உலகிலேயே உடைகளுக்காக அதிக செலவு செய்கிற பிரதமர் இந்தியாவின் மோடியாகத்தான் இருக்கும் என்கிறார்கள். அந்த அளவுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 3 விதமான உடைகளை அவர் அணிகிறார். ஒருமுறை அணிந்த உடையை மீண்டும் அவர் அணிவதில்லை என்ற பெருமை வேறு பேசிக்கொள்கிறார்கள்.
இந்தியா போன்ற ஏழை தேசத்தின் அரசு செய்யும் வீண் செலவு மிகமிக அதிகம். கல்விக்காக செய்யும் செலவைவிட வீண் செலவுகள் அதிகம் என்கிறார்கள். இந்திய குடியரசுத் தலைவருக்கும் அவருடைய மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பராமரிப்புச் செலவுகளும் மலைப்பை ஏற்படுத்துகிறது.
இதேபோலத்தான் ஒவ்வொரு மாநிலத்தின் ஆளுநர் மற்றும் அவர் தங்கியிருக்கும் மாளிகை ஊழியர்களுக்கான செலவும் எந்த பயனும் இல்லாதது என்ற கருத்து நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது.
ஆனாலும், இந்தியாவின் தேர்தல் செலவுதான் இன்றைய மோடி தலைமையிலான பாஜக அரசின் கண்ணை உறுத்துகிறது. சரி, புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தின்கீழ் 1952 ஆம் ஆண்டு முதன்முதல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் சேர்த்துதானே தேர்தல் நடைபெற்றது.
பிறகு எப்படி இப்போது மட்டும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சில மாநிலங்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. வெவ்வேறு கால இடைவெளியில் பல மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறுகின்றன?
மத்திய அரசு தனது சுயநலத்துக்காக செய்யும் ஆட்சிக் கலைப்புகளுக்கு ஆளான மாநிலங்களுக்கும், பெரும்பான்மை இழந்ததால் கவிழ்ந்த மாநிலங்களுக்கும் மட்டுமே இப்போது வெவ்வேறு ஆண்டுகளில் தேர்தல் நடைபெறுகிறது. மத்திய அரசுகளே முழு பதவிக் காலம் நிறைவதற்குள் கவிழ்ந்திருக்கின்றன. அதன் காரணமாகவும் மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்கள் மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது.
உண்மை நிலைமை இப்படி இருக்க, இப்போது ஒரே தேசம், ஒரே தேர்தல் என்று மோடி ஒரு மாய்மால வித்தையை அரங்கேற்ற முயற்சிக்கிறார். இதை நிறைவேற்றுவதில் மத்திய அரசு பிடிவாதமாக இருந்தால் பல மாநிலங்களில் இப்போதிருக்கிற அரசுகளை பதவிக்காலம் முடிவதற்குள் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
சரி, ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசு பெரும்பான்மை பலம் இழந்தால் அது கவிழாதா? அந்த அரசு கவிழ்ந்து தேர்தல் நடத்த நேர்ந்தால், மாநில அரசுகளையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தப்படுமா? அல்லது, மத்தியிலும் மாநிலத்திலும் பொறுப்பேற்கிற அரசுகள் பெரும்பான்மை இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிக்க வகை செய்யப்படுமா? அது எப்படி?
இதுதொடர்பாக மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ், திமுக, திரிணாமுல், தெலுங்குதேசம் உள்ளிட்ட 11 கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளன. ஆனால், பெரும்பாலான கட்சிகள் மோடியின் திட்டத்தை ஆதரித்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகிறார். கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்ததாக அவர் பேட்டியில் சொல்கிறார். ஆனால், அதற்கு மாறாக சீதாராம் யெச்சூரி பேட்டி கொடுக்கிறார்.
செலவுகளைக் குறைப்பதுதான் அரசின் நோக்கமென்றால் அரசாங்கத்தின் வீண் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுத்தாலே போதும். அதைவிடுத்து ஜனநாயகத்தின் அடித்தளத்தையே சிதைக்கும் வகையில் தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டுவரத் துடிப்பது சந்தேகத்தையே வலுப்படுத்துகிறது. தேர்தல் முறையை மாற்றுவதற்கு முன், தேர்தல் நியாயமாகத்தான் நடக்கிறது என்பதையும், வாக்காளர்கள் தாங்கள் விரும்பிய கட்சிக்குத்தான் வாக்களித்தார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டியதுதான் முக்கியம். செலவைக் குறைக்க வேண்டும் என்று மோடி நினைத்தால், ஸ்வீடன் நாட்டு அரசாங்கத்தை மாதிரியாக கொண்டு நிர்வாகத்தை மாற்றி அமைக்கலாம்.
ஆம், அந்த நாட்டு அரசு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சர்களுக்கு சிறப்பு உரிமைகளை கொடுப்பதில்லை. அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசுக் கார்களோ, அவற்றுக்கு டிரைவர்களோ கொடுப்பதில்லை. அவர்கள் பொதுமக்களைப் போல பஸ்களிலும் ரயில்களிலும் கூட்டத்தோடு கூட்டமாகவே பயணிக்க வேண்டும்.
அமைச்சர்களாக இருந்தாலும் நீதிமன்ற விசாரணையில்கூட விலக்கு பெறமுடியாது. அமைச்சர்களுக்கு மிகச்சிறிய அலுவலக அறை மட்டுமே கொடுக்கப்படும். அவர்களுக்கு தனிச்செயலாளர் யாரும் நியமிக்கப்பட மாட்டார்கள்.
“நாங்கள்தான் அமைச்சர்களின் செலவுக்கு பணம் கொடுக்கிறோம். அவர்கள் எங்களைப்போலத்தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு எதற்காக ஆடம்பர வாழ்க்கை?” என்று ஸ்வீடன் குடிமகன் ஒருவர் சொல்லும் நிலைதான் அங்கிருக்கிறது. இத்தனைக்கும் பாதுகாப்பு இல்லாததால் ஸ்வீடன் பிரதமர் ஒருவர் நடந்து செல்லும்போது கொல்லப்பட்டார். அப்படியும் கூட பிரதமர் மட்டுமே பாதுகாப்பு படையினரின் ஒரு காரை பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டது. சில மாதங்கள்வரை வாடகைக் கார்களை பயன்படுத்த அனுமதி இருந்தது. ஆனால், இப்போது அதுவும் பறிக்கப்பட்டு, பஸ்கள், ட்ரெயின்களில் இலவசமாக பயணம் செய்ய சலுகை வழங்கப்பட்டுள்ளது. சபாநாயகரும் விதிவிலக்கில்லை.
ஸ்வீடனில் பணிபுரியும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் வாங்கும் சம்பளத்தைப் போல இருமடங்கு மட்டுமே அமைச்சர்களும் எம்.பி.க்களும் சம்பளம் வாங்குகிறார்கள்.
இதுபோன்ற நாடுகளை முன்னுதாரணமாக கொண்டு செயல்பட்டால், இந்தியாவை நிஜமாகவே வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும். அம்பானியும் அதானியும் வளர உதவும் மோடி போன்ற ஆட்கள் பிரதமராக இருக்கும்வரை இந்தியாவில் கார்பரேட் நிறுவனங்கள் மட்டுமே வளரமுடியும்.