Skip to main content

ஊரடங்கை நீட்டிக்காதீர்கள்! மத்திய அமைச்சரின் அவசரக் கடிதம்!  

Published on 16/05/2020 | Edited on 16/05/2020


                      

nitin gadkari


தேசிய ஊரடங்கை நீட்டிப்பது குறித்து 18- ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என மோடி தெரிவித்திருக்கும் நிலையில், ஐ.சி.எம்.ஆர். நிறுவனமும், மத்திய சுகாதாரத்துறையும், ஊரடங்கை முழுமையாக விலக்கிக் கொள்ளக்கூடாது என்றும் படிப்படியாகத் தளர்வுகள் செய்த பிறகே ஊரடங்கை விலக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஊரடங்கை விலக்கிக் கொண்டால் பொதுப் போக்குவரத்தை முழுமையாகத் திறந்து விட வேண்டியதிருக்கும். பொது போக்குவரத்தைத் திறந்து விடுவதன் மூலம், கரோனா பரவல் அதிகமாகும். அதனால் ஊரடங்கைப் படிப்படியாகக் குறைப்பது மட்டுமே சரியான நடவடிக்கை. ஜூன் மாதத்தில் ஊரடங்கை முடிவுக்குக் கொண்டு வரலாம் என பிரதமர் மோடிக்கு ஐ.சி.எம்.ஆர். நிறுவனமும், மத்திய சுகாதாரத்துறையும் அறிக்கைத் தந்துள்ளது என்கிறார்கள் டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகள். 
 


இந்த நிலையில், மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி, கரோனா வைரஸ் இயற்கையாகத் தோன்றவில்லை. ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகத் தகவல் வருகிறது. அதனால், அந்த வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், ஊரடங்கை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் என்கிற ரீதியில் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். மத்திய அமைச்சர்களிடம் இந்தக் கடிதம் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.