Skip to main content

வேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக ! உற்சாகத்தில் திமுக !

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியின் பலத்த சிபாரிசு ஒருபக்கம் இருந்தாலும் கட்சியினர் மத்தியில் இருக்கும் செல்வாக்கு, சாதி அடிப்படையிலான வாக்கு வங்கி நிலவரம் இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் திண்டுக்கல் தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக வேலுச்சாமியை அறிவித்திருக்கிறார் மு.க. ஸ்டாலின். 

periyasamy



தொகுதி தி.மு.க.வுக்குத்தான் என உறுதியானதும் எம்.எல்.ஏ.க்களான ஒட்டன்சத்திரம் சக்கரபாணி, நத்தம் ஆண்டி அம்பலம், பழனி செந்தில்குமார் ஆகியோருடன் பலகட்ட ஆலோசனைகளுக்குப் பின்தான் வேலுச்சாமியை செலக்ட் பண்ணியிருக்கிறார் ஐ.பெரியசாமி. வேலுச்சாமிக்காக கணிசமான தொகையை செலவழிக்கவும் தயார் என கட்சித் தலைமையிடம் ஐ.பி. சிக்னல் போட்ட பிறகு எல்லாம் சுமுகமாக முடிந்திருக்கிறது. 

ஒட்டன்சத்திரம் தொகுதிக்குள் வரும் ஜவ்வாதுபட்டியைச் சேர்ந்த விவசாயியான வேலுச்சாமி கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூத்தைச் சேர்ந்தவர். வேலுச்சாமியின் மாமனார் சண்முகம், வளையப்பட்டி ஊராட்சி தி.மு.க. செயலாளராக இருக்கிறார். ஒட்டன்சத்திரம் ந.செ.வெள்ளைச்சாமி, ஒ.செ. ஜோதீஸ்வரன் ஆகிய இருவரும் வேலுச்சாமியின் நெருங்கிய உறவினர்கள். பலமான சமூக பின்னணி இருந்தாலும், சாதிப்பாகுபாடு பார்க்காமல் கட்சியினர் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வேலுச்சாமிக்கு சீட் கிடைத்திருப்பதால் உ.பி.க்களிடையே உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. 
 

ips


தி.மு.க.வில் நிலவரம் இப்படி என்றால் அ.தி.மு.க.வில் கொந்தளிப்பு இன்னும் அடங்கவேயில்லை. அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். ஆரம்பித்தபோது நடந்த திண்டுக்கல் இடைத் தேர்தலில் வெற்றிவாகை சூடி, அக்கட்சியின் அரசியல் வாழ்வுக்கு அச்சாரம் போட்ட தொகுதி. அப்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது தி.மு.க. அப்படிப்பட்ட திண்டுக்கல் தொகுதியை, கூட்டணிக்கட்சியான பா.ம.க.வுக்கு தாரை வார்த்த தலைமை மீது கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் மாவட்ட ர.ர.க்கள். 

sakrapani

 இந்த மாவட்டத்தைப் பொறுத்த வரை மாஜி நத்தம் விஸ்வநாதனும் "பேச்சு' புகழ் அமைச்சரான சீனிவாசனும் எப்போதுமே எதிரும் புதிருமாக வரிந்து கட்டுவார்கள். "எனது மைத்துனன் கண்ணனுக்கு மா.செ. பதவியும் எம்.பி. சீட்டும் கொடுங்க, என்ன செலவானாலும் நான் பார்த்துக்குறேன்'' என இ.பி.எஸ்.சிடமும் ஓ.பி.எஸ்.சிடமும் பிட்டைப் போட்டிருக்கிறார் நத்தம். 
 

viswanathan

 விடுவாரா சீனி, "கட்சியின் சீனியரான மருதராஜை மா.செ. பதவியிலிருந்து தூக்கக்கூடாது' என கொடி பிடித்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் நத்தத்தையும் சீனியையும் கூப்பிட்டு பஞ்சாயத்து பண்ணியும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. பார்த்தார்கள் இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் "நீங்க இப்படியே மல்லுக்கட்டிக்கிட்டிருங்க, தொகுதியை பா.ம.க.வுக்கு கொடுத்துருவோம்'' என முடிவெடுத்து அப்படியே செய்தும்விட்டார்கள். 

தொகுதியின் பா.ம.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஜோதிமுத்துவும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். ஒட்டுமொத்த தொகுதியிலும் ஒரு லட்சம் வன்னிய சமூக வாக்குகள் இருக்கின்றன. பா.ம.க.வுக்கென இருக்கும் வாக்கு வங்கி வீக்காகவே இருக்கிறது. இதில் கிறிஸ்தவ வன்னியர்கள் பா.ஜ.க. இடம்பெற்றிருக்கும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கும் வாய்ப்பு குறைவு என்பதால் ஜோதிமுத்து ரொம்பவே பாடுபட வேண்டும்.

 

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.