
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’ படத்தை கைவசம் வைத்துள்ளார் அஜித். இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்து சிறுத்தை சிவாவுடன் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் இருக்கிறது. அதே சமயம் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக சமீபகாலமாக ஒரு தகவல் உலா வந்தது.
இந்த நிலையில் அத்தகவல் குறித்து விஷ்ணு வர்தன் பேசியுள்ளார். சென்னை ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விஷ்ணுவர்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அஜித் படம் குறித்து பேசுகையில், “பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் உறுதியாகவில்லை. உறுதியானவுடன் அறிவிப்போம்” என்றார்.
அஜித் - விஷ்ணுவர்தன் கூட்டணியில் பில்லா, ஆரம்பம் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து தற்போது நடந்து வரும் பேச்சு வார்த்தை உறுதியானால் மூன்றாவது முறையாக இருவரும் இணையவுள்ளனர்.