Skip to main content

ராகுல் சாமி கும்பிட்டாலும் குத்தம் சொல்லும் பா.ஜ.க.!

Published on 14/11/2017 | Edited on 14/11/2017
ராகுல் சாமி கும்பிட்டாலும் குத்தம் சொல்லும் பா.ஜ.க.! 

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பா.ஜ.க.வை படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறது. ராகுலுக்கு குஜராத் மக்கள் கொடுக்கும் வரவேற்பு மோடியையும் அமித் ஷாவையும் கதிகலங்கச் செய்திருக்கிறது.



ராகுல் எதைச் செய்தாலும் அதை குறைகூறுவது என்ற இழிவான நிலைக்கு பா.ஜ.க. தலைவர்கள் சென்றிருக்கிறார்கள். குஜராத் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற ராகுல் அந்தப் பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதுகூட பா.ஜ.க. தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

"சாமி கும்பிடுவது இந்திய கலாச்சாரம்தான். ஆனால், அது இயல்பாகவே வரவேண்டும். தேர்தல் சமயத்தில் மட்டும் சாமியைக் கும்பிடக் கூடாது" என்று பாஜகவின் பொதுச்செயலாளர் பூபேந்தர் யாதவ் கூறியிருக்கிறார்.

அதாவது ராகுல் எதைப் பேசினாலும், எதைச் செய்தாலும் அதை திசைதிருப்ப முயற்சிப்பதே பா.ஜ.க.வின் முழுநேர வேலையாகிவிட்டது.

ஆனால், ராகுல் தான் கையில் எடுத்துக்கொண்டுள்ள விஷயங்களை பளிச் பளிச் என்று மக்களுக்கு புரிகிற மாதிரியும், வாக்காளர்களின் கஷ்டங்களுக்கு காரணம் யார் என்பதை தெளிவுபடுத்தும் வகையிலும் பேசுகிறார்.

மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எ.ஸ்.டி. வரிவிதிப்பு ஆகியவற்றால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை அவர் பேசுகிறார். ஊழல் பற்றி வாய்கிழியப் பேசும் மோடி தனது கட்சியினர் மீதான ஊழல் புகார்களைப் பற்றி பேசவே மறுப்பது ஏன்? என்று பகரங்கமாக கேட்கிறார்.

குஜராத் முதல்வர் ருபானி பங்கு பரிவர்த்தனையில் முறைகேடு செய்திருப்பதால் அவருக்கு 15 லட்சம் ரூபாயை செபி நிறுவனம் அபராதம் விதித்திருப்பதை ராகுல் சுட்டிக் காட்டுகிறார்.

பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா வெறும் 50 ஆயிரம் ரூபாய் மூலதனத்தைப் போட்டு சில மாதங்களில் அதை 80 கோடி ரூபாய் ஆக்கியது எப்படி என்று கேட்கிறார். இதற்கெல்லாம் மோடி வாய்திறந்து பதில் சொல்லவேண்டும் என்று வற்புறுத்துகிறார். மோடி பதில் சொல்லாமல் போனால் அவருடைய ஊழல் எதிர்ப்பு கோஷம் சும்மா வெத்துக் கூச்சல் என்றுதான் மக்கள் நினைப்பார்கள் என்கிறார்.

"நானும் பேசமாட்டேன். மற்றவர்களையும் பேச விடமாட்டேன்" என்பதுதான் இப்போது மோடியின் புதிய முழக்கமாக இருக்கிறது என்கிறார் ராகுல்.

குஜராத்தின் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு போன ராகுல் அந்த மக்களுடன் நெருங்கி உரையாடினார். அப்போது அவர்கள் தங்களுடைய வருமானம் ரொம்பவும்  குறைந்துவிட்டது என்றார்கள். அவர்களில் சிலர் வருமானத்துக்காக மேஜிக் செய்து பிழைப்பதாக கூறினார்கள்.



ஒருவர் மேஜிக் செய்து பணம் வரவைத்தார். அதை ரசித்த ராகுல்...

"மோடியும் இப்படித்தான் மேஜிக் செய்கிறார். நீங்கள் வெறுங்கையைக் காட்டி பணத்தை வர வைக்கிறீர்கள். மோடி ஏதேனும் திட்டம் என்று பணத்தை காணாமல் போக்கிவிட்டார்" என்று சொல்கிறார். இதைக் கேட்டதும் மக்கள் சிரிக்கிறார்கள்.

குஜராத் தேர்தல் பிரச்சாரம் களைகட்டிவிட்டது. காங்கிரசை நோக்கி மக்கள் நகரத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்