Skip to main content

கௌதமியின் புகார் - 6 பேர் அதிரடி கைது!

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
gautami bjp azagappan case update

நடிகை கௌதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தனது ரூ. 25 கோடி மதிப்பிலான சொத்துகளை பாஜகவைச் சேர்ந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அபகரித்துவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், “நான் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தின் மூலம் சில இடங்களில் நிலம் வாங்கினேன். கடந்த 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, எனது மகளின் பராமரிப்பு செலவுக்காகவும், எனது மருத்துவச் செலவுக்காகவும் அந்த இடங்களை விற்க முடிவு செய்தேன். அதற்கு பாஜகவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அழகப்பன் என்பவர் உதவி செய்வதாக கூறினார். அதனால் எனது சொத்துக்களை விற்கும் உரிமையை அவருக்கு கொடுத்தேன். அதற்காக என்னிடம் பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார். ஆனால் அதன் மூலம் போலி பத்திரங்களைத் தயார் செய்து, அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது சொத்துக்களை அபகரித்துவிட்டனர். இது குறித்துக் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.  

இதனைத் தொடர்ந்து “25 ஆண்டுகாலமாக கட்சியில் இருந்து வருகிறேன். ஆனால் எனக்கு கட்சி துணை நிற்கவில்லை. ஆனால் அழகப்பனுக்கு பாஜகவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் உதவி செய்கின்றனர்” என்று குற்றம்சாட்டிய கௌதமி, பாஜகவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து கௌதமி கொடுத்த புகாரின் அடிப்படையில் பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சல் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் பல நாட்கள் தலைமறைவாக இருந்து வந்ததால், மூன்றுக்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். மேலும் அவர்களின் இடங்களிலும் போலீஸார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணத்தை மீட்டனர். பின்பு லுக்கவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டது. 

அதன் பிறகு குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமீன் கோரிய நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார், கேரளா திருச்சூருக்கு சென்று 6 பேரை கைது செய்துள்ளனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். நாளை எழும்பூர் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்