கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக கடந்த 50 நாட்களாக நீடித்து வரும் பொது ஊரடங்கினால் நாடு முழுவதும் பல்வேறு பணிகள் முடக்கப்பட்டன. அதில் அரசியல் கட்சிகளின் பணிகளும் அடங்கும். பொது வெளியில் அரசியல் கட்சிகள் நிவாரண உதவிகள் வழங்குவதைத் தவிர, அந்தக் கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகளும் முடங்கிப் போயின!
குறிப்பாக, தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டம், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான தேர்வு உள்ளிட்ட பல முக்கியப் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டன. ஆளும் கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல்கள் உள்ளிட்டவைகளுக்கு எதிராக நடத்தப்படும் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களும் மிஸ்ஸிங்!
இந்த நிலையில்தான், அரசியல் நடவடிக்கைகளை ஆன்லைனில் தொடர்வோம் என முடிவு செய்து கட்சியினருடன் காணொலி காட்சி மூலம் பேசத் துவங்கினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். காணொலி காட்சி மூலம் அரசியலை முன்னெடுக்கும் பணியைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறார். தி.மு.க.வைப் பின்பற்றி தங்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளன.
அந்த வரிசையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவு தலைவர் சந்திரசேகரன், தமிழகம் முழுவதுமுள்ள கலைப்பிரிவின் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நிகழ்வை முன்னெடுத்திருந்தார். சமீபத்தில் நடந்த அந்தக் காணொலி காட்சியின் வழியாகக் கலைப்பிரிவு நிர்வாகிகளுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், கட்சியின் கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரனும் விவாதித்தனர்.
கரோனா நெருக்கடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கலைப்பிரிவு சார்பில் செய்யப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், வெளி மாநிலத் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்குரிய உதவிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசித்தார் கே.எஸ்.அழகிரி. தங்கள் மாவட்டத்திலுள்ள பிரச்சனைகள், அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காத சூழல், தாங்கள் செய்துள்ள பணிகள் என அனைத்தையும் விவரித்தனர் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் கணொலியில் கலந்துகொண்ட கலைப்பிரிவு நிர்வாகிகள்.
இந்த நிகழ்வின் போது, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் குறித்த பல நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் கே.எஸ்.அழகிரி. கலைப்பிரிவினருடன் மனம் திறந்த கே.எஸ். அழகிரி, ‘’கலை என்றாலே அது நடிகர் திலகம் சிவாஜிதான். தமிழகத்திற்கு தேசிய சிந்தனைகளை ஊட்டியவர் சிவாஜி. சிவாஜியின் ஒவ்வொரு திரைப்படமும், அவரது அங்க அசைவுகளும், ஒவ்வொரு செயல்பாடும் தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு வலுசேர்த்தது என்பதை யாரும் மறைத்துவிட முடியாது.
ஒரு காலத்தில் திராவிடமா? தேசியமா? என்கிற சூழல் வந்தபோது, பெருந்தலைவர் காமராஜருடன் தேசியத்தைத் தூக்கி நிறுத்தியவர் அண்ணன் சிவாஜி அவர்கள். இன்றைக்கும் சிவாஜி அவர்களின் பெயரால் கலைப்பிரிவின் மூலம் அதன் தலைவர் சந்திரசேகரனும் மற்ற நிர்வாகிகளும் பல்வேறு பணிகளைச் செய்து வருவது மகிழ்ச்சியைத் தருகிறது‘’ என்று சிவாஜியை நினைவூகூர்ந்தார் கே.எஸ்.அழகிரி.
கலைப்பிரிவு நிர்வாகிகளிடன் தொடர்ந்து பேசிய அவர், ‘’இன்றைக்கு ஒரு உயிர்க்கொல்லி நோய் உலகம் முழுவதும் வந்திருக்கிறது. பல நாடுகள் சிறப்பாக இந்த விவகாரத்தைக் கையாளுகிறார்கள். இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்மையான ஒத்துழைப்பைக் காங்கிரஸ் தந்து வருகிறது. அதே நேரத்தில், அரசாங்கத்தின் தவறுகள், மெத்தனப்போக்குகள், இயலாமைகள், அதனால் ஏற்படும் இழப்புகளை எடுத்துச் சொல்ல வேண்டிய எதிர்க்கட்சி பொறுப்பில் நாம் இருக்கிறோம்.
ஒரு பேரிடர் நிகழ்ந்துள்ள நேரத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கலாமே தவிர அவர்கள் செய்கிற தவறுகளைக் கண் மூடித்தனமாக ஆதரித்து விட முடியாது. அப்படித் துணை போனால் வரலாறு நம்மை மன்னிக்காது‘’ என்பதில் தொடங்கி இந்தப் பேரிடர் காலத்தில் மத்திய-மாநில அரசுகள் செய்துள்ள பல தவறுகளையும் சுட்டிக்காட்டியதுடன், பாதுகாப்பு கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்ய கலைப் பிரிவு நிர்வாகிகளுக்கு வலியுறுத்தினார் கே.எஸ்.அழகிரி.