மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
’’தூத்துக்குடியில் இருந்து ஆகஸ்டு மாதம் 18ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அந்தோணி, ரூபின்சன், வில்பர்ட், ரமேஷ், ஆரோக்கியம், பாக்கியம், வினோத் உள்பட 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து, படகுகளையும் பறிமுதல் செய்த வழக்கில், இலங்கை கல்பட்டி நீதிமன்றம், மீனவர்களுக்கு தலா ரூ. 60 லட்சம் அபராதமும், 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவது, சிறைபிடிக்கப்படுவது, உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படுவது, சேதப்படுத்தப்படுவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து சொல்லொணா துயரங்களில் மீனவர்கள் மூழ்கி வரும் நிலையில், இலங்கை அரசு கொண்டு வந்த புதிய கடல் தொழில் சட்டத்தின் படி 8 மீனவர்களுக்கும் தலா ரூ. 60 லட்சம் அபராதம் விதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்வதே பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளாததன் விளைவாகவே இத்தொடர் தாக்குதல்கள் நடக்கின்றன.
எனவே, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை ரத்து செய்வதோடு, எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டுமெனவும்; அவர்களது படகுகள் மற்றும் உடமைகளையும் பத்திரமாக மீட்டெடுத்து தமிழகம் அழைத்து வருவதற்கும் மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டுமெனவும்; தமிழக அரசும் இவ்விசயத்தில் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மேலும் 10 நாட்கள் வேலைநிறுத்தத்திற்கு பிறகு, ராமேசுவரத்தில் இருந்து 16.10.2018 அன்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அந்த வழியாக 7 குட்டி கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகுகளை சுற்றி வளைத்து மீனவர்களை தாக்கி காயப்படுத்தியதுடன் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை கடலில் வீசி எறிந்துள்ளதாக வந்துள்ள செய்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது. எனவே தமிழக மீனவர்களின் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு, இலங்கை அரசுடன் ராஜிய ரீதியில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.