ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் தன்னுடைய முத்திரையைப் பதித்தவர் வேல்ராஜ், சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படம் குறித்து தன்னுடைய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
விடுதலை படத்தின் வெற்றிக்கு முழுக்க முழுக்க வெற்றிமாறன் தான் காரணம். மக்களுக்கான ஒரு கதையை கமர்ஷியலாகக் கொடுப்பதில் அவர் வல்லவர். அவருக்கு என்ன தேவை என்பதில் அவர் தெளிவாக இருப்பார். அவர் நினைப்பதை நம்மிடமிருந்து வாங்கி விடுவார். ஒளிப்பதிவு குறித்த ஞானமும் அவருக்கு உண்டு. விடுதலை படத்தில் 80-களுக்கான காட்சிகளை பார்த்துப் பார்த்து உருவாக்கினோம். ஓப்பனிங் காட்சியை பல்வேறு சவால்களைச் சந்தித்து தான் எடுத்தோம்.
இந்தப் படத்துக்காக வெளிநாட்டிலிருந்து கேமராவையும், கேமரா ஆப்ரேட்டிங் மேன் கூடப் பயன்படுத்தினோம். கிளைமேக்ஸ்க்கு முன்பு வரும் காட்சியில் சூரியின் நடிப்பைப் பார்த்து அனைவரும் மிரண்டு விட்டோம். அப்படியான நடிப்பை வெளிக்கொண்டு வந்தது வெற்றிமாறன் தான். தன்னுடைய படங்கள் குறித்து வெற்றிமாறன் தான் முதலில் கமெண்ட் அடிப்பார். எது எடுபடும், எது எடுபடாது என்பது அவருக்கு நன்கு தெரியும். ஆனால் கமர்ஷியல் வெற்றிக்காக சில சமரசங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் அது முழுமையான சமரசமாக இருக்காது.
படம் சரியாக வருவதற்காகத் தூங்காமல் வேலை செய்வார் வெற்றிமாறன். கடுமையான உழைப்பாளி. நாங்கள் படம் பிடித்த காட்டில் இல்லாத பாம்புகளே இல்லை என்று சொல்லலாம். மழை நேரத்தில் சாதாரணமாகப் பாம்புகள் சென்றுகொண்டிருக்கும். ஒருமுறை வெற்றிமாறன் சார் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர் முன்பு 8 அடியில் ஒரு பாம்பு சென்றது. ஒரு சில வினாடிகள் தான் வித்தியாசம். அந்தப் பாம்பிடம் இருந்து அவர் தப்பினார். இப்படி நாங்கள் பல்வேறு சவால்களைச் சந்தித்தோம்.
ஆம்புலன்ஸ் உட்பட முழு பாதுகாப்புடன் தான் விடுதலை பட படப்பிடிப்பை நாங்கள் மேற்கொண்டோம். வாத்தியார் கேரக்டரில் முதலில் பாரதிராஜா சார் நடிப்பதாகத்தான் இருந்தது. விஜய் சேதுபதி உள்ளே வந்த பிறகு பட்ஜெட்டும் பெரிதானது. ஒரு பாகமாக இருந்தது இரண்டு பாகங்களாக மாறியது. இந்தப் படத்தில் 60 நாட்கள் நடித்தார் விஜய் சேதுபதி சார். இரண்டாவது பாகத்தில் அவருடைய காட்சிகள் அதிகமாக இருக்கும்.