9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதனைக் குறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இந்த 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக முறைகேட்டில் ஈடுபட்டு ஜனநாயகப் படுகொலை செய்து, வெற்றி பெற்றவர்களை தோல்வியுற்றவர்களாக அறிவித்துள்ளார்கள். தேர்தல் ஆணையம் கைப்பாவையாக செயல்பட்டு அரசு சொல்வதை அப்படியே நிறைவேற்றியுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர்களும், முறையாகத் தேர்தல் பணியைக் கவனிக்கவில்லை. ஒன்பது மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆட்சியரை சந்தித்து புகார் கொடுக்க சென்றபோது, அவர்களை சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. உதாரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதனை அறிவிக்க காலதாமதம் ஆனது. அது தொடர்பாக அவர் புகார் தெரிவிக்கச் சென்றபோது அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கிட்டத்தட்ட 6 மணி நேரம் கழித்தே அவரது வெற்றியை அறிவித்தார்கள். அதே திமுகவினரின் வெற்றியை உடனுக்குடன் அறிவித்தார்கள்.
பல்வேறு இடங்களில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அதிமுகவினரை தோல்வியுற்றவர்களாக அறிவித்திருக்கிறார்கள். எனவே இதுபோன்று எங்கெல்லாம் முறைகேடுகள் நடந்துள்ளதோ அவற்றை எல்லாம் புகார் மனுவாக ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளோம். மேலும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளோம்.
இப்படி தேர்தல் நடக்கும் என்று தெரிந்துதான் முதலில் தேர்தல் ஆணையத்தை நாடினோம். ஆனால், தேர்தல் ஆணையம் எங்கள் கருத்தைக் காதில் வாங்கிக்கொள்ளாத காரணத்தினால், நீதிமன்றத்தை நாடினோம். அதனை ஏற்று நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை. இந்த அரசும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. திருப்பத்துர் மாவட்டம், ஆலங்காயம் எனும் ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினரே வாக்குப் பெட்டிகள் வைத்திருக்கும் மையத்திற்குச் சென்று வாக்குப் பெட்டிகளை எடுத்துவரும் காட்சி அனைவரும் பார்த்ததே. ஆனால், அங்கு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த சட்டமன்ற உறுப்பினர் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை.
சட்ட ஒழுங்கு சீர் குலைவு பற்றியும் ஆளுநர் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறோம். சசிகலா அதிமுகவில் இல்லை. கட்சியில் இல்லாத அவரை பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும். தேர்தல் ஆணையமே உண்மையான அதிமுக என்று எங்களைத்தான் சொல்லியுள்ளது” என்று தெரிவித்தார்.