தமிழக அரசியல் தொடர்ந்து பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கைகள், தமிழக முன்னாள் ஆளுநரின் குற்றச்சாட்டு என்று தொடர்ந்து பரபரப்பு குறையாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் பல்கலைக்கழக வேந்தர்கள் நியமனத்தில் பெரிய அளவிலான தொகை லஞ்சமாகப் பெறப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் இதுதொடர்பாக அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தியிடம் நாம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவருக்கே உரிய அதிரடி நடையில் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் தான் ஆளுநராக இருந்தபோது பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனத்துக்கு 40 கோடி முதல் 50 கோடி வரை பணம் வாங்கப்பட்டது எனத் தமிழக முன்னாள் ஆளுநரும் தற்போதைய பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அப்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பி. அன்பழகன் மறுத்துள்ள நிலையில் அவர் பேசிய கருத்துக்கள் தமிழக அரசியலில் தொடர்ந்து விவாதத்தைக் கிளப்பி வருகின்றது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
இந்தக் குற்றச்சாட்டை யார் கூறியது என்று முதலில் நாம் பார்க்க வேண்டும். இதை தமிழக முதல்வராக இருக்கின்ற மு.க.ஸ்டாலின் அவர்களோ, அண்ணன் பன்னீர்செல்வமோ, திருமாவளவனோ, கம்யூனிஸ்ட் தோழர்களோ கூறவில்லை. இந்தக் குற்றச்சாட்டை கூறியவர் மத்திய அரசால் ஆளுநராக நியமிக்கப்பட்டு தமிழகத்தில் பணியாற்றியவர். தற்போதும் ஆளுநராக வேறு மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இப்போது எதற்காக அவர் இதைக் கூற வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. பஞ்சாப்பில் இதே போன்று சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் இதே போன்ற ஊழல் நியமனங்கள்...தான் ஆளுநராக இருந்தபோது நடைபெற்றது, அதற்கு அப்போது ஆட்சியிலிருந்தவர்களுக்கு தொடர்பு இருந்தது என்று கூறியுள்ளார்.
அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் யார், எடப்பாடி பழனிசாமி. அதில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி. அன்பழகன். இந்த நியமனங்களில் இவ்வளவு ஊழல் நடைபெற்றுள்ளது என்றால் அதற்கு இவர்கள்தானே பொறுப்பு. லஞ்சப்பணம் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்றால் 27 பேர் வேந்தராக நியமிக்கப்பட்டதில் இவர்களுக்கு எத்தனை கோடி பணம் கிடைத்திருக்கும். பல்கலைக் கழக வேந்தர் நியமனத்தில் மாபெரும் ஊழலை எடப்பாடி பழனிசாமி அரசு செய்துள்ளது என்பது பட்டவர்த்தனமாக தற்போது தெரிய வந்துள்ளது. இதற்கான தண்டனையை இவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். பன்வாரிலால் சொல்கிறார் என்றால் மத்திய அரசே இவர்கள் மீது குற்றம் சாட்டுகிறது என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ஊழல் பெருச்சாளிகள் விரைவில் மக்கள் முன்பு அம்பலப்பட்டு விடுவார்கள்.
இவர்கள் தமிழக மக்களை மட்டுமா ஏமாற்றினார்கள். தேர்தலுக்கு முன்பு சென்னை வந்த அமித்ஷா எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரிடமும் பேசி தேர்தலில் அனைவரும் ஒன்றாக இணைந்து பிரச்சாரம் செய்ய வேண்டும். பிரிந்திருப்பது தோல்விக்கு வழிவகுக்கும், புலனாய்வு செய்திகள் அதை ஒத்தே இருக்கிறது என்ற எச்சரிக்கையைக் கொடுத்தார். அப்போது அண்ணன் ஓபிஎஸ் கூட அனைவரும் ஒன்றாக இணைந்தே தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்போம். இணைந்து செயல்பட்டால் தான் வெற்றி வசப்படும் என்று ஓப்பனாக சொன்னார். இதை அமித்ஷாவும் ஆமோதித்தார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி, அய்யயோ...அப்படி எல்லாம் இல்லை. தமிழக மக்கள் என்னைப் பார்த்துத்தான் சாப்பிடவே செய்கிறார்கள், என்னைப் பார்த்துத்தான் எழுந்திருக்கிறார்கள், நான்தான் எல்லாமாக இருக்கிறேன். நான் தனியாக நின்றே பிரச்சாரம் செய்து வெற்றி பெறுவேன். புத்தன், ஏசு, காந்தி வரிசையில் என்னைத் தமிழக மக்கள் நினைக்கிறார்கள் என்று கூறி அமித்ஷாவுக்கு காதில் பூ வைத்தார் எடப்பாடி பழனிசாமி. அதையும் தாண்டி எம்ஜிஆர் எல்லாம் சும்மா நான் அதற்கு மேல், 150 சீட்டை தட்டி தூக்கி விடலாம் என்று பொய்யை அளவில்லாமல் சொன்னவர்தான் இந்த பழனிசாமி. ஆனால் தேர்தல் முடிவுகள் யார் எம்ஜிஆர், யார் எடப்பாடி பழனிசாமி என்று காட்டிவிட்டது" என்றார்.