Skip to main content

5 லட்சம் பேர் பலி! எப்படி சுவாசிக்கிறார்கள்? உச்சநீதிமன்றத்தின் கவலையும், அதிர்ச்சியும்

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

 

 

d

 

‘’எப்படி சுவாசிக்கிறார்கள்?’என்று கவலையும், அதிர்ச்சியும் கலந்து கேட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.

 

உலகம் முழுவதிலும் காற்று மாசுபாடு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் நிலையில்,   டெல்லியை கடந்த ஒரு மாதமாக அச்சுறுத்தி வருகிறது காற்று மாசு. டெல்லியில் காற்றுமாசு குறியீட்டு எண் 600 ஆக அதிகரித்துவிட்டதை சுட்டிக்காட்டி, காற்று மாசு மிகவும் மோசமாக உள்ள டெல்லியில் மக்கள்  எப்படி சுவாசிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது உச்சநீதிமன்றம். மேலும், டெல்லி நகரம் முழுவதும் காற்றை தூய்மைப்படுத்தும் கருவிகளை நிறுவ திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்நிலையில்,  காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகள் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்ற ஆய்வறிக்கை அதிரவைக்கிறது.   லான்செட்  அமைப்பு வெளியிட்டுள்ள அந்த ஆய்வறிக்கையில், 5 லட்சம் பேரில் 97 ஆயிரம் பேர் நிலக்கரி புகையினால் உயிரிழந்துள்ளனர் என்று கூறியுள்ளது. 

d

 

காற்று மாசுவினால் கடந்த 2017ம் ஆண்டில் உலக அளவில் 6 லட்சம் குழந்தைகள் உயிரிழந்தனர் என்றும், இந்தியாவில் ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்றும் உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டது.  உலகில் 93 சதவிகித குழந்தைகள் மாசுள்ள காற்றை சுவாசிக்கின்றனர் என்றும்,  காற்று மாசுக்கு பெரியவர்களை விட குழந்தைகளே அதிகம் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். வளர்ந்த நாடுகளில் 52 சதவிகித குழந்தைகள் காற்று மாசுவினால் பாதிக்கப்படுவதாகவும்,   இந்தியாவில் 98 சதவிகித குழந்தைகள் தூய்மையற்ற காற்றை சுவாசித்து அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.  வீடு மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்பட்டும் வரும் காற்று மாசுபாடே உயிரிழப்புகளுக்கு காரணம் என்றும், உலகம் முழுவதிலும்  நச்சுக்காற்றினால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்தது.  

 

d

 

மேலும், நைட்ரஜன் ஆக்சைடு வாயுவை வெளியிடும் உலகின் மூன்று பகுதிகள் இந்தியாவில் உள்ளது என்றும், இதன் காரணமாக கடந்த 2017ம் ஆண்டில் 1,17,788 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர், என்றும் இந்தியாவின் காற்று மாசுபாடு குறித்து கிரீன் பீஸ் அமைப்பும் கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 உலக அளவில் காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் குர்கான் நகரம் முதலிடத்தில் உள்ளது என்றும், உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட 10 நகரங்களில் 7 நகரங்கள் இந்தியாவில் உள்ளன என்றும் மேலும் சில ஆய்வறிக்கைகள் அதிரவைக்கின்றன.