அதிமுக பொன்விழாவை முன்னிட்டு தி.நகரில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மாளிகையில் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் சசிகலா கலந்துகொண்டு கட்சிக் கொடி ஏற்ற இருக்கிறார். கட்சிக் கொடியை ஏற்றிவிட்டு கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைக்க இருக்கிறார் சசிகலா. அந்த கல்வெட்டில் 'அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா' என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக தரப்பில், அதிமுகவின் கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டத்திற்கு விரோதமானது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து வரும் நிலையில் தற்பொழுது இந்த கல்வெட்டு மேலும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் 'அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தவே சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்துகிறார்; நினைவிடம் செல்கிறார்' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்பொழுது விமர்சித்துள்ளார். அதேபோல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உயர்கல்வி மன்றத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலையை தற்போதைய அரசு பராமரிக்கவில்லை. அரசால் ஜெயலலிதா சிலையைப் பராமரிக்க முடியவில்லை எனில் அதிமுகவிடம் கொடுத்து விடலாம் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.