அதற்கு முன்பு வரை நட்சத்திர குடும்பம் என்று பெருமையாக பேசப்பட்ட நடிகர் விஜயகுமாரின் குடும்பம், ஏழரை வருடங்களுக்கு முன் முதல் முறையாக அவரின் மகளான வனிதா மூலம் பொதுவெளியில் எதிர்மறையான விஷயத்துக்காக பேசப்பட்டது. வனிதாவின் குடும்ப வாழ்வில் விரிசல், அவரது குழந்தைக்கான உரிமைப் போராட்டம் என அவ்வப்போது பொதுவெளியில் தன் பிரச்சனைகளைப் பகிர்ந்துள்ளார் வனிதா. சமீபத்தில் அவர் தங்கியிருந்த வீட்டை மையமாக வைத்து பிரச்சனை ஏற்பட்டது. தனக்கு சொந்தமான அந்த வீட்டிற்கு வனிதா ஷூட்டிங் எடுப்பதாகக் கூறி வந்ததாகவும் அப்படியே அதே வீட்டில் நிரந்தரமாக தங்க திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்து காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் கொடுத்திருந்த நிலையில் இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் விஜயகுமாரின் மகன் நடிகர் அருண் விஜயும் மருமகன் இயக்குனர் ஹரியும்தான் காரணம் என்று நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் வனிதா. நம்மிடம் அவர் பேசியது...
”ப்ரீத்தாவுக்கும் ஹரிக்கும் திருமணமாகி, ஹரி எங்கள் வீட்டுக்குள் வந்தபிறகுதான் எங்கள் குடும்பத்தில் பிரச்சனை வர ஆரம்பித்தது. முதலில் என் முதல் கணவரிடம் விவாகரத்து வாங்க முயற்சித்துக்கொண்டு இருக்கும்போது, அவருக்கும் எனக்கும் விவாகரத்து நடக்கக்கூடாது என்று ஹரி பிரச்சனை செய்தார். எங்கள் விவாகரத்து அவருக்கு மானபங்கம் ஆகிவிடும் என்று எங்கள் விவகாரத்தை தடுக்கப்பார்த்தார். ஆனால் எனக்கும் ஆகாஷுக்கும் இடையில் பிரச்சனைகள் அதிகமாகிக் கொண்டேபோனது. ஹரி எங்கள் விவாகரத்து கூடாது என்று சொன்னதை, என் அப்பா என்னிடம் நேரடியாக வந்து சொன்னார். உடனே நான், 'இது என் வாழ்க்கை ஹரி யார் முடிவெடுக்க, அதனால் இனி அவர் சொல்வதை எல்லாம் என்னிடம் எடுத்து வராதீர்கள்' என்று சொல்லிவிட்டேன். அப்போது ஹரிக்கு இன்டஸ்ட்ரியில் நல்ல மார்க்கெட், ஆனால் அருணுக்கு மார்க்கெட் கிடையாது. அதனால் அவர் சொல்வதைத்தான் நாங்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்னும் நினைப்பில் ஹரி இருந்தார். அதேபோல் என் அப்பாவிற்கும், ஹரியை வைத்து அருணுக்கு ஒரு படம் கொடுத்துவிட வேண்டும், அதனால் ஹரி சொல்வதற்கெல்லாம் என் அப்பா தலையாட்டிக் கொண்டிருந்தார். ஹரியின் கை காலில் விழுந்து அருணை வைத்து படம் எடுக்கும்படி கேட்டார். ஆனால் அவர் கடைசி வரை அருணை வைத்து படம் எடுக்கவில்லை. இது எல்லாம் எங்கள் குடும்பத்தில் நடந்த அரசியல்” என்று இவ்வளவு பிரச்சனைகளுக்கும் தன் அண்ணனும் மைத்துனனும்தான் காரணம் என்று குறிபிட்டார்.
அருணுக்கு படங்கள் அமையவில்லை என்றதும் அவனுக்கு ஒரு நல்ல பணக்காரக் குடும்பமாய் பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தார்கள். அப்படி நடந்தால் பொண்ணு வீட்டில் அருணை பார்த்துக்கொள்வார்கள் என்று கணக்கு போட்டாங்க. அதுபோலவே நடந்தது. ஆனால் எங்கள் வீட்டில் யாருக்கும் அந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. அதன் பிறகு அருணை வைத்து ஏழு படங்களை அவரின் மாமனார் தயாரித்தார். அதனால் அவருக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என்று எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும்.
என் வீடு பிரச்சனை என்பதை எல்லாம் தாண்டி சில பேர் ஷூட்டிங்காக வந்தவங்க, இன்னிக்கு புழல் சிறையில் இருக்காங்க, அவங்களுக்காகவாது நான் போராடியாகணும். அன்னிக்கு இரவு நாங்க ஷூட்டிங் எடுத்துட்டு இருந்த வீட்டுக்குள் புகுந்து என்னுடன் இருந்த எல்லாரையும் அடித்து கைது செய்தனர். கைதானவர்கள் எல்லாம் என் அடியாட்கள் என்றும் அவர்களை வைத்து என் அப்பாவை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும் நான் அந்த வீட்டில் இருந்த வெள்ளி பொருட்களை எல்லாம் திருடிக்கொண்டு வந்துவிட்டேன் என்று போலீசில் எஃப்.ஐ.ஆர் பதிந்து இருக்கிறார்கள். இது அவர் மட்டும் தனித்து எடுத்து முடிவுகள் கிடையாது. இதன் பின்னால் ஹரி, அருண் என்று என் குடும்ப நபர்கள்தான் இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் எனக்கும் ஹரிக்கும் எப்போதும் ஒத்துவராது. காரணம், அவர் மட்டும்தான் பெரிய இயக்குனர் என்று அவர் மனதில் நினைப்பு. ஆனால், இப்போது அவருக்கும் மார்க்கெட் இல்லை. அருணும் இப்போதுவரை ஒரு முயற்சியில்தான் இருக்கிறார். இந்த சமயத்தில் நான் தனியாக ஒரு படம் எடுக்கும் அளவிற்கு வளர்ந்து இருப்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எளிமையாக சொல்லவேண்டும் என்றால் எங்கள் வீட்டு ஆண்களுக்கு பெண்களை ஊக்குவிக்கும் தன்மையே கிடையாது".