தெ.சு.கவுதமன்
இந்திய தேசத்தின் மொத்த கவனமும் தற்போது ராகுல் காந்தியின்மீது குவிந்திருக்கிறது. பூனைக்கு யார் மணி கட்டுவார் என்பதுபோல், பிரதமர் மோடியின் வலுவான பா.ஜ.க.வை எந்த தலைவர் வலுவாக எதிர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு கடந்த எட்டாண்டுகளாகவே இந்தியர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருந்துவந்தது. ராகுல் காந்தி இளம் எதிர்க்கட்சித் தலைவராக வந்தபோதும், அவர் மோடிக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் களமாடாததால், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் தோற்று, ஒரு தொகுதியில் வென்றும் தான் கரையேற முடிந்தது. காங்கிரஸை அவரால் கரையேற்ற முடியவில்லை.
அதேபோல், அவருக்கு அடுத்ததாக அரவிந்த் கெஜ்ரிவாலால் டெல்லியிலும் பஞ்சாப்பிலும் வெற்றி பெற முடிந்தபோதிலும், இந்தியா முழுமைக்குமான தலைவராக இன்னும் உருவெடுக்க முடியவில்லை. மம்தா பானர்ஜி. சந்திரசேகர ராவ், பினராய் விஜயன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மாநில எதிர்க்கட்சித் தலைவர்களும் மாநில முதலமைச்சர்களுமான இவர்களுக்கும் அதே சூழல் தான்.
இதையும் தாண்டி, தங்கள் வசமுள்ள சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவற்றின் மூலம் தொடர்ச்சியான ரெய்டுகளை நடத்தி எதிர்க்கட்சிகளை நிலைகுலையச் செய்துவந்தது பா.ஜ.க. சில தருணங்களில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும், நீதிமன்றங்களின் செயல்பாடுகளும்கூட ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பது போன்ற விமர்சனத்தை ஏற்படுத்தின.
இப்படியான சூழலில் தான், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, சுமார் 4000 கி.மீ. தூரத்திற்கு ராகுல் காந்தி மேற்கொண்ட 'பாரத ஒற்றுமை நடைபயணம்' ராகுல் காந்திக்கும் மக்களுமான இடைவெளியை வெகுவாகக் குறைத்து, மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாக்கிரக தண்டி யாத்திரை, இந்திய மக்களிடையே சுதந்திரத்தீயைப் பரவச் செய்வதில் முக்கிய பங்கு வகித்தது. அதேபோல், ராகுல் காந்தியின் எளிய தோற்றமும், உத்வேகமும், தேசமெங்கும் நடந்தே பயணித்த தியாக உணர்வும், ராகுல் காந்தியை மக்களின் தலைவராக உயர்த்தியது.
இதற்கிடையே மோடியின் நண்பரும், உலகின் நம்பர் 2 பணக்காரருமான கவுதம் அதானியின் பிரமாண்டத்தில் ஓட்டை போட்டது ஹிண்டன்பர்க் நிறுவனம். சீட்டுக்கட்டுபோல அதானியின் பிம்பம் உடைய உடைய... அவரைப் பின்னின்று தாங்கிப்பிடித்த மோடி அம்பலமானார். ஏற்கெனவே மோடியில் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடுமையான ஜி.எஸ்.டி., கட்டண உயர்வுகள், விலைவாசி உயர்வெனப் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுவரும் மக்கள் மத்தியில், அதானி குறித்த ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு மோடியின் கள்ள மவுனம் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது. பாராளுமன்றக் கூட்டுக்குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் அணிதிரண்டு போராட்டங்களில் இறங்க, ராகுலைக் குறிவைத்து திட்டமிட்டது பா.ஜ.க.
அதன்படி, நான்காண்டுகளுக்கு முன்பு சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கொன்றை தற்போது உயிர்ப்பித்து, ராகுல் காந்திக்கு இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை பெறவைத்தனர். அதோடு, மறுநாளே ராகுல் காந்தியின் எம்.பி. பதவியைக் காலி செய்யவைத்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதானிக்கும் மோடிக்கும் எதிராகப் பாராளுமன்றத்தில் குரலெழுப்பிய ராகுலுக்கெதிராக மோடி அரசின் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளை, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து எதிர்த்த ஆச்சர்யம் நிகழ்ந்தது.
ஏனென்றால், தற்போது மோடி நினைத்தால், டெல்லி துணை முதல்வரான மணீஷ் சிசோடியாமீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, சி.பி.ஐ. கைது செய்கிறது. இதேபோல், மேற்கு வங்கம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, புதுச்சேரி எனப் பல மாநிலங்களிலும் பா.ஜ.க. தனது அதிகார பலத்தால் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்துவருகிறது. ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் மிரட்டி அடக்கி, அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை இந்தியாவில் திணித்து, சர்வாதிகாரத்தோடு செயல்படுவதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இச்சூழலில்தான் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை அதிரடியாகப் பறித்திருப்பதெற்கு எதிராக ஓரணியில் திரளவேண்டிய அவசியத்தை எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆம் ஆத்மியின் கெஜ்ரிவால், திரிணாமுல் காங்கிரஸின் மம்த பானர்ஜி, முன்னாள் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட பல்வேறு தலைவர்கள், ராகுலின் எம்.பி. பதவிப்பறிப்புக்கு எதிராகக் கடுமையாகக் கண்டனத்தைத் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் போராட்டத்தை நடத்த, காங்கிரஸ் கட்சி நாடு முழுக்க போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது ராகுல் காந்தி மீது ஏற்பட்டுள்ள அனுதாபம், இந்தியா முழுமைக்கும் மக்களின் எழுச்சியாக உருவெடுத்து வருகிறது. இந்த எழுச்சியை காங்கிரஸ் கட்சிக்கான வாக்குகளாக மாற்றுவது, ராகுல் காந்தி என்ற ஒற்றை மனிதரிடம் தான் இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் நுழைவதற்கான சட்டப் போராட்டத்தை ஒருபுறம் நடத்தியபடியே, மீண்டும் மக்களைச் சந்திக்க நடைபயணத்தை ராகுல் காந்தி தொடங்க வேண்டும். மக்களோடு மக்களாக இயங்கி சுதந்திரப் போராட்டத்தை நடத்திய காங்கிரஸ், மீண்டும் அதேபோன்ற போராட்டமுறைக்கு மாறவேண்டும். சுதந்திரப் போராட்டத்தில், 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைக்கம்பிகளுக்கிடையே கழித்தவரான ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப்பேரன் ராகுல் காந்திக்கு, காலம் மிகப்பெரியதொரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை இன்னும் வலுப்பெறும்!
சட்டம் தந்த வாய்ப்பு! மின்னல் வேகத்தில் செயல்பட்ட ஓ.பி.எஸ். தரப்பு
அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்!