மத்திய அரசு கரோனா நிவாரணம் தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளைக் கடந்த சில நாட்களாக மத்திய நிதியமைச்சர் மூலம் அறிவித்து வந்தது. அதில் புலம்பெயர்ந்த தொழிலாளார்களுக்கு நிவாரணம் அளிப்பதை விட அனைத்து துறைகளிலும் தனியார்மயத்தை அனுமதிப்பது என்னும் முடிவுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதமாக இருந்தது. இது தொடர்பாக பத்தரிகையாளர் கோவி.லெனின் கூறியதாவது,
"மத்திய அரசு இந்த கரோனா வந்த பிறகு இதைச் சாதித்துவிட்டோம், அதைச் சாதித்துவிட்டோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். அவர்கள் கூறுவது அனைத்தும் வடிகட்டிய பொய் என்று நமக்கு ஏதாவதொரு சம்பவங்கள் தொடர்ந்து காட்டி விடுகின்றன. உண்மையான இந்தியாவின் நிலையைக் காட்டுவது இந்தப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தற்போதைய நிலைதான். எல்லோரும் வீட்டில் இருங்கள், அமைதியாக அரசு சொல்வதைக் கேட்டால்தான் இந்தப் போரில் வெற்றி அடைய முடியும் என்று முதல் ஊரடங்கு ஆரம்பிக்கப்படும் முன் பிரதமர் அவர்கள் பேசினார்.
உடனே அவர் பேச்சை கேட்டு சென்னை, மும்பை போன்ற நகரங்கள் எல்லாம் ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாமல் இருப்பதைத் தொலைக்காட்சிகளில் எல்லாம் தொடர்ந்து காட்டினார்கள். ஊரடங்கு ஆரம்பித்த சில நாட்களில் டெல்லியில் புலம்பெயர்ந்த தொழிலார்கள் எங்களை எங்கள் வீடுகளுக்கே கொண்டு சேர்ந்துவிடுங்கள் என்று சாலைகள் குவிந்து, கிடைந்த பேருந்துகளில் ஏறிக்கொண்டது தான் உண்மையான இந்தியாவின் நிலையாக இருக்கின்றது. இங்கே எங்களுக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை, எங்கள் வீட்டுக்குச் சென்றால்தான் எங்களை நாங்கள் தற்காத்துக்கொள்ள முடியும் என்ற குரலே இந்தியாவின் மொத்த குரலாக அப்போது இருந்தது. இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் இப்படித்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அம்பானிகளோ அதானிகளோ இல்லை என்பதை அந்த நிகழ்வு நம் எல்லோருக்கும் காட்டியது.
அன்றில் இருந்து இன்று வரை புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையை இந்த அரசு கொஞ்சம் கூட கவனிக்கவில்லை என்பதே நிஜம். அதனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்றால், பொடிநடையாக நடக்க ஆரம்பித்தார்கள். மிதிவண்டியில் செல்ல ஆரம்பித்தார்கள். ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை எப்படியாவது கடந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்கள். கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டவர்களும் நடக்க ஆரம்பித்தார்கள், சிலருக்கு மயக்கம் வந்து வழியிலேயே விழுந்தார்கள். சிலருக்கு அங்கேயே குழந்தை பிறந்தது. பட்டினியால் இறந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இப்படியான உண்மைகள் ஒவ்வொரு முறையும் வெளியே வருகின்ற போது மோடியை அமெரிக்கா பாராட்டியது, உலக சுகாதார நிறுவனம் பாராட்டியது போன்ற பிம்பங்கள் எல்லாம் உடைந்து போகின்றது. எப்படி மேக்கப் போட்டாலும் மண்டையில் இருக்கின்ற கொண்டையை மறைக்காவிட்டால் உண்மை வெளிவந்துதானே ஆகும்.
இப்படி இருக்கும் நிலையில் இந்த நாட்டை தற்சார்ப்பு நிலைக்குக் கொண்டு வர 20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்கிறோம் என்று மோடி சொல்லிவிட்டு போகிறார். இதை ஒவ்வொரு நாளும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொலைக்காட்சிகளில் தோன்றி அறிவிப்புகளாகக் கூறிவந்தார். அப்போதுதான் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு தர ஒரு தொகுப்பை ஒதுக்குகிறார்கள். அவர்களுக்குக் கொண்டைக்கடலை தரப்படும் என்று அறிவிக்கிறார்கள். 50 நாட்கள் கழித்து இந்த அறிவிப்பை அறிவிக்கிறார்கள். ஆனால் அம்பானி, அதானி, வேதாந்தா முதலிய நிறுவனங்களுக்கு என்ன கிடைக்கின்றது தெரியுமா? ஆகாயம் முதல் பாதாளம் வரை இருக்கின்ற அனைத்து அரசுத் துறைகளும் தனியார் மயமாக்கப்படுகின்றது. இதுதான் இந்த இருபது லட்சம் கோடியோட சிறப்புத் தொகுப்பு. ஏழைகளுக்குப் பணம் கொடுப்பார்கள் என்று நினைத்தால் இந்தியாவில் உள்ள அரசு நிறுவனம் அனைத்தையும் தனியார் மயமாக மாற்றியுள்ளார்கள். இதுதான் இவர்களின் சாதனை" என்றார்.