1997ஆம் ஆண்டு இளையராஜாவுக்கும் மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் தேவர் மகன், பாண்டியன், குணா உள்ளிட்ட 109 படங்களின் ஆடியோ உரிமையை மியூசிக் மாஸ்டர் நிறுவனம் வாங்கியிருந்தது. ஆனால் அப்படங்களின் பாடல்கள் யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானதால் அதற்கு தடை விதிக்கக் கோரி மியூசிக் மாஸ்டர் நிறுவனம் 2010ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்கள் பற்றி ஒப்பந்தம் மேற்கொண்ட போது குறிப்பிடவில்லை என்றும் ஆடியோ ரிலீஸ் ஒப்பந்தம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக சாட்சியம் அளிக்க சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இன்று இளையராஜா நேரில் ஆஜரானார். ஆஜராகி வழக்கு தொடர்பாக தனது சாட்சியத்தை அளித்த இளையராஜாவிடம் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது சாட்சி கூண்டில் ஏறிய இளையராஜாவிடம் சினிமாவுக்கு வந்தது முதல், பாடல்களின் பதிப்புரிமை, தயாரிப்பாளர்களிடம் மேற்கொண்ட ஒப்பந்தம், சொத்து மதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாகக் கேள்விகள் கேட்கப்பட்டன.
இதில் எத்தனை பங்களாக்கள் இருக்கிறது என்ற கேள்விக்கு, “முழு ஈடுபாடும் இசையில் உள்ளதால், எத்தனை பங்களாக்கள் இருக்கிறது என்று எனக்கு தெரியாது” என்றார். பீச் ஹவுஸ் தொடர்பான கேள்விக்கு, “அந்த வீடு வாங்கியது உண்மைதான். ஆனால் அதை விற்றுவிட்டேன்” என்றார். மேலும், “பெயர், புகழ், செல்வம் அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது என்பது உண்மையா” என்ற கேள்விக்கு, “அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது” என்று பதிலளித்தார். இளையராஜாவிடம் சுமார் ஒரு மணி நேரம் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. பின்பு இறுதியில் இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.