விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி கதாநாயகனாகவும் அதிதி ஷங்கர் கதாநாயகியாகவும் நடித்திருக்கும் திரைப்படம் நேசிப்பாயா. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் ஆகாஷ் முரளி தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். மேலும் இப்படத்தில் சரத்குமார், பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படம் வருகிற ஜனவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் கதாநாயகன் ஆகாஷ் முரளி ஆகியோரை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாகச் சந்தித்தோம். இருவரும் படம் தொடர்பான பல சுவாரஸ்ய தகவல்களை நம்மிடையே பகிர்ந்துகொண்டனர். அப்போது விஷ்ணுவர்தனிடம் எந்த காரணத்திற்காக நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக அறியப்படுகிறார்? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு விஷ்ணுவர்தன், “சினிமா, நட்பு என அனைத்திலும் அவர் காட்டும் அன்புதான் காரணம். நயன்தாராவுக்கு ஒருவரைப் பிடித்துவிட்டால் அது காதலர், நண்பர், டெக்னீசியன் என யாராக இருந்தாலும் அவருக்காக எந்த எல்லைக்கும் போவார். அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு அவரிடம் இருக்கிறது. அந்த அர்ப்பணிப்பு அவருடைய சினிமா வாழ்க்கையிலும் இருக்கிறதென்றால் எந்த அளவிற்கு ஃபயராக இருப்பார் என்று யோசித்துப் பாருங்கள். அன்பிற்கு அவர் தரும் மதிப்பு எனக்குப் பிடிக்கும்” என பதிலளித்தார்.