Skip to main content

ஆடு மேய்ச்சா ஆளா போகலாம்... படித்த இளைஞரின் விவசாய நம்பிக்கை...

Published on 28/04/2020 | Edited on 28/04/2020

 

Village


எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் விவசாயம் நலிந்து வருகிறது, அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர், அப்போது அமைச்சரவையில் இருந்த ஒருவர், விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்க முடியாது. தொழிற்சாலைகளுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என்று பேசினார். 
 

இதை கேள்விப்பட்ட நாராயணசாமி நாயுடு, 'இந்த அமைச்சர்கள் அதிகாரிகள் அனைவரும் காலையில் எழுந்தவுடன் காபியும் டிபனும் சாப்பிடுவார்களா அல்லது தொழிற்சாலையில் உருவாகும் நெட்டு போல்டு போன்றவைகளை சாப்பிடுவார்களா?' என்று கேள்வி கேட்டு ஆட்சியாளர்களை திக்குமுக்காட வைத்தார். 
 

அரசுகள் விவசாயத்திற்கு முக்கியத்துவம் தராமல் மிகவும் நலிந்து போய் உள்ளது இந்திய மக்கள் தொகை 140 கோடி. இந்த நேரத்திலும் விவசாயத்திற்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அங்கேயும் இயந்திரமயமாகி வருகின்றது. அப்படியும் விவசாயிகள் உணவு உற்பத்தி செய்து இந்த நாட்டு மக்களுக்கு உண்ண உணவு கொடுத்து வருகிறார்கள்.  
 

இப்படிப்பட்ட குடும்பத்தில் உள்ள இளைஞர்களுக்குப் பெண் கொடுக்க யாரும் முன்வருவதில்லை. டாக்டர் படித்த பெண்ணுக்கு டாக்டர் மாப்பிள்ளை, பொறியாளர் பெண்ணுக்கு பொறியாளர் மாப்பிள்ளை, அரசுப் பணியில் இருந்தால் அதே அரசுப் பணியில் உள்ள மாப்பிள்ளை, ஆசிரியையாக இருந்தால் ஆசிரியர் மாப்பிள்ளை இப்படி கிராமத்தில் மாடுகளுக்கு ஜோடி தேடுவது போல் வசதி படைத்தவர்கள் நகரத்தில் வாழ்பவர்கள் மணவாழ்க்கைக்கு ஜோடி தேடிக் கொண்டிருந்தார்கள்.
 

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த பிறகு படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் விவசாயிகள் மீதும், அவர்கள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள் மீதும் ஒரு மரியாதை கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இப்போது இந்தக் கரோனா வந்த பிறகு வெளிநாடுகளில் வேலை செய்த தங்கள் பிள்ளைகளைப் பற்றி பெருமையாகப் பேசிய பெற்றோர்கள் எல்லாம் இப்போது தங்கள் பிள்ளைகள் வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை இங்கேயே இருந்திருக்கலாம் என்று புலம்புகின்றனர்.
 

அதேபோன்று கிராமத்தில் வாழ்ந்த சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் கூட விவசாய வேலை செய்தவர்கள், அதை வெறுத்து நான் டவுனுக்கு போயி மூட்டை தூக்கியாவது பிழைத்துக் கொள்வேன் என்று கூறியவர்கள் எல்லாம் இப்போது கால் வயிறு, அரைவயிறு கஞ்சி குடித்தாலும் பரவாயில்லை எனக் கிராமத்தை நோக்கிப் போகிறேன் என்று கூற ஆரம்பித்துள்ளனர்.
 

அதற்குக் காரணம் கரோனாதான். மேலும் அயல்நாடுகளில் வேலை செய்து வந்த பலர் கரோனா பாதிப்பால் வேலை இல்லாமல் நம் நாட்டுக்குத் திரும்பபோகிறார்கள். இவையெல்லாம் இன்னும் சில மாதங்களில் நடக்கப்போகும் உண்மைகள். அதனால் இப்போது நகரத்தில் கிராமத்தில் உள்ள படித்த பெண்கள் விவசாயக் குடும்பத்து மாப்பிள்ளைகளை தேர்ந்தெடுக்க முன்வந்திருக்கிறார்கள். 
 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல விவசாயக் கிராமங்களில் விவசாய மாப்பிள்ளைகளுக்கு இப்போது மதிப்பு அதிகமாகி உள்ளதாம். அங்குள்ள திருமண தகவல் மையங்கள், விவசாயக் குடும்பத்தில் பிள்ளைகள் இருந்தால் சொல்லுங்கள் நாங்கள் பெண் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று பல பெற்றோர்கள் திருமண தகவல் மையங்களில் பதிவு செய்து வருகிறார்களாம்.
 

Village


அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வாளரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டயப்படிப்பு படித்து வரும் சின்னப்பா மகன் வெங்கடேசன் (வயது 18), விவசாயத்தில் ஈடுபட்டு ஆடு, மாடுகள் வளர்ப்பதைத் தனது லட்சியமாகக் கொண்டுள்ளார். 
 

உலக கால்நடைகள் தினத்தை முன்னிட்டு கால்நடைகளைப் போற்றும் விதமாகத் தங்களது வீட்டில் இருக்கும் 2 பசுமாடுகள் மற்றும் 2 கன்று குட்டிகளுக்கும் சந்தனம் குங்குமம் வைத்து மாவிலையில் தோரணம் செய்து அலங்காரம் செய்து வணங்கினார். கரோனா காலத்திலும் கால்நடைகளைப் போற்றும் விதமாக இளைஞரின் இந்தச் செயல் இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
 

நம்மிடம் அவர் பேசும்போது, படித்து முடித்தவுடன் விவசாயத்தில் கவனம் செலுத்தப்போகிறேன். இளைஞர்கள் பலரும் விவசாயம் செய்ய முன் வர வேண்டும் என்பதே கரோனா கற்றுத்தந்துள்ள பாடம். எங்ககிட்ட 5 ஏக்கர் நிலம் இருக்கு. கடலை போட்டு அறுவடை முடிச்சோம். இப்போ எள் போட்டிருக்கோம். நம்ம கிட்ட தொழில் இருக்க, நாம ஏன் கைகட்டி நிக்கணும். படித்தவர்கள் விவசாயத்துக்குத் திரும்பணும். மனிதன் உயிர் வாழ அவசியம் விவசாயம் மட்டுமே எனக் கரோனா பாடம் கற்பித்திருக்கு. எனது உறவினர்கள் பலரும் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஊர் திரும்ப உள்ளனர். 
 

கூழோ கஞ்சியோ நம்ம வயலில் விளைந்தத வச்சி சாப்பிட்டுக்கலாம். உள்ளூரிலேயே பாதுகாப்பா இருக்கலாம். உறவினர்களோடும் பெற்றோர்களுடனும் அருகில் இருப்பதே மிகப்பெரிய பாதுகாப்பு. ஆடு மேய்ச்சா ஆளா போகலாம்... மாடு மேய்ச்சா மனுசனா போகலாம்... என்றார் மாணவர் வெங்கடேசன்.


விவசாயக் குடும்பத்து இளைஞர்களுக்குப் பெண் கொடுக்க முன்வரமாட்டார்கள். காரணம், விவசாயக் குடும்பத்தில் உள்ள இளைஞர்களுக்கு மகளைக் கட்டிக் கொடுத்தால் காலம் முழுவதும் கஷ்டப்படவேண்டும் என்று சொன்ன பெற்றோர்கள் உண்டு. கரோனாவிற்குப் பிறகு பெற்றோர்கள், பெண்களின் மனநிலை மாற்றம் காண துவங்கியுள்ளன.
 

 

http://onelink.to/nknapp

 

சமீபகாலமாகத் திரைப்படங்களிலும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிப்பதுடன், அதைக் காப்பாற்ற வேண்டும், இந்தியாவில் உணவுப் பஞ்சம் வரக்கூடாது என்று காண்பிக்கிறார்கள். இவையெல்லாம் இப்போது உள்ள படித்த இளைஞர்கள் இளம்பெண்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் இன்னும் அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும். இதன் மூலம் கிராமங்கள் செழிப்படையும். 
 

 

கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இதனால் இந்தியா வல்லரசாக ஆகிறதோ இல்லையோ வளமிக்க இந்தியாவாக மாறும்.