே கிடையாது, அரசாங்கத்தின் உத்தரவு, கட்டளை என்பதை கருதி பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் நாம் அடுத்த நிலைக்கு செல்லாமல் நம்மை காக்க முடியும்.