புதுப்பேட்டை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் புதுப்பேட்டை சுரேஷுடன் நக்கீரன் ஸ்டூடியோ சேனலுக்காக ஒரு சந்திப்பு; நமது பல்வேறு கேள்விகளுக்கு சுவாரசியமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
புதுப்பேட்டை சுரேஷ் பேசியதாவது: “புதுப்பேட்டை காலத்தில் விஜய் சேதுபதி என்னுடைய ரூம்மேட். ஆரம்பம் முதலே சினிமா மீது அவர் ஒரு வெறியுடன் இருந்தார். அவருடைய டெடிகேஷன் மிகப்பெரியது. சினிமா வாய்ப்புகளை நான் முதலில் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. எளிமையாக வாய்ப்பு கிடைத்துவிட்டதால் அந்த வலி தெரியவில்லை. மருத்துவராக நிறைய சம்பாதித்தேன். ஆனால் குடிப்பழக்கத்தால் பணத்தை ஒழுங்காக சேமித்து வைக்கவில்லை. புதுப்பேட்டைக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. அவற்றை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இப்போது நான் குடிப்பழக்கத்தை முழுமையாக விட்டுவிட்டேன். புதுப்பேட்டைக்குப் பிறகு முனி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் டான்ஸ் ஆடும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பிறகு பீமா படத்தில் நடித்தேன். இப்போது சினிமா மீது மீண்டும் ஆர்வம் வந்துள்ளது. சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்துள்ளது. பாடல் ஷூட்டிங்கின்போது செட்டுக்கு சென்றால் இயக்குநரை எளிதாக சந்திக்க முடியும். கல்யாண் மாஸ்டர் எனக்கு நல்ல நண்பர் என்பதால் துணிவு படத்தில் ஒரு பாடலில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது.
வசூல்ராஜா படத்தில் ஓபனிங் சாங்கில் கமல் சாரோடு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கலா மாஸ்டர் எங்களுக்கு குடும்ப நண்பர் மாதிரி. பிருந்தா மாஸ்டரும் நிறைய அறிவுரைகள் கூறுவார். அஜித் சார் போலவே விஜய் சாருடனும் திருப்பாச்சி படத்தில் ஆடியிருக்கிறேன். விஜய் சார் எப்போதுமே அமைதியான மனிதர். அஜித் சார் அனைவருடனும் நன்கு பேசுவார். ஒருநாள் பெரிய ஆளாக வருவேன் என்று தன்னுடைய முதல் படத்தின்போதே சொன்னவர் அஜித் சார். நல்ல மனிதர் அவர்.
ரஜினி சாரின் தீவிர ரசிகன் நான். அவருடைய முகத்தை நான் கையில் டாட்டூ குத்தியிருப்பதை அவரே பார்த்திருக்கிறார். இன்று வரை அதே வேகத்துடன் இருக்கிறார் ரஜினி சார். அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. ரஜினி சார் சின்சியரான நடிகர். பெரிய நடிகர்கள் அனைவருமே தங்களுடைய ஒழுக்கத்தினால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளனர்.”