
ப.பாண்டி, ராயன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படத்தை தனுஷ் இயக்குவதோடு மட்டும் இல்லாமல் தயாரித்தும் வருகிறார். இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் முதல் பாடலாக வெளியான ‘கோல்டன் ஸ்பாரோ...’ நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இரண்டாவது பாடலாக வெளியான ‘காதல் ஃபெயில்’, மூன்றாவது பாடலாக வெளியான ‘ஏடி’ மற்றும் நான்காவது வெளியான ‘புள்ள’ பாடல்கள் ஓரளவு வரவேற்பை பெற்றன. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக இபப்டத்தை பார்த்து எஸ்.ஜே.சூர்யா பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இப்படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ரொம்ப நாளைக்குப் பிறகு இந்த 'வழக்கமான காதல் கதை'யைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. தனுஷ் உருவாக்கிய இந்த உலகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் நான் பார்த்து ரசித்தேன். அதே மாதிரி தியேட்டர்களில் பார்க்கும் ஒவ்வொருவரும் இப்படத்தை ரசிப்பார்கள். வாழ்க்கையின் அதீத மகிழ்ச்சி அன்பின் அப்பாவித்தனத்தின் மூலம்தான்! இயக்குநர் தனுஷ் இந்த உணர்ச்சியை தனது படத்தில் உயிர்ப்பித்துள்ளார்” எனக் குறிப்பிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். தனுஷ் - மாரி செல்வராஜ் இருவரும் கர்ணன் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.