தங்க நிறத்தில் ஜோடிக்கப்பட்ட நவீன ரதத்தை சுற்றி காவிக் கொடிகள் பறக்க, 'ராமர் கோவிலை அயோத்தியில் எழுப்ப வேண்டும், ராமராஜ்யத்தை இந்தியா முழுவதும் கொண்டுவர வேண்டும்' போன்ற முழக்கங்களை முழங்கிக்கொண்டிருந்தது அந்த கூட்டம். அவர்களின் அட்டவணைப்படி, அயோத்தியில் ஆரம்பித்து ஆறு மாநிலங்கள் வழியாக வந்து, கடைசியில் கேரளாவிலிருந்து நெல்லை வழியாக தமிழகத்துக்குள் நுழைந்து, இராமேஸ்வரத்தில் அவர்களின் ரத யாத்திரையை முடித்துக்கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தனர்.

இவர்கள் தமிழக எல்லைக்குள் வருவதற்கு முன்பு ஐந்து மாநிலங்களை கடந்து வந்திருக்கின்றனர். அவர்களுக்கு எந்த ஒரு எதிர்ப்பும் கிளம்பவே இல்லை. ஆனால் தமிழகத்துக்குள் நுழையப்போகும் நேரம் நெல்லையில் எதிர்ப்புகள் வலுவாகியது. நேற்று இரவில் இருந்து இந்த ரதயாத்திரையை எதிர்த்து, தடுக்கக் கிளம்பிய பல்வேறு கட்சித் தலைவர்கள் திருமாவளவன், வேல்முருகன், ஜவாஹிருல்லா போன்றவர்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், காவலர்கள் இவர்கள் வரும் வழிகளிலேயே மடக்கிப்பிடித்தனர். பிரச்சனைகள் வலுவாக கூடும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஐந்து நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறார். எதற்காக இத்தனை எதிர்ப்பு? ஏற்கனவே நடந்த பாஜகவின் புகழ்பெற்ற ரதயாத்திரையைப் பற்றித் தெரிந்தால் இதற்கு விடை கிடைக்கும்.
ரத யாத்திரை என்பதை பாஜக ஒரு ஆயுதமாகத்தான் பயன்படுத்தியிருக்கிறது. இந்த ஆயுதத்தை வைத்துதான் பாஜக வளர்ந்தது. இதற்கெல்லாம் காரணகர்த்தாவாக இருந்தவர் எல்.கே.அத்வானி. சமீபத்தில் பிரதமர் மோடி ஒரு மேடையில் அத்வானியை மதிக்கவில்லை என்று சமூக ஊடகங்களில் அனுதாபத்தோடு பார்க்கப்பட்டார். இப்பொழுது அவர் மாணிக்கமாக இருக்கலாம், அப்பொழுது அவர் பாட்ஷா. 1990ஆம் ஆண்டில் பாஜக இந்தியாவில் வலுவாக ஒரு இடத்தை பிடிக்க அயோத்தியில் இராமர் கோவில் கட்டவேண்டும் என்கிற நோக்கத்தை மக்களிடத்தில் பரப்பியது. அதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ராம் ரத யாத்திரை. விஸ்வ ஹிந்து பரிஷத் என்னும் அமைப்பால் தொடரப்பட்ட இந்த யாத்திரையை முன்னின்று நடத்தியவர் அத்வானி தான். சோம்நாத்தில் ஆரம்பித்து ஒரு நாளுக்கு முன்னூறு கிலோமீட்டர் என்று பயணித்தனர். அது அவர்களின் கொள்கையை பரப்ப ஒரு ஜாக் பாட்டாக அமைந்தது, அதிலும் அவர்களது கொள்கை ஹிந்து மக்களிடையே வெறியை விதைப்பதாய் இருந்தது. நாளுக்கு நாள் சூடாக, சமூக நல்லிணக்கத்துக்கு சவால்கள் விட்டுக்கொண்டே வந்தனர். ஆனால், தமிழகத்தில் அவர்களின் தாக்கம் துளி அளவும் இல்லை. வடக்கே அவர்கள் நினைத்ததைவிட அதிகமாகவே இருந்தது.

பீஹார் முதல்வராக இருந்த லல்லு பிரசாத் யாதவ், எங்கள் மாநிலத்துக்குள் மதக்கலவரங்களை கொண்டு வரும் இதுபோன்ற யாத்திரைகளுக்கு அனுமதியில்லை என்று எச்சரித்தார். இதைத்தான் அத்வானியும் எதிர்பார்த்தார், ஆனால் அவர் எதிர்பார்த்ததோ அயோத்தி இருக்கும் உத்திரபிரேதசத்தில். இது பீஹாரிலேயே நடந்துவிட்டது. உள்ளே நுழைந்த அத்வானியை கைது செய்தனர். கலவரமானது, இருந்தாலும் தொண்டர்கள் ரதத்தை அயோத்திக்கு கொண்டு செல்ல நினைத்தனர். உபியிலும் தடை பிறப்பிக்கப்பட்டது. பாஜக எதிர்பார்த்ததைப் போல், தொண்டர்கள் வெறிகொண்டு பாபர் மசூதியை இடிக்க கையில் ஆயுதங்களுடன் கிளம்பிவிட்டனர். பின்னர் அதைத் தடுக்க மூன்று நாட்கள் பாதுகாப்பு போடப்பட்டது. இதன் மூலம் தான் பாஜக என்ற ஒரு கட்சி வடக்கில் வலுவான ஒரு கட்சியாக மாறியது. வி.பி.சிங் ஆட்சியை மாற்றியது. மற்ற அரசியல் கட்சிகளுக்கு சவால் விடத்தொடங்கியது. 1991 பார்லிமென்ட் தேர்தலில் இவர்கள் நடத்திய யாத்திரைக்கும், பல மனிதர்களை பலிகொடுத்ததற்கும் தேர்தல் முடிவுகளில் பலன் கிடைத்தது. இவர்களின் முழக்கமான 'ராமர் கோவிலை கட்ட பாபர் மசூதியை இடிக்க வேண்டும்' என்பதையும் நிகழ்த்தியது.

பாபர் மசூதி
இப்படிப்பட்ட நோக்கத்துடன் தான் அந்த ரத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. அது அவர்கள் எதிர்பார்த்தது போலவே நடந்துவிட்டது. வடக்கில் எப்படி வலுசேர்த்தார்களோ, அதே விஷயத்தைக் கொண்டு தென்னிந்தியாவிலும் வளர்ந்துவிடலாம் என்று கணக்குப் போடுகிறார்கள். இதுவரை இந்த யாத்திரையினால் எந்த கலவரமும் நடக்கவில்லை. ஆனாலும் எதிர்ப்பு ஏற்படுவதற்கு காரணம் இருக்கிறது. வெறுப்பு அரசியல் என்பது பாஜகவின் ஒரு ஆயுதம் என்பதை எச்.ராஜாவின் தொடர்ச்சியான ட்வீட்களிலும், பேச்சுகளிலும் தெரிந்துகொள்ளலாம். ஒரு ஆன்மீக யாத்திரைக்கு தேவையில்லாமல் எதிர்ப்பு தெரிவித்து அரசியல் செய்கின்றனர் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆன்மீகமும் அரசியலும் எப்பொழுதும் அருகருகே தான் இருந்திருக்கின்றன. ஆன்மீகமும் மதங்களும் வெறுப்பைத் தூண்டாமல் இருக்கும்வரை ஒன்றுமில்லை. ஆனால், பெரும்பாலும் அப்படி நடப்பதில்லை.