Skip to main content

அப்பாவின் அடைமொழியில் மகன் நடிக்கும் புது படம் - எதிர்பார்ப்பை உருவாக்கிய வீடியோ

Published on 13/02/2025 | Edited on 13/02/2025
atharvaa new film titled as Idhayam Murali

கடந்த ஆண்டு அதர்வா நடிப்பில் ‘நிறங்கள் மூன்று’ என்ற ஒரு படம்தான் வெளியாகியிருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு ஒரு படம் கூட வெளியாகவில்லை. ஆனால் இந்த ஆண்டு அடுத்தடுத்து அவரது படங்களை பற்றிய அறிவிப்புகள் வர தொடங்கியுள்ளது. அவர் கைவசம் ‘அட்ரஸ்’, ‘தணல்’, ‘டி.என்.ஏ(DNA)’ என்ற மூன்று படங்கள் வைத்திருந்தாலும் அது பற்றிய தொடர் அப்டேட்டுகள் வராத நிலையில் டி.என்.ஏ படத்தின் டீசர் மட்டும் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. 

இதையடுத்து சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது. சமீபத்தில் கூட டைட்டில் டீசர் வெளியான நிலையில் அதில் கல்லூரி மாணவராக அதர்வா நடித்துள்ளது போல் தெரிந்தது. இந்த நிலையில் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் ‘இதயம் முரளி’ என்ற தலைப்பில் உருவாகிறது. இப்படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குகிறார். இவர்தான் பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹரோ, நட்டி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு தமன் இசையமைத்து வரும் நிலையில் அவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் அறிவிப்போடு டைட்டில் அறிவிப்பு வீடியோ மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. 

டைட்டில் அறிவிப்பு வீடியோவில், அதர்வா நியூயார்க்கில் இருந்து கொண்டு 2012ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று எடுக்கப்பட்ட வீடியோவை தன் ஃபோனில் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் கயாடு லோஹரோவை ஒரு தலையாக காதலித்து வருவதாக தெரிகிறது. பின்பு இந்தியாவில் இருந்து அவருக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வர உடனே இந்தியா கிளம்புகிறார். பின்பு ப்ரீத்தி முகுந்தனுடன் அவருக்கு கல்யாணம் ஏற்பாடு செய்துள்ளது போல் தெரிகிறது. இறுதியில் யாரை கல்யாணம் செய்கிறார் என்பதை நோக்கி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. வீடியோ இறுதியில், ‘இந்த உலகத்துலையே பெஸ்ட் லவ்வர் ரோமியோவோ, மஜ்னுவோ, அம்பிகாபதியோ இல்ல நம்ம டைட்டானிக் ஜேக்கோ இல்லடா... இதயம் முரளி தாண்டா’ என்ற நட்டி பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. இப்படம் ஒரு தலை காதல் குறித்து பேசவுள்ளது.  

அதர்வாவின் தந்தையான மறைந்த நடிகர் முரளி, இதயம் முரளி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். 1991ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான இதயம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் இந்த அடைமொழி அவருக்கு வந்தது. இந்த நிலையில் அந்த அடைமொழி பெயரிலே அவரது மகன் அதர்வா நடிப்பது படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் ஜூன் அல்லது ஜூலையில் திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்