கரோனா உச்சத்தில் இருந்து வரும் இந்நிலையில் அரசியல் தலைவர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தோன்றி தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்துப் பேசியுள்ளார்.
அவர் பேசும்போது, "இன்றைய ஆட்சியாளர்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. மதம் இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அதன் பின்னால் பதுங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். சாதி, மதம் எப்படி மனிதனை காப்பாற்றும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. மனிதன்தான் அதைக் காப்பாற்றி வைத்துள்ளான். மண்புழு கூட மனிதனுக்கு உதவும். இன்று மண்புழுவைக் கூட தனியாக உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு நாம் பூமியை நஞ்சாக்கி வைத்துள்ளோம். இதற்கெல்லாம் என்ன செய்ய வேண்டும் என்று நமக்குத் தெரியும். அதனைத் தன்னலமற்று நாம் செய்ய வேண்டும்.
மானிடச் சமூகமே மிகப்பெரிய ஆபத்தில் இருக்கின்றது. குறிப்பாக நம்முடைய தமிழினம் பெரிய ஆபத்தில் சிக்கித் தவிக்கின்றது. பலவற்றை நாம் இழந்துள்ளோம். குறிப்பாக நீர்வளத்தை, பெரிய அளவில் அதில் நாம் தோற்றுப்போய் உள்ளோம். முல்லைப் பெரியாறு இருக்கின்ற தேவிக்குளம், பீர்மேடு பகுதிகளை உள்ளடக்கிய இடுக்கி மாவட்டம் தமிழகத்திற்கு வர வேண்டிய இடம். மாநில பிரிப்பின்போது நேருவிடம் இருந்த நட்பைப் பயன்படுத்தி அப்போதைய அமைச்சர் கிருஷ்ணன் மேனன் காமராசர் அவர்களை இந்தப் பிரிப்புக்குச் சம்மதம் தர வைத்தார். அதன்பிறகுதான் ஐயா எந்த மேடாக இருந்தால் என்ன இந்தியாவில்தானே இருக்கின்றது என்று பேசியது.
இதே போன்று காவிரி பகுதியைச் சேர்ந்த குடகு மாவட்ட விவசாயிகள் மாநில பிரிப்பின் போது, நாங்கள் தமிழ்நாட்டிற்கு வந்துவிடுகிறோம் என்றார்கள். ஆனால் இங்கே இருந்த அரசியல்வாதிகள் இல்லை, நீங்கள் கர்நாடகத்திலேயே இருங்கள் என்று கூறினார்கள். அவர்களும் அங்கேயே இருந்துவிட்டார்கள். தற்போது அவர்களிடம் குடிக்க தண்ணீர் கேட்டால் அவர் எப்படித் தண்ணீர் தருவான். எல்லா இடத்திலேயும் நம்முடைய முன்னோர்கள் செய்த தவற்றால் நாம் கையறு நிலையில் இருக்கின்றோம். எல்லா வரியையும் மத்திய அரசிடம் கொடுத்துவிட்டு இன்றைகு கையறு நிலையில் நின்று கொண்டிருக்கின்றோம்.
பிச்சை எடுக்கும் சூழலில் தான் நாம் இருக்கின்றோம். வரியை எல்லாம் அவர்கள் எடுத்துச் சென்று விடுகிறார்கள். கரோனா முதல் அனைத்தையும் நம்மையே பார்த்துக்கொள்ள சொல்கிறார்கள். இதுதான் தற்போது நாட்டில் இருக்கின்ற நிலையாக இருக்கின்றது. இலவச மின்சாரம் கொடுத்து வந்தார்கள். தற்போது அதிலேயும் கைவைத்துவிட்டார்கள். ஏன் இலவச மின்சாரத்தை நிறுத்துவதாக அறிவிப்பு வந்துள்ளதே என்றால் மத்திய நிதியமைச்சர் நீங்கள் வேண்டும் என்றால் கொடுத்துங்கோங்கோ. அதனால் பல ஆயிரம் கோடி நஷ்டம் வருகிறது. அதை எல்லாம் ஒரு சிஸ்டத்தின் கீழ் கொண்டு வரவே நாங்கள் இதை எல்லாம் செய்கிறோம் என்கிறார்கள். இது அனைத்தும் எங்கே போய் முடியுமோ, தெரியவில்லை" என்றார்.