'தேவராட்டம்' திரைப்படம் வெளியாகி வெற்றியும் பெற்றிருக்கிறது. வெற்றிக்கு இணையாக சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கியிருக்கிறது. படத்தில் வரும் பல விஷயங்கள், வசனங்கள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பேசப்படுகின்றன. அதில் ஒன்று "மதுரைக்கே நாங்கதான் அடையாளம்" என்று வில்லன் பேசுமாறு இருக்கும் வசனம். இது போன்ற வசனங்கள் மதுரை குறிப்பிட்ட சமூகங்களுக்குதான் என்ற அர்த்தத்தில் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. 'தேவராட்டம்' திரைப்படம் குறித்தும் இந்த சர்ச்சைகள் குறித்தும் இயக்குனர் முத்தையாவை சந்தித்து உரையாடினோம். அவர் பேசியதில் ஒரு பகுதி...
"நான் எடுக்கும் படங்களில் வேண்டுமென்றே ஒரு சமூகப் பின்புலத்தைத் திணிப்பதில்லை. ஒரு போலீஸ் கதைக்கோ வேறு ஒரு கதைக்கோ பின்னணி சொல்லத் தேவையில்லை. ஆனால் கலாச்சாரம் சார்ந்த கதைகளைப் படமாக்கும்போது அது தேவைப்படுகிறது. ஒரு திருவிழாவை, கோயில் நிகழ்ச்சியையெல்லாம் காட்டும்போது ஒரு பின்னணி தேவைப்படுகிறது. உறவுகள் சார்ந்த, மண் சார்ந்த படம் எடுக்கும்போது ஒரு பின்னணி, களம் தேவைப்படுகிறது. நான், என் படங்களில் உறவுகளின் உயர்வைக் காட்டுகிறேன். அதற்கு இந்தக் களம் தேவைப்படுகிறது. அதனால்தான் என் படங்களில் அப்படி அமைக்கிறேன்.
இதே படத்தில் நான் டைட்டிலில் சித்திரை திருவிழாவைக் காட்டினேன். அதில் ஏதாவது சமூக அடையாளம் இருந்ததா? ஆனால், வேறு ஒரு கிராமத் திருவிழாவைக் காட்டணும்னா அது தேவைப்படுகிறது. மதுரை எல்லா சமூக மக்களும் ஒன்றாக சேர்ந்து வாழும் ஊர். என் படத்தில் வரும் வில்லன்தான் அந்த வசனத்தைப் பேசுகிறான். அதுவும் அந்தக் காட்சியையும் நீங்க பாக்கணும். காட்சிக்காகத்தான் வசனம். காட்சி பின்புலம் இல்லாமல் திடீரென அந்த வசனத்தை வைத்தால்தான் நீங்க கேக்கணும். 'டிக் டாக்'கில் ஆயிரம் வசனங்கள் வருது. ரஜினிகாந்த் பேசுன, 'நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி' என்ற வசனத்தைக் கூடத்தான் மாஸாகவும் டிக் டாக் பண்ணுறாங்க, காமெடியாகவும் கூட பண்ணுறாங்க. அதுபோல இந்த வசனத்தை பண்ணுனா நான் என்ன பண்ண முடியும்? நான் எழுதும்போது இது பிரச்சனை ஆகணும்னு எழுதுறதில்லை.
வைகை பாலத்துக்குக் கீழ ஒரு எமோஷனலான காட்சி வைக்கிறேன். அங்க தேவர் அய்யா சிலை இருக்கு. நான் அதை வேணும்னேவா காட்டுறேன்? படத்தில் கோர்ட்டை காட்டுறேன், கக்கன் அய்யா சிலை, சிவாஜி கணேசன் சிலை எல்லாம்தான் இருக்கு. அதை நீங்க பாக்கலையா? சென்னையில வடபழனியைக் காட்டணும்னா பஸ் ஸ்டேண்டைத்தான காட்டணும்? அது மாதிரிதான் மதுரையில் சில அடையாளங்களைக் காட்டுறேன். நான் ஐந்து படம் எடுத்துருக்கேன். அதிலெல்லாம் காட்ட முடியாதா? யதார்த்தமாக நடப்பதெற்கெல்லாம் நான் என்ன பதில் சொல்ல முடியும்?"
முத்தையாவின் முழு பேட்டியை வீடியோ வடிவில் காண...