அ.தி.மு.க.விலிருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் கட்சியில் இணைந்தார். இந்த இணைப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தி.மு.க.வும், பா.ஜ.க.வும் பின்னிப்பிணைந்து கூட்டணியில் இருந்தார்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. எங்கள் கொள்கையில் இடையூறு ஏற்படுமானால் கூட்டணியில் இருந்து விலகுவதற்கு அ.தி.மு.க. தயங்கியது இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்று கூட்டணியை முறித்து ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு வந்தவர் என்பது வரலாறு” என்று பேசியிருந்தார்.
அன்வர் ராஜா சொன்ன 1998 வரலாறு தெரியுமா?
அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு 1991 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றி பெற்று முதல் முறையாக ஜெயலலிதா முதலமைச்சராக பதவி ஏற்றார். 1991 முதல் 1996 வரை நடந்த ஜெயலலிதா தலைமையிலான அந்த ஆட்சியில் அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்து, அதன்தொடர்பான வழக்குகளையும் சந்தித்தார் ஜெயலலிதா. அதன்பிறகு நடந்த 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் அதிமுக வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வென்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் போட்டியிட்ட பர்கூர் தொகுதியில், திமுக வேட்பாளரான சுகவனம் என்பவரிடம் தோற்றுப் போனார்.
1996 சட்டமன்றம் முடிந்தநிலையில், 1998ல் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. 1998 தேர்தல் பிரச்சாரத்திற்காக அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அத்வானி கோவை வந்திருந்தார். அப்போது தான், கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. 18 தொகுதிகள், கூட்டணியில் இருந்த கட்சிகள் 12 தொகுதிகள் என மொத்தமாக அ.தி.மு.க. கூட்டணி 30 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்தத் தேர்தலின் முடிவில், மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க.வின் ஆதரவு தேவைப்பட்டது. அதன்படி அ.தி.மு.க.வின் ஆதரவுடன் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரானார். முதலில் வெளியிலிருந்து ஆதரவு தருவதாகச் சொன்ன ஜெயலலிதா, பிறகு அ.தி.மு.க. எம்.பி.க்களை அமைச்சரவையில் இடம்பெறச் செய்தார். சேடப்பட்டி முத்தையா, தம்பிதுரை ஆகிய இருவரும் மத்திய அமைச்சர்கள் ஆனார்கள். அதே நேரத்தில், பூட்டாசிங், ராமகிருஷ்ண ஹெக்டே, ராம் ஜெத்மலானி போன்ற அமைச்சர்களை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று கொடி பிடித்தார். இதனால், வாஜ்பாய் மிகுந்த தர்மசங்கடத்துக்கு ஆளானார். ஆனாலும், பூட்டாசிங்கை மட்டும் அமைச்சரவையிலிருந்து நீக்கினார். இதேரீதியில், நினைத்த மாத்திரத்தில் ஏதாவது ஒரு கோரிக்கையை முன்வைத்து, நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வந்தார். தன் மீதான வருமான வரி வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும் என்றார்.
அடுத்து, இந்திய அரசியலமைப்பு விதி 356-ஐ பயன்படுத்தி, அப்போது கலைஞர் தலைமையில் தமிழகத்தில் நடந்துவந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று அழுத்தம் தந்தார். ஜெயலலிதாவை சமாதானப்படுத்துவதற்காக, டெல்லியிலிருந்து பா.ஜ.க. பிரதிநிதிகள் போயஸ் கார்டனுக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். ஜெயலலிதாவோ, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் பதவி விலக வேண்டும், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமியை நிதியமைச்சராக்க வேண்டும், வாழப்பாடி ராமமூர்த்தி வசம் இருந்த பெட்ரோலியத்துறையை பறித்தாக வேண்டும் என்று நிபந்தனைகளை அடுக்கிக்கொண்டே போனார். பிரதமராக இருந்த வாஜ்பாய், செய்வதறியாது திக்குமுக்காடினார்.
இந்த நிலையில்தான், டெல்லி அசோகா ஓட்டலில், சுப்பிரமணியன் சாமி ஏற்பாடு செய்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டார் ஜெயலலிதா. சோனியா காந்தி உட்பட, சந்திரசேகர், நரசிம்மராவ், குஜ்ரால், தேவகவுடா, முலாயம்சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் போன்ற தலைவர்கள் அந்த விருந்தில் பங்கேற்றனர்.
ஜெயலலிதா அடுத்து டெல்லிக்கு கிளம்பியது 1999, ஏப்ரல் 12-ஆம் தேதி. ‘எதற்காக டெல்லி விஜயம்?’ என்று சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “வாஜ்பாய் அரசை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் ஒரு புதிய அரசை நிறுவப் போகிறோம். அதற்காகவே டெல்லி செல்கிறேன்” என்று தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
1999, ஏப்ரல் 17, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு வாக்குகள் 269 ஆகவும், எதிரான வாக்குகளாக 270-ம் விழுந்தன. ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாயின் 13 மாத பா.ஜ.க. அரசு கவிழ்ந்தது. ஆட்சி கவிழ்ந்த 1999 ஏப்ரல் 17 ஆம் தேதி வாஜ்பாய், “இன்று நான் நிம்மதியாக உறங்குவேன்” என்றார்.
ஜெயலலிதாவின் இந்த முடிவை பலரும் விமர்சித்தபோதும், சிலர் இந்தத் துணிச்சலான முடிவை அவரைத் தவிர வேறு யாராலும் எடுக்கமுடியாது என்று பேசினர். அதேபோல் தற்போது, அன்வர் ராஜாவின் பேச்சுக்கு, ‘ஜெயலலிதாவால் மட்டும் தான் அப்படியான முடிவை எடுக்க முடியும். தற்போதைய அ.தி.மு.க.வின் தலைமையான இ.பி.எஸ். அல்லது ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் இணைந்தும்கூட அப்படியான ஒரு முடிவை எடுக்க முடியாது’ என்று தெரிவித்துவருகின்றனர்.