Skip to main content

“பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்” - விஜய் ஆண்டனி பேச்சுக்கு எதிர்ப்பு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
christian federation against vijay antony jesus speech issue

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ரோமியோ. விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் தனசேகர் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வெளியானது. அதில் முதல் இரவு காட்சியில் விஜய் ஆண்டனி கையில் சொம்பும் மிருணாளினி ரவி கையில் மதுவும் வைத்திருந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது. 

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் லவ் குரு என்ற தலைப்பில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, தலைவாசல் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் மேடையில் பேசி முடித்த பிறகு செய்தியாளர்களின் கேள்வி பதில் நடைபெற்றது. அப்போது விஜய் ஆண்டனியிடம், படத்தின் போஸ்டரில் கதாநாயகியின் கையில் மது இருப்பது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “குடி என்பது எல்லாருக்கும் ஒன்று தான். அதில் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை. ஆணுக்கு என்னவெல்லாம் இருக்கோ அது பெண்களுக்கும் உரித்தானது தான். அதற்காக குடியை ஆதரிக்கவில்லை. அதை சரி என்றும் சொல்லவில்லை. ஆனால் மது குடிப்பது தப்பு என்றால் அது இரண்டு பேருக்கும் பொருந்தும். 

christian federation against vijay antony jesus speech issue

அதுமட்டுமல்லாமல் ரொம்ப நாளாகவே குடி என்பது நம்ம ஊரில் இருக்கிறது. முன்பு சாராயம், திராட்சை ரசம் என்ற பெயரில் குடிச்சிட்டு இருந்தோம். இப்போ பார்களில் குடிக்கிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னாடியே ஜீசஸ் கூட குடிச்சிருக்கார். அதனால் குடி என்பது ரொம்ப நாளாகவே இருக்கு. சோமபானம் என்று ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலகட்டத்தில் கூட இருந்தது என நினைக்கிறேன். புராணங்களில் படிச்சதை வைத்து சொல்றேன். இப்போது அதற்கு பெயர் மட்டும் மாறிருக்கு” என்றார்.

christian federation against vijay antony jesus speech issue

இந்த நிலையில் தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு விஜய் ஆண்டனி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கூட்டமைப்பின் தலைவர் பிலிப் நெல்சன் லியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனிக்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பின் கடும் கண்டனம். உலகமெங்கும் வாழும் அனைத்து கிறிஸ்தவ பெருமக்களாலும், ஜாதி மதம் மொழிக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினராலும் போற்றப்படக்கூடியவர் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து. கிறிஸ்தவர்களையும் இயேசு கிறிஸ்துவையும் இழிவுபடுத்தும் விதமாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் திராட்சை ரசத்தை போதை வஸ்துக்கு ஒப்பிட்டு இயேசு கிறிஸ்து மது குடித்தார் என்று பொதுவெளியில் பேசி மாபெரும் கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்திய விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவர் வீட்டு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்