மே 19ஆம் தேதி அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிமுகவில் இருந்து அமமுக சென்று தற்போது திமுகவின் வேட்பாளராக போட்டியிடுகிறார் செந்தில்பாலாஜி. இதனால் அந்த இரு கட்சிகளையும் எதிர்கொள்ள வேண்டிய இடத்தில் உள்ளார். அரவக்குறிச்சியில் வெளியூர் திமுக நிர்வாகிகளையம் தேர்தல் பணியில் அமர்ந்தியுள்ளது திமுக தலைமை. அரியலூர் திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிவசங்கர் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். களநிலவரம் குறித்து அவரை தொடர்பு கொண்டோம்...
எப்படி உள்ளது தொகுதி நிலவரம்?
திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதிமுகவின் பணி செந்தில்பாலாஜி பணிக்கு முன்பு தொய்வடைந்துவிட்டது. செந்தில்பாலாஜியின் திட்டமிடல், அந்த பணிகளை கொண்டுபோய் சேர்க்கிற விதத்திற்கு முன்பு அதிமுகவினரால் ஈடுகொடுக்க முடியவில்லை. அதேபோல வெளியூரில் இருந்து தேர்தல் பணிக்காக வந்துள்ள திமுகவினர் மற்றும் உள்ளூர் திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர். இதனை அதிமுகவினராலோ, அமமுகவினராலோ எதிர் கொள்ள முடியவில்லை.
நான்கு தொகுதியில் அரவக்குறிச்சியில்தான் எடப்பாடி பழனிசாமி கவனம் செலுத்துகிறார். செந்தில் பாலாஜியை தோற்கடிக்க வேண்டும் என்று கட்சியினரை வேலை வாங்குகிறாராமே?
உண்மைதான். எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் இரண்டு பேருமே செந்தில் பாலாஜி மீது கடும் கோபத்தில் உள்ளனர். செந்தில் பாலாஜி மீது கடும் குற்றச்சாட்டுக்களை வைத்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். ஆனால் அவை எதுவும் பொதுமக்களிடம் எடுபடவில்லை. மேலும் உள்ளூர் அதிமுகவினர் முழு மனதோடு வேலை செய்வதாக தெரியவில்லை.
அதிமுக வேட்பாளர்தானே நிற்கிறார். எப்படி அதிமுகவினர் சோர்வடைவார்கள்?
செந்தில்பாலாஜி பணி எப்படி இருக்கும் என்று உள்ளூர் அதிமுகவினருக்கு நன்றாகவே தெரியும். அமைச்சராக இருந்தபோதும், எதிர்க்கட்சியில் இருந்தபோதும் செந்தில் பாலாஜி பொதுமக்களிடம் எப்படி நடந்து கொண்டார் என்பது அதிமுகவினருக்கு நன்றாகவே தெரியும். ஆகையால் அவர் கையாளும் தேர்தல் விதம் அதிமுகவினருக்கு தெரியும். இதனால் அவருக்கு ஈடுகொடுக்க முடியாமல் சோர்ந்துவிட்டனர். அதிமுக வேட்பாளர் கடந்த 2011ல் வேட்பாளராக நின்று தோல்வி அடைந்தவர். அதற்கு பிறகு அவர் கட்சி பணிகளில் ஈடுபடாமல் இருந்திருக்கிறார். ஆகையால் கட்சியின் தொண்டர்களுக்கும் அவருக்குமான நெருக்கம் இல்லை. புதியவராக தெரிகிறார்.
வேலூர் போலவே அரவக்குறிச்சியிலும் ரெய்டு போன்ற விஷயங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறதே?
கடந்த முறை செந்தில் பாலாஜி போட்டியிடும்போது அவரை தம்பிதுரை உள்ளிட்டவர்கள் கூட இருந்து எதிர்த்தார்கள். தற்போது எதிரணியில் இருப்பதாலும், மத்திய அரசு துணையோடும் எதிர்க்கிறார்கள். தொகுதியில் எந்த விதிமுறைகளையும் திமுகவினர் மீறவில்லை. விதிமுறைகளை மீறியதாக இதுவரை தேர்தல் ஆணையம் எந்த வழக்குப்பதிவும் செய்யவில்லை. எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மிகச் சரியாக போய்க்கொண்டிருக்கிறது.
செந்தில்பாலாஜி அதிமுகவில் இருந்தார் பின்னர் அமமுக, அதனைத் தொடர்ந்து தற்போது திமுகவில் இருக்கிறார். இதுபற்றி நீங்கள் பிரச்சாரத்தில் இருக்கும்போது பொதுமக்கள் மற்றும் அரவக்குறிச்சி தொகுதி திமுகவினர் என்ன நினைக்கிறார்கள்?
தொகுதியில் அது ஒரு குற்றச்சாட்டாகவே இல்லை. திமுகவைப் பொறுத்தவரை நல்ல வேட்பாளர் கிடைத்திருக்கிறார் என்றுதான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிதான் அந்த குற்றச்சாட்டை சொல்லிக்கொண்டிருக்கிறாரே தவிர பொதுமக்களோ, திமுகவினரோ செந்தில்பாலாஜியைப் பற்றி எந்த குறையும் சொல்லவில்லை.
செந்தில் பாலாஜிக்கு வெற்றி வாய்ப்பு நெருக்கடியாக இருக்கும் என்று சொல்லுகிறார்களே?
ஆரம்பத்தில் அப்படி சொன்னார்கள். கடந்த 25ஆம் தேதியில் இருந்து இங்கு பணியில் உள்ளோம். மெல்ல மெல்ல தொகுதி மக்களின் செல்வாக்கு இவரது பக்கம் உள்ளது என்பதை அதிமுகவினரே வெளிப்படையாக உணருகிறார்கள். அவரது வெற்றிக்கு எந்த நெருக்கடியும் இல்லை. குறைந்தபட்சம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.