உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் பாலிவுட், கோலிவுட், மோலிவுட் என பல்வேறு திரைப்பிரபலங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், அனுபம் கேர், அக்ஷய் குமார், சஞ்சய் லீலா பன்சாலி, சிரஞ்சீவி, மோகன்லால், ரிஷப் ஷெட்டி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழில் தனுஷிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னை போயஸ் கார்டனில் ரஜினியின் இல்லத்தில் அவரை சந்தித்து ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் அழைப்பிதழை வழங்கியிருந்தனர். இந்த நிலையில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் ரஜினி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரோடு அவரின் மனைவி லதா ரஜினிகாந்த், சகோதரர் சத்ய நாராயணா ஆகியோரும் செல்கின்றனர். மூவரும் 21ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து அங்கு சென்று, 22 ஆம் தேதி விழாவில் கலந்து கொண்டு, 23ஆம் தேதி சென்னை திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது.