பாஜகவுக்கும் அதனை அண்டிப்பிழைக்கும் அடிமைகளுக்கும் கிடைத்த அடி: நாஞ்சில் சம்பத்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன், குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இது தொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய தினகரன் அணியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத்,
இந்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. டெல்லியில் இருந்து ஆதிக்கம் செலுத்துகிற பாஜகவுக்கும், அதனை அண்டிப்பிழைக்கிற அடிமைகளுக்கும் கிடைத்த அடி. அஇஅதிமுக என்கிற இந்த மகத்தான இயக்கத்தை வழிநடத்துவதற்கான வல்லமை, வாய்ப்பு, தகுதி இவை மூன்றும் டிடிவி தினகரனுக்கு மட்டுமே சாத்தியமாகம். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் போன்ற துரோகிகளுக்கு அந்த இடத்தில் உட்காருவதற்கு தகுதியில்லை என்று ஆர்.கே.நகர் மக்கள் முடிவு எடுத்திருக்கிறார்.
ஒரு இடைத்தேர்தல் முடிவு தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. திருவண்ணாமலை இடைத்தேர்தல் அண்ணாவை முதல்வராக்கியது. திண்டுக்கல் இடைத்தேர்தல் எம்ஜிஆரை முதல்வராக்கியது. மருங்காபுரி ஜெயலலிதாவை முதல்வராக்கியது. இப்போது ஆர்.கே.நகர் டிடிவி தினகரனை முதலமைச்சராக்கும். தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் சக்தியாக தினகரன் உருவெடுத்திருக்கின்றார். தமிழ்நாட்டில் தலைகீழ்மாற்றங்கள் படிப்படியாக நடக்கும். துரோகம் செய்தவர்கள் அதற்கான தண்டனையை பெற்றுத்தீர்வார்கள். அந்த துரோகத்திற்கு தூபம்போட்ட பாஜக மண்ணோடு மண்ணாக மக்கிக் கிடக்கிறது.
தற்போது நீங்கள் எடுத்துள்ள பாஜக எதிர்ப்பு நிலை தொடருமா?
நாட்டு நலன் கருதி அதை தொடருவதுதான் நல்லது.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் அதிமுகவையும், இரட்டை இலையையும் மீட்டெடுப்பீர்களா?
நிச்சயமாக.
3 மாதத்தில் ஆட்சி கலையும் என்கிறாரே தினகரன் சாத்தியமா?
சாத்தியம்தான்.
தினகரன் வெற்றி பெற்றது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுகவுக்கு எதிரான ஓட்டுகள் என்று சொல்ல முடியாது. கடந்த தேர்தலில் தினகரனுக்கும் நாங்கள் ஓட்டு கேட்டோம். உங்களுக்குள் சண்டை வேண்டாம். ஒற்றுமையாக இருங்கள் என்று மக்கள் சொல்கிறார்கள் என்கிறாரே... மறுபடியும் இணைவீர்களா...?
யார் இணைந்தாலும் டி.வி.வி. தினகரன் தலைமையின் கீழ்தான்.
-வே.ராஜவேல்