Skip to main content

தொடரும் மாணவர்கள் உயிரிழப்பு... நீட் விவகாரத்தில் பாஜக கூறுவது உண்மையா..? - மருத்துவர் எழிலன் பதில்!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020
cgvj

 

 

நீட் தொடர்பான அழுத்தத்தில் தமிழக மாணவர்கள் மூவர் கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டனர். இது தமிழகத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தன.

 

மத்திய அரசு தரப்பில் அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், மாநில அரசு நாங்கள் சட்ட போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம். அதில் வெற்றி பெறுவோம், எங்கள் கொள்கையும் நீட் தேவையில்லை என்பதுதான் என்று கூறியுள்ளது. மேலும் நீட் தேர்வுக்கு காரணம் முந்தைய காங்கிரஸ் திமுக கூட்டணிதான் என்ற குற்றச்சாட்டையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன் வைத்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பான பல்வேறு கேள்விகளை மருத்துவர் எழிலனிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

நீட் தேர்வு அச்சத்தால் கடந்த வாரம் தமிழகத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தன. மத்திய அரசு இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தனர். ஆனால்  ‘நீட் தேர்வு ரத்து’ என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வை கொண்டு வந்ததே முந்தைய காங்கிரஸ் திமுக கூட்டணிதான் என்று அதிமுக தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

முந்தைய காங்கிரஸ் அரசு இதை கொண்டுவந்ததாக வைத்துக்கொண்டால் கூட அதனை இவர் ஏன் செய்ய வேண்டும் என்று கேள்வி இயல்பாகவே எழுகின்றதே? முந்தைய அரசு கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் முறையாக செயல்படுத்தி வருகிறீர்களா? அப்படி எதுவும் இல்லையே! அப்புறம் எதற்காக இந்த தேர்வை மட்டும் முந்தைய அரசு கொண்டு வந்தது என்று கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.

 

அப்போதைய காங்கிரஸ் அரசு இந்த தேர்வை கொண்டு வந்தபோது கூட, நாட்டில் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் இருப்பதால் அதற்கு மாற்றாக இந்த தேர்வை கொண்டு வருவதாகவும், விருப்பம் உள்ள மாநிலங்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது. கலைஞர் அப்போதே நீட் தேர்வை எதிர்த்தார். அதன்படி ஒரு கடிதத்தை காரணமாக வைத்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைத்த சம்பவம் எல்லாம் நடைபெற்றது. 

 

இதை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014ம் ஆண்டு பிறகு பாஜக ஆட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அதில் நாங்கள் நுழைவுத்தேர்வு ரத்து தொடர்பாக சட்டம் இயற்றியுள்ளோம் என்று திமுகையும் சேர்த்தே சொல்கிறார். எனவே எங்களுக்கு நுழைவுத்தேர்வு தேவையில்லை என்று வலியுறுத்தினார். ஆனால் அவர் மறைவுக்கு பிறகு அத்தகைய ஆளுமையான தலைவர்கள் யாரும் அதிமுகவில் இல்லை, உருவாகவும் இல்லை. எனவே மத்திய அரசின் பேச்சுக்கு அவர்கள் அடிமையாக இருக்கிறார்கள். 

 

இந்த நீட் தேர்வை பற்றி அதிமுகவோ அல்லது பாஜகவோ புரிந்து கொண்டதாக தெரியவில்லை. பாஜக கட்சியின் துணைத் தலைவர் கூட சொல்கிறார், இந்த நீட் தேர்வில் 85 சதவீதம் மாநில மாணவர்களும், 15 சதவீதம் வெளிமாநில மாணவர்களும் படிக்கலாம் என்று தெரிவிக்கிறார். இது ஒன்றும் புதிதான கருத்து அல்ல, நீட் வருவதற்கு முன்பே இந்த அமைப்பு அப்படித்தான் இருந்தது. எனவே இதை இவர்கள் கண்டுபடித்து போல் பேச வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எனவே தவறான தகவல்களை மக்கள் மனதில் பதிய வைக்க பார்க்கிறார்கள். இது உண்மைக்கு மாறானது என்பதே என்னுடைய கருத்து.