Skip to main content

கேம் சேஞ்ஜர் குறித்து தயாரிப்பாளர் பகிர்ந்த அதிர்ச்சி தகவல் 

Published on 16/01/2025 | Edited on 16/01/2025
game changer telecast in local channel issue

ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வந்த் ‘கேம் சேஞ்ஜர்’ படம் நேற்று ஜனவரி 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்திருக்க எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 

இப்படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள நிலையில், அவர் மதுரையில் ஒரு கலெக்டரின் வாழ்க்கையில் நடந்ததை அடிப்படையாக வைத்து எழுதியுள்ளதாக எஸ்.ஜே.சூர்யா கூறியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.186 கோடிக்கு மேல் வசூலித்தது. 

இப்படம் வெளியான முதல் நாளே சட்டவிரோதமாக சில இணையதளங்களில் வெளியாகியிருந்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இந்த நிலையில் இப்படம் தெலுங்கு லோக்கல் சேனல்களில் ஒளிபரப்பப்படுவதாகக் கூறி இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இது ஏற்றுக்கொள்ள முடியாதது. 4-5 நாட்களுக்கு முன்பு வெளியான ஒரு திரைப்படம் உள்ளூர் கேபிள் சேனல்கள் மற்றும் பேருந்துகளில் ஒளிபரப்பாவது மிகுந்த கவலையளிக்கிறது. சினிமா என்பது ஹீரோ, இயக்குநர் அல்லது தயாரிப்பாளர்களைப் பற்றியது மட்டுமல்ல. இது 3-4 ஆண்டுக்கால கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் கனவுகளின் விளைவாகும்.

இந்தப் படங்களின் வெற்றியைச் சார்ந்து வாழ்வாதாரம் கொண்ட விநியோகஸ்தர்கள் எந்தளவு பாதிக்கப்படுவார்கள் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். இத்தகைய நடவடிக்கைகள் அவர்களின் முயற்சிகளைக் குறைப்பதற்கு உட்படுத்துகின்றன மற்றும் திரைப்படத் துறையின் எதிர்காலத்தை அச்சுறுத்துகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கங்கள் முன்வந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சினிமாவைப் பாதுகாக்கவும் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யவும் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியாக நிற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்