Skip to main content

‘பராசக்தி’ தலைப்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு

Published on 11/02/2025 | Edited on 11/02/2025
sivaji fans poster against parasakthi title

1952ஆம் ஆண்டு கலைஞர் திரைக்கதை மற்றும் வசனத்தில், சிவாஜி கணேசனின் முதல் படமாக வெளியான படம் பராசக்தி. இந்தத் திரைப்படத்தை நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்திருக்க ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய படமாக பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் தலைப்பு தற்போது சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு வைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் டைட்டில் டீசருடன் வெளியானது. இப்படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளதால் அதற்கும் ‘பராசக்தி’ என்றே தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய் ஆண்டனி - அருண் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்திற்கும் தமிழைத் தவிர்த்து தெலுங்கில் ‘பராசக்தி’ என்றே தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

இதனால் தெலுங்கில் ‘பராசக்தி’ தலைப்பு யாருக்கும் சொந்தம் என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழலில் விஜய் ஆண்டனி தெலுங்கில் ‘பராசக்தி’ தலைப்பை கடந்த ஆண்டே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி அதன் சான்றிதழை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் விஜய் ஆண்டனி தயாரிக்கவும் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் பராசக்தி என்ற தலைப்பை பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி அதன் சான்றிதழை அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். 

இதனைத் தொடர்ந்து டைட்டில் குறித்து குழப்பம் நீடித்து வந்த நிலையில் பின்பு ஆகாஷ் பாஸ்கரனும் விஜய் ஆண்டனியின் நேரில் சந்தித்து பரஸ்பரம் செய்துள்ளனர். இந்த விவகாரம் முடிவுக்கு வந்ததாக தெரிந்த நிலையில் ஆகாஷ் பாஸ்கரன் கலைஞர் குடும்பத்தினர், ஏ.வி.எம்.நிறுவனம், சிவாஜி குடும்பத்தினர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். ஆனால் பராசக்தி படத்தின் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அப்படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், பராசக்தி படத்தை நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் பெருமாள் முதலியார் தயாரித்ததாகவும் ஏவிஎம் நிறுவனம் சில ஏரியாக்களின் விநியோக உரிமையை மட்டுமே பெற்றிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இப்படம் விரைவில் வெள்ளிவிழா காண இருக்கும் வேளையில், டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட திட்டமிட்டு வருவதாகவும் எங்களின் முழு உரிமையான ‘பராசக்தி’ படத்தின் பெயரை வேறு யாரும் பயன்படுத்துக் கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இப்படி தொடர்ந்து பராசக்தி தலைப்பிற்கு எதிர்ப்பு வந்து வரும் நிலையில் தற்போது சிவாஜி ரசிகர் சார்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் சில பகுதிகளில் போஸ்டரும் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் ‘நூறு ஆண்டு ஆனாலும் ஒரே பராசக்தி தான், தமிழ் சினிமா வரலாற்றின் அடையாளத்தை காப்போம்’ என்ற வாசம் இடம்பெற்றுள்ளது. மற்றொரு போஸ்டரில் ‘தமிழ் சினிமா வரலாற்றின் அடையாளம் பராசக்தி பெயரைப் பயன்படுத்துவதைக் கண்டிக்கிறோம்’ என அச்சடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிவகார்த்திகேயன் படக்குழு பராசக்தி என்ற தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பு இந்தப் பெயரைத்தான் வைக்கவுள்ளதாகத் தகவல் வெளியான சமயத்தில் நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை சார்பிலும் தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.    

சார்ந்த செய்திகள்