பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட பிரச்சினைகளை கண்டித்து இந்தியா முழுவதும் எதிர்க் கட்சிகள் போராடிவருகின்றன. இந்தச் சூழலில், சென்னைக்கு வந்திருந்த தமிழக பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளரும், பா.ஜ.க.வின் தேசிய செயலாளர்களில் ஒருவருமான முரளிதர ராவை நக்கீரனுக்காக சந்தித்து அவரிடம் பல கேள்விகளை முன்னிறுத்தினோம்.
குடியுரிமைத் திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றியிருப்பதன் மூலம் ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி என்கிற ஆர்.எஸ்.எஸ்.சின் அடிப்படை சித்தாந்தத்தை நிறுவ முயற்சிக்கிறீர்களா?
குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையிலேயே அழுத்தமாகச் சொல்லி மக்களிடம் பிரச்சாரமும் செய்திருக்கிறோம். மக்கள் அதனை ஆதரித்ததன் வெளிப்பாடுதான் பா.ஜ.க.வுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த மகத்தான வெற்றி. வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசம் இந்தியா. அதனால் அடிப்படை சித்தாந்தத்தை புகுத்தும் நோக்கம் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் எதுவும் இல்லை. அது எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரம். மக்களின் ஆதரவை இழந்து விட்ட எதிர்க் கட்சிகள், பிரதமர் மோடியை அரசியல்ரீதியாக வீழ்த்த முடியாததால் இப்படிப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
போராட்டங்கள்தான் ஜனநாயகத்தின் முதுகெலும்பு. அப்படியிருக்கையில், பிரதமர் மோடி அரசாங்கத்தின் சட்டங்களையும் திட்டங்களையும் எதிர்த்து நடத்தப்படும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க துப்பாக்கிச் சூடு நடத்துவது அரச பயங்கரவாதம் இல்லையா?
பெங்களூருவில் குறிப்பிட்ட பகுதியில் 144 தடையுத்தரவு இருப்பதை தெரிந்தும் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். அதில் வன்முறைகளை ஏவுகின்றனர். பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சட்டத்தின்படியும் வழிமுறைகளின்படியும் காவல்துறை சில நடவடிக்கைகளை எடுக்கிறது. அமைதியாக நடத்தப்படும் போராட்டங்களை பா.ஜ.க. அரசு என்றைக்கும் தடுத்ததில்லை. "என்னுடைய உருவ பொம்மைகளைக் கூட எரியுங்கள்; அதனை அடித்து உதையுங்கள்; ஆனால், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தாதீர்கள்' எனச் சொன்னவர் பிரதமர் மோடி. அப்படிப்பட்ட மோடி தலைமையில் இயங்கும் அரசாங்கத்தை அரச பயங்கரவாதம் என சொல்வது தவறு.
குடியுரிமைச் திருத்தச் சட்டத்தால் முஸ்லிம் மதத்தினர் திட்டமிட்டே புறக் கணிக்கப்பட்டிருப்பது பா.ஜ.க.வின் மத துவேஷம்தானே?
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 3 முஸ்லிம் நாடுகளிலும் கொடுமைகளை அனுபவித்து அங்கிருந்து விரட்டப்படும் ஹிந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள், கிருஸ்துவர்கள், பார்சிகள், சமணர்கள் ஆகிய மத சிறுபான்மையினருக்கு எந்த நாட்டிலும் அகதிகளாக வாழக்கூட அனுமதியில்லை. அகதிகளாக வரும் சிறுபான்மையினருக்கு சலுகை அளிக்க ஐ.நா. சபை வலியுறுத்தியிருக்கிறது. ஆனாலும் இந்துக்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினரை முஸ்லிம் நாடுகள் அங்கீகரிப்பதில்லை. அப்படியிருக்கும் நிலையில், முஸ்லிம் நாடுகளிலிருந்து விரட்டியடிக்கப்படும் மதசிறுபான்மையினருக்கு நாம் குடியுரிமை வழங்கியதில் என்ன தவறு? மேற்கண்ட 3 நாடுகளிலும் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப் படவில்லை. அதனால் திருத்தச் சட்டத்தில் அவர்களை சேர்க்க வேண்டிய தேவை எழவில்லை. இது புரிந்தும் புரியாமல் நடிக்கும் பிரிவினைவாதிகள்தான் எதிர்க் கட்சிப் போர்வையில் இப்படிப் பட்ட பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
மத துவேஷம் பார்க்கப் படுவதில்லை என்பது உண்மை எனில், மியான்மரிலிருந்து விரட்டியடிக்கப்படும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கலாமே, ஏன் மறுக்கிறீர்கள்?
மியான்மர் நாட்டிலிருந்து வெளியேறி பங்களாதேஷில் அகதிகளாக தங்கியுள்ள ரோஹிங்யாக்களால் பங்களாதேஷுக்கு மட்டுமல்லாமல் தெற்காசிய நாடுகளுக்கே ஆபத்து என சொன்னவர் முஸ்லிம் நாடான பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனா. அதை அலட்சியப்படுத்த முடியுமா? மியான்மருக்கு கீழே இந்தோனேசியா, மலேசியா போன்ற முஸ்லிம் நாடுகளும், உலகெங்கும் 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகளும் இருக்கின்றன. அங்கெல்லாம் அடைக்கலம் தேடாமல் இந்தியாவை நோக்கி ரோஹிங்யா முஸ்லிம்கள் ஏன் வரவேண்டும்? இந்தியாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை அதிகரித்து இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற முஸ்லிம் நாடுகள் திட்டமிடுவதாக நாங்கள் ஏன் சந்தேகிக்கக்கூடாது? அகதிகள் போர்வையில் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டமிடுகின்றனர். இதனை தடுப்பதற்காகத்தான் எச்சரிக்கையாக சில முடிவுகளை மத்திய அரசு எடுக்க வேண்டியதிருக்கிறது.
இந்த திருத்தச் சட்டத்தால் எதிர்காலத்தில் இந்துக்கள் அல்லாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றப்படும் அபாயம் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனவே?
பா.ஜ.க.வின் 2003 ஆட்சியின்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தின் வலிமையையும் அதன் அவசியத்தையும் நாடாளுமன்றத்தில் அழுத்தமாகப் பேசியவர் காங்கிரசின் முன்னாள் பிரதமரான மன் மோகன்சிங். அண்டை நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைபவர்களால் ஆபத்து என அலறியவர் மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி. ஆனால், இவர்கள் இன்றைக்கு திருத்த சட்டத்தை எதிர்க்கிறார்கள். இது சாத்தான் வேதம் ஓதுவது போலில்லையா? இந்துக்கள் அல்லாதவர்கள் எதிர் காலத்தில் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பது வடிகட்டிய பொய்.
ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பதில் பா.ஜ.க.வின் தமிழர்களுக்கு எதிரான விரோதம் வெளிப்படுகிறதே?
இலங்கை அரசாங்கத்தால் அங்குள்ள தமிழர்கள் யாரும் விரட்டியடிக்கப்படவில்லை; உள்நாட்டு போரின் விளைவால் அங்கிருந்து வெளியேறி தமிழகத்தில் அடைக்கலம் தேடினர். தற்போது இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இலங்கைக்கு திரும்பிச் செல்கின்றனர். ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை தந்துவிட்டால் அவர்கள் இலங்கைக்கு திரும்பிச் செல்ல முடியாது. அப்படி நிகழ்ந்தால் ஈழத்தமிழர்களின் நிலங்கள், சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுவிடும். தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க முடியாது.
இருப்பினும் ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமிருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வந்திருக்கிறது. எந்தச் சூழலிலும் ஈழத் தமிழர்களை நாங்கள் கைவிட மாட்டோம். காங்கிரசும் தி.மு.க.வும் ஈழப்பிரச்சனையில் செய்த துரோகத்தைப்போல பா.ஜ.க. அரசு செய்யாது.
குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மேற்குவங்க முதல்வர் மம்தா, கேரள முதல்வர் பினரய்விஜயன் போன்றவர்கள் போர்க்கொடி உயர்த்துவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றுள்ள இச்சட்டத்தை நிராகரிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. அரசியலமைப்பின்படி ஆட்சியிலுள்ள அரசுகள் இந்த திருத்த சட்டத்தை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
-சந்திப்பு : இரா.இளையசெல்வன்.