"நீங்கள் கத்தியை எடுத்திருந்தால், நாங்கள் துப்பாக்கியை எடுத்திருப்போம். நீங்கள் துப்பாக்கியை எடுத்திருந்தால், நாங்கள் அதைவிட பெரிய ஆயுதத்தை எடுத்திருப்போம். ஆனால் நீங்கள் ஆயுதமாக எடுத்தது அகிம்சையை அதைவிட பெரிய ஆயுதம் எதுவுமில்லை" என ஆங்கிலேயர்கள் சுதந்திர போராட்ட தருணத்தின்போது கூறியதாக கூறுவார்கள். ஆம் அகிம்சையைவிட பெரிய ஆயுதம் எதுவுமில்லை.
சமீபத்தில் சிம்பு அளித்த ஒரு பேட்டியில், "கர்நாடக மக்கள் யாரும் தண்ணீர் தரமாட்டோம் என கூறவில்லை. அங்கிருக்கும் அரசியல்வாதிகளும், அரசியல் ஆதாயத்தை தேடுபவர்கள் மட்டுமே இதை செய்கிறார்கள். நான் நேரடியாக என் கர்நாடகதாய்மார்களிடம் கேட்கிறேன். நீங்கள் கூறுங்கள், நீர் இல்லையென்று" என ஒரு பெரிய பேட்டி கொடுத்திருந்தார். அதற்கு ஒரு பெரிய பதிலும் கிடைத்திருந்தது. அவர் குறிப்பிட்ட நேரம் நெருங்கும் வரையிலும்கூட யாரும் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் குறித்த நேரம் தொடங்கியவுடன் ஒவ்வொரு வீடியோவாக வெளிவரத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து புகைப்படங்கள், பதிவுகள் என ஆதரவு பெருகிக்கொண்டே இருந்தது. ஒரு கன்னட அமைப்பு பேருந்து ஓட்டுனருக்கு தண்ணீர் வழங்கியது குறிப்பிடத்தக்கது. சிம்புவின் பேச்சு அங்கிருக்கும் பலரின் மனதில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது உண்மையே.
மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்ற போது அதன் தலைவர் கமல்ஹாசன், "நாம அகிம்சையா கேப்போம், ஒத்துழையாமை இயக்கம் மாதிரி ஒரு போராட்டத்தை நடத்துவோம். வெள்ளையனே வெளியேறுனு சொன்னா போதும். 'டேய் வெள்ளைக்காரா வெளியே போ' அப்படினு சொல்லவேண்டிய அவசியம் இல்ல" என்று கூறினார். இந்த இரண்டிற்குமே மக்களிடமிருந்து பெரிய வரவேற்பு கிடைத்தது. இவ்விரண்டினால் மட்டும் காவிரி நீர் கிடைத்துவிடுமா என்றால் அது கண்டிப்பாக இல்லை. ஆனால் வெகுஜன மக்கள் வன்முறையை விரும்புவதைவிட அகிம்சையையே விரும்புகிறார்கள் என்பது இந்த பேச்சுகளுக்குக் கிடைத்த ஆதரவில் தெரிய வந்தது.
அதே நேரம் களத்தில் இறங்காமல் எதுவும் நடக்காது. களத்தில் அகிம்சையாக நடக்கிறோமா இல்லையா என்பதுதான் விஷயம். அதெல்லாம் இல்லை, காந்தி காலத்து முறை இப்போது எப்படி சரியாக வரும் என்று கேட்பவர்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது. நாம் ஜல்லிக்கட்டை திரும்ப பெற்றது அகிம்சையால்தான். நம் நாட்டின் சுதந்திரத்திற்கு ஆயுதம் ஏந்தியவர்களின் பங்கு அளப்பரியதுதான் என்றாலும், நாம் அதை அகிம்சையால்தான் வென்றோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடக்கும் போது IPL தேவையா என்று கேட்டு சென்னையில் நடந்த IPL போட்டியை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடந்தன. அப்பொழுது சிலர் போட்டியை காண வந்த ரசிகர்களை சிலர் தாக்கினர். போராட்டக்காரர்களை காவலர்கள் தாக்கியதும் ஒரு இடத்தில் காவலர் ஒருவரை சிலர் தாக்கியதும் நடந்தது. இவை கண்டிக்கப்பட வேண்டியது.
காவிரி பிரச்சனையில் பெரிதாகக் கருத்து சொல்லாமலிருந்த ரஜினி, காவலர் தாக்கப்பட்டதை எதிர்த்து காட்டமாக ட்வீட் செய்தார். பலருக்கு ஆச்சரியமாக இருந்தது, சிலர் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். எதற்காக திடீரென்று கருத்து சொன்னாரென்று தெரியவில்லை. ஆனால், ரஜினி பேசும் அகிம்சையும் கமல், சிம்பு சொன்ன அகிம்சையும் வேறு வேறு என்பது தெரிகிறது.