ஓ.டி.டி பிளாட்ஃபார்ம்கள் வளர்ச்சியடைந்த பின்னர் ஆந்தாலஜி திரைப்படங்களில் வருகை அதிகரித்துள்ளது. ஆந்தாலஜி என்பது ஒரு திரைப்படத்தில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கதைகள் உள்ளடக்கமாக இருப்பது. அந்த ஒவ்வொரு கதையையும் வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கி ஒரு முழு நீளப் படமாக வெளியிடுவது ஆந்தாலஜி ஆகும்.
தமிழ்த் திரையுலகிலும் ஆந்தாலஜி படங்கள் அவ்வப்போது வந்தது. அதில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய படம் என்றால் 'சில்லுக்கருப்பட்டி'. ஆனால், இந்தப் படத்தை ஒரே இயக்குனர்தான் இயக்கினார்.
இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்காக 'பாவக் கதைகள்' என்ற தலைப்பில் நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து ஆந்தாலஜி படம் இயக்குகிறார்கள். இதற்காக வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் கைகோர்த்திருப்பதாகக் கடந்த மாதம் செய்திகள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து தற்போது நெட்ஃப்ளிக்ஸ் மீண்டும் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. மணிரத்னம் தயாரிப்பில் ஒன்பது இயக்குனர்கள், பெரும் நட்சத்திரங்கள், பிரபல இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் இணைந்து 'நவரசா' என்கிற தலைப்பில் ஆந்தாலஜி படம் எடுக்கப்போவதாக தகவல் வெளியானது. தற்போது இதுகுறித்தான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
MANI RATNAM - NETFLIX COLLABORATE... 9 stories... 9 directors... 1 film... #ManiRatnam along with Jayendra Panchapakesan and #Netflix collaborate for an anthology... Titled #Navarasa... Details in the posters... pic.twitter.com/LgXcRLToZp
— taran adarsh (@taran_adarsh) October 28, 2020
கே.வி.ஆனந்த், கவுதம் வாசுதேவ் மேனன், பிஜோய் நம்பியார், கார்த்திக் சுப்பராஜ், ஹலிதா சமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ரத்திந்திரன் ஆர் பிரசாத், அரவிந்த் சாமி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர். சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், பிரசன்னா, விக்ராந்த், அசோக் செல்வன் உள்ளிட்ட இன்னும் பிற நடிகர்கள். ரேவதி, நித்யா மேனன், பார்வதி திருவொத்து, ஐஸ்வர்யா ராஜேஷ், பூர்ணா, ரித்விகா உள்ளிட்ட நடிகைகள் நடிக்கின்றனர். இசையமைப்பாளர்களில் ஏ.ஆர். ரகுமான், டி. இமான், ஜிப்ரான், அருள்தேவ், கார்த்திக், ரான் எத்தன் யோஹன், கோவிந்த் வசந்தா, ஜஸ்டீன் பிரபாகரன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் பணியாற்றுகின்றனர். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்னதான் உலகம் முழுவதும் சப்ஸ்க்ரைபர்கள் அதிகமாக வைத்திருந்தாலும், இந்திய ஓடிடி மார்கெட்டில் அமேசான்தான் மாஸ் காட்டி வருகிறது. லாக்டவுனை பயன்படுத்தி ஒவ்வொரு ஓடிடியும் வளர்ந்து வருகின்றன. அந்த வகையில் இதுவரை தமிழில் பெரிதாக கவனம் செலுத்தாமல் இருந்த நெட்ஃப்ளிக்ஸ் ஃபுல் ஃபோர்சில் இறங்கியுள்ளது.