பிரதமர் நரேந்திரமோடி விசிட் பல அரசியல் திருப்பங்களை உருவாக்குமா அல்லது வழக்கம்போல பி.ஜே.பி.யினர் மட்டும் கலந்துகொள்ளும் கலகல கச்சேரி விசிட்டாக சுருங்கிப் போகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலை ஒட்டி பா.ஜ.க.வினர் மிகவும் ஆக்டிவாக இருப்பதாக ஒரு இமேஜை தங்களது தேசியத் தலைமைக்கு சொல்லி வருகிறார்கள்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்பதையே ஒரு நெகட்டிவான விசயமாக தேசியத் தலைமை பார்த்துவிடக் கூடாது என்பதில் தமிழக பா.ஜ.க. உறுதியாக நிற்கிறது. அதற்காக ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லாததால் தமிழக பா.ஜ.க. வளர்கிறது என்பதுதான் பா.ஜ.க. உருவாக்க நினைக்கும் திட்டம். அதற்காகத்தான் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் கிடைத்ததாக ஒரு கதையைக் கிளப்பி விட்டார்கள்.
அந்த ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழை வானதிக்கு கொடுத்தது பா.ஜ.க.வின் சமூக வலைத்தள பொறுப்பாளர் ஷாலு குப்தாவின் கம்பெனி. வானதி அலுவலகத்தில் 2023ஆம் ஆண்டு ஒரு நபர் மர்மமாக இறந்தார். வானதியின் உறவினரான ஏ.எம்.கே.மணிவண்ணன் என்பவர் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாக ஒரு புகார் எழுந்தது. இப்படி மரணம், பாலியல் தொந்தரவு என புகழ்பெற்ற வானதியின் மர்ம அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் எப்படி வழங்கலாம் என சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன. அந்த ஐ.எஸ்.ஓ. சான்றிதழை சபாநாயகரிடமும் பா.ஜ.க. தலைவர்களிடமும் மட்டும் காட்டி போட்டோ எடுத்துக்கொண்டார் வானதி.
வானதியைப் போலவே நயினார் நாகேந்திரனும் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டார். பிரதமரின் 27ஆம் தேதி விசிட் தமிழக பா.ஜ.க.வின் "என் மண் என் மக்கள்'’ யாத்திரையோடு முடிந்துவிடக் கூடாது. தமிழகத்தின் தென் பகுதிக்கும் பிரதமர் வரவேண்டும் என அவரது தொகுதியான திருநெல்வேலிக்கு மோடி வரவேண்டும் என கோரிக்கை வைத்தார். நயினாரின் கோரிக்கை ஏற்கப்பட்டது. பிரதமர் 28ஆம் தேதி திருநெல்வேலிக்கு செல்கிறார். பிரதமரை வரவேற்க திருப்பூரில் நடைபெறும் கூட்டத்திற்காக கொங்கு பெல்ட் பகுதிகளில் பொதுமக்களைத் திரட்டுவதற்காக பியூஷ்கோயல் மூலம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலுமணிக்குப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் பொதுமக்களைத் திரட்டும் பொறுப்பு ஓ.பி.எஸ். வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்படி அ.தி.மு.க. கூட்டணி இல்லை என்று ஆனாலும் ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் நரேந்திர மோடிக்காக ஆட்களைக் கொண்டுவரும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுமட்டும் போதாதென்று அனைத்துக் கட்சிகளிலும் இருக்கக்கூடிய பிரபலங்களை பா.ஜ.க.வில் கொண்டுவந்து சேர்ப்பதற்கென முன்பு கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை பிடித்து பணம், மற்ற பல வசதிகள் செய்து கொடுத்தது போல கோடிக்கணக்கில் பணம் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு பா.ஜ.க.வின் தேசியத் தலைமையில் இருந்தே கொடுக்கப்பட்டுள்ளது. இதை எடுத்துக்கொண்டு தமிழகம் முழுவதும் பா.ஜ.க. நிர்வாகிகள் சுற்றிவருகிறார்கள். யார், யார் எந்தக் கட்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என லிஸ்ட் தயாரிக்கப்பட்டு அந்த முக்கியஸ்தர்களுக்கு ஒரு ரேட் என கோடிக்கணக்கான ரூபாய் பேரம் பேசப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என பதினைந்து பேரை பிடித்து வேலுமணி ஆதரவுடன் கொங்கு பெல்ட் பகுதிகளில் திரட்டப்பட்ட அந்த நபர்கள் மிகவும் வயதானவர்கள், அரசியல் செயல்பாட்டில் இல்லாதவர்கள் என கேலியும் கிண்டலும் எழுந்தது. இந்தியா முழுவதும் பா.ஜ.க.விற்கு சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் வயதானவர்களை சேர்க்கிறார்கள் என நக்கலான விமர்சனம் எழுந்தது. அதனால் பிரதமர் முன்னிலையில் சேரும் நபர்கள் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களாக இருக்க வேண்டும் என்று கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதற்காக பிள்ளை பிடிப்பவர்களைப் போல ஒரு டீம் தமிழகம் முழுவதும் அலைந்துகொண்டிருக்கிறது. சிட்டிங் எம்.எல்.ஏ.க்களாக வருபவர்கள் கட்சித் தாவல் தடுப்புச் சட்டப்படி பதவிகளை இழக்க நேரிடும். அப்படி ஒரு நிலை வந்தால் அவர்கள் எம்.எல்.ஏ.க்களாக இருந்தால் எவ்வளவு சம்பாதிப்பார்களோ அவ்வளவு தொகை நாங்கள் தருகிறோம் என வலை வீசப்படுகிறது. எத்தனை கோடி ஆனாலும் பரவாயில்லை, பிரதமரின் விழாவை வெற்றிகரமாக மாற்றுவோம் என தமிழகத்தில் உள்ள வி.ஐ.பி.க்களைக் குறிவைத்து அவர்களை பிரதமர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைப்போம் என தமிழக பா.ஜ.க. டீம் சூதாட்ட பாணியில் காய் நகர்த்தி வருகிறது.
இந்தத் தேடலில் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஐந்து எம்.எல்.ஏ.க்கள் சிக்கியுள்ளார்கள். அந்த ஐந்து பேரையும் பா.ஜ.க.வில் சேர்த்தால் கட்சித்தாவல் தடுப்புச் சட்டம் அவர்கள் மீது பாயாது. அவர்களில் ஒருவர் ஒரு மிகப்பெரிய தலைவர். இன்னொரு முக்கியத் தலைவர். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். மிகப்பெரிய தலைவரை பா.ஜ.க.வின் சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் அவரது விசுவாசியான தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவரை பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராகவும் கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கிறது. முக்கியத் தலைவரும் தஞ்சை மாவட்டத் தலைவரும் எடப்பாடிக்கு எதிரானவர்கள். பிரதமர் தனது பேச்சில் பா.ஜ.க. கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளாத எடப்பாடியையும் மறைமுகமாக விமர்சிப்பார் என்கின்றன பா.ஜ.க. வட்டாரங்கள்.